Published:Updated:

`அவர்கள் கையில் அதிகாரம் உள்ளது!’- ஒன்றிய கவுன்சிலர்களை சொகுசு விடுதியில் தங்க வைத்த தஞ்சை தி.மு.க

வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். என்னதான் இருந்தாலும் தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆளும் அ.தி.மு.க கட்சியினரைக் கண்டு ஓர் அச்சம் உள்ளது.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள் ( ம.அரவிந்த் )

`அ.தி.மு.க அரசிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதால் எங்க ஒன்றிய கவுன்சிலர்களை அத்து மீறி தூக்கிக்கொண்டு சென்று அவர்கள் கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும். அதேபோல் அவர்களை மிரட்டிப் பணியவைத்து அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்கவும் முடியும்’ எனக் கூறி தஞ்சாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒன்றிய கவுன்சிலர்களை தி.மு.கவினர் சொகுசு விடுதி ஒன்றில் தங்கவைக்கப்படுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த நிலையில் மாவட்ட சேர்மேன் மற்றும் ஒன்றிய சேர்மேன் பதவிகளைப் பிடிக்க வெற்றி பெற்றவர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூரில் வெற்றி பெற்ற தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட கவுன்சிலர்களை ஆளும் அதி.மு.கவினர் குதிரை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடக்கூடாது என்பதற்காக தி.மு.க நிர்வாகிகள் அவர்களை தனியார் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்தோம், `தஞ்சாவூர் மாவட்டத்தில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 12 ஒன்றியங்களை தி.மு.க கைபற்றியுள்ளது. மீதமுள்ள ஒன்றியங்களைக் கைப்பற்றவும் திரைமறைவில் பணிகள் நடைபெறுகின்றன. தஞ்சாவூர் ஒன்றியத்தில் மட்டும் மொத்தம் 29 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

வாக்காளர்கள்
வாக்காளர்கள்

இதில் தி.மு.க 18 இடங்களிலும், அ.தி.மு.க 11 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. வெற்றி பெற்றவர்கள் அனைவரும் இன்று பதவியேற்றுக்கொண்டனர். என்னதான் இருந்தாலும் தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆளும் அ.தி.மு.க கட்சியினரைக் கண்டு ஓர் அச்சம் உள்ளது. அதாவது தி.மு.க கவுன்சிலர்களின் வாக்குகளை அ.தி.மு.கவினர் குதிரை பேரத்தின் மூலம் விலைக்கு வாங்கி விடக் கூடாது என்ற பயம்தான். அதனால் இன்று தி.மு.க ஒன்றிய கவுன்சிலர்கள் பதவியேற்ற உடனேயே சொகுசு வேன் மூலம் அவர்களை ஏற்றிக்கொண்டு தஞ்சை பைபாஸ் சாலை விளார் அருகே உள்ள கிரீன் சிட்டி சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று விட்டனர்.

11 -ம் தேதி வரை இங்குதான் வைத்திருக்கப் போகிறார்கள் எனத் தெரிகிறது. தஞ்சை மாவட்டத்தில் இரண்டு ஒன்றியங்களைத் தவிர அனைத்திலும் அ.தி.மு.க தோல்வியடைந்திருக்கிறது. தஞ்சாவூர் ஒன்றியத்தை மட்டும் எப்படியாவது கைப்பற்றி விட முடியுமா என வைத்திலிங்கம் யோசித்து அதற்காகக் காய்களை நகர்த்தி வருகிறார். இதனால் தி.மு.கவினர் முந்திக்கொண்டு தங்கள் கட்சி ஒன்றிய கவுன்சிலர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்’ எனத் தெரிவித்தனர்.

தி.மு.க கவுன்சிலர்கள்
தி.மு.க கவுன்சிலர்கள்

தி.மு.க தரப்பில் பேசினோம், ``தேர்தலில் ஆளும்கட்சி அதிகாரம் இருக்கிறது என்பதால் எத்தனையோ அத்து மீறல்களைச் செய்தன. இதை எங்க தலைவர் ஸ்டாலின் சுட்டிக்காட்டிக் கொண்டே இருந்தார். அதேபோல் இப்போதும் எதாவது செய்து விட முடியுமா எனப் பார்க்கிறார்கள். அ.தி.மு.க அரசிற்கு அதிகாரம் இருக்கிறது என்பதால் எங்க ஒன்றிய கவுன்சிலர்களை அத்து மீறி தூக்கிக்கொண்டு சென்று 11ம் தேதி வரை கட்டுபாட்டில் வைத்திருக்க முடியும். அதேபோல் அவர்களை மிரட்டி பணியவைத்து அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க வைக்கவும் முடியும் என்பதால் இப்பவே நாங்க உஷாராக இருக்கிறோம். எங்களுடைய ஒன்றிய கவுன்சிலர்களை சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளோம். எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான்” என்றனர்.