Published:Updated:

`கணக்கு கேட்போம்; ஆர்.டி.ஐ மூலம் சரிபார்ப்போம்!’ - கிராம மக்கள் அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம்

ஊழல் நடைபெற்றது கண்டறியப்பட்டால், ஊழல் செய்தவர் பெயர், வகிக்கும் பதவி போன்றவை பொதுமக்கள் ஆதரவுடன் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும்.

கோவில்பட்டி
கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது லிங்கம்பட்டி ஊராட்சி. இங்கு 2,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 6 வார்டுகளில் 3 வார்டுகளில் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள 3 வார்டுகளில் உறுப்பினர் பதவிக்கு 8 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஊராட்சித் தலைவர் பதவிக்கு 7 பேர் போட்டியிடுகிறார்கள். இந்தக் கிராமத்தில் பொதுமக்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு போர்டு
அறிவிப்பு போர்டு

அதில், `லிங்கம்பட்டி ஊராட்சி மன்ற வேட்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்' என்று தலைப்பிடப்பட்டுத் தொடங்கும் அந்த அறிவிப்பில், ``லிங்கம்பட்டி ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை, ஊராட்சி வளர்ச்சிக்கு வரும் மக்கள் பணத்தை எடுத்துவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம்.

வருடம்தோறும் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் லிங்கம்பட்டி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு, செலவுக் கணக்கு கேட்டு அறியப்படும். கேட்டு அறியப்பட்ட அனைத்துத் தகவல்களும் சரியானதா எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி சரிபார்க்கப்படும். ஊழல் நடைபெற்றது கண்டறியப்பட்டால், ஊழல் செய்தவர் பெயர், வகிக்கும் பதவி போன்றவை பொதுமக்கள் ஆதரவுடன் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில்பட்டி ஊ.ஒ.அலுவலகம்
கோவில்பட்டி ஊ.ஒ.அலுவலகம்

இதுகுறித்து ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம், ``ஒரு ஊராட்சி மன்றத் தலைவரால் ரூ.3 லட்சம் வரை யாருடைய ஒப்புதலும் இல்லாமல் பணம் எடுக்க முடியும். ஒவ்வொரு கிராமதுக்கும் 3 முதல் 5 வங்கிக் கணக்குகள் உள்ளன.

மத்திய, மாநில அரசுகள் ஊராட்சியின் வளர்ச்சிக்காக வழங்கும் நிதி, திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு என அந்த வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். இவை ஊராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரால் எடுக்க இயலும். தேர்தல் முடிந்ததும் புதிய தார்ச்சாலை, சிமென்ட் சாலை போடுவார்கள். அதன் ஒப்பந்தக்காரர் பெரும்பாலும் ஊராட்சி தலைவர் அல்லது அவரின் உறவினராக இருப்பார்கள்.

கோவில்பட்டி
கோவில்பட்டி

இதுதவிர, புதிய வீடு கட்டுபவர் பிளான் அப்ரூவல் உள்ளிட்ட பல தேவைகளுக்கும் ஊராட்சி தலைவர்தான் ஆல் இன் ஆல். இதனால்தான், முதல் முறை தலைவர் பதவிக்கு வருபவர், அந்தப் பதவிக்காலம் முடிவதற்குள் பெரும் வசதி படைத்தவர் ஆகிவிடுகிறார். இதைத் தடுக்கவும், கண்காணிக்கவுமே இந்த அறிவுப்பு பலகை” என்றனர். இந்த அறிவிப்பால் வேட்பாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.