Published:Updated:

`அ.தி.மு.க ஆதரவு அதிகாரிகள் பட்டியல்; ஓராண்டில் தி.மு.க ஆட்சி!’- எ.வ.வேலு சர்ச்சை பேச்சு

எ.வ.வேலு
எ.வ.வேலு

நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராகவும், அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகவும் செயல்படும் அரசு அதிகாரிகளின் கை உடைக்கப்படும் என்று தி.மு.க முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்றத் தொகுதியில், ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம், ஆரணி அடுத்த ராட்டினமங்கலம் பகுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க உயர்மட்டக் குழு உறுப்பினரும் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ-வுமான எ.வ.வேலு கலந்துகொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

எ.வ.வேலு
எ.வ.வேலு

அப்போது அவர் பேசுகையில், ``இந்தத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுவிடலாமென்ற எண்ணத்தில் ஆளும் அ.தி.மு.க அரசு பல்வேறு குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி வருகிறது. அந்தக் குறுக்கு வழியெல்லாம் இப்போது பலிக்காது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுவதாக அடிக்கடி புகார்கள் வருகிறது. ஆளும் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாகவும், தி.மு.க கட்சிக்கு எதிராகவும் அதிகாரிகள் செயல்படுவதாகவும் தகவல் வருகிறது. அப்படிச் செயல்படும் அரசு அதிகாரிகளின் கை உடைக்கப்படும். ஆட்சியில் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு இந்தத் தேர்தலில் அ.தி.மு.க கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் கை உடைக்கப்படும். அப்படி கை உடைக்கப்பட்டவர்கள் எங்கள் மீது வழக்கு தொடர்ந்தால், அந்த வழக்கைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம். அரசு அதிகாரிகளுக்கு ஓர் எச்சரிக்கை விடுகிறேன். `எவனெவன்னெல்லாம் உள்ளாட்சித் தேர்தலிலே தவறு செய்கிறீர்களோ, யாரெல்லாம் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தவறுகள் செய்து, அடிபணியலாம் என்று நினைக்கின்றீர்களோ அவர்களுடைய பட்டியல் தயார் செய்யப்படும்.

`பின்வாங்கிய அ.தி.மு.க; பட்டாசு வெடித்த தி.மு.க!' - குத்தாலம் உள்ளாட்சி கலாட்டா

ஓராண்டு காலத்துக்குப் பிறகு தி.மு.க ஆட்சியைப் பிடிக்கப்போகிறது. அப்போது அந்தப் பட்டியலில் உள்ளவர்களின் நிலை என்னவாகும் என்று அவர்களுக்குத் தெரியும். வாழ்கையில் யோசித்துக்கூடப் பார்க்க முடியாத நிலை ஏற்படும். தி.மு.க ஆட்சிக்கு வந்த மறுநாளே, அந்த அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும். அது என்ன வழக்கு என்று இப்போது சொல்லமாட்டேன். ஆகவே, அ.தி.மு.க-வுக்கு அடிபணியாமல் நியாயமாகத் தேர்தலில் செயல்படுங்கள்” என்றார். எ.வ வேலுவின் பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. இவரின் இந்த பேச்சு அரசு அதிகாரிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு