Published:Updated:

`உள்ளே ஆட்கள் இருக்கிறார்கள்!’ - சீர்காழியில் வாக்கு எண்ணும் மையம் மீது கல்வீச்சு, பரபரப்பு

கல்லூரியில் கல் வீச்சு
கல்லூரியில் கல் வீச்சு

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சீர்காழி தனியார் கல்லூரியில் ஆளும்கட்சிக்குச் சாதகமாக முறைகேடு நடப்பதாகச் செய்தி பரவியதால் எதிர்க்கட்சியினர் கல் வீச்சில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 37 பஞ்சாயத்துகள் உள்ளன. இந்தப் பஞ்சாயத்துகளில் 192 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

கல்லூரியில் கல் வீச்சு
கல்லூரியில் கல் வீச்சு

வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதன் பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான சீர்காழி விவேகானந்தா மகளிர் கல்லூரிக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு வாக்குப் பெட்டிகளை அறையில் வைத்து அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கும் போது தி.மு.கவினர் அழைக்கப்படவில்லை என்றும், அ.தி.மு.கவினரை மட்டுமே வைத்து சீல் வைத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் சீர்காழியை அடுத்த காவேரிபூம்பட்டினம், வாணகிரி போன்ற கிராமங்களிலிருந்து வந்த வாக்குப்பெட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த வாக்குச் சாவடி பற்றிய விவர சீட்டுகளைக் கிழித்து கல்லூரி வாசலில் வீசப்பட்டுக் கிடந்ததை தி.மு.கவினர் கைப்பற்றினர். இதை எடுத்துக்கொண்டு வாக்குப் பெட்டியை அ.தி.மு.கவினர் மாற்றி விட்டதாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்லூரியில் கல் வீச்சு
கல்லூரியில் கல் வீச்சு

அப்போது அங்கு வந்த சீர்காழி டி.எஸ்.பி வந்தனாவிடம் தி.மு.கவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றி கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டு நிலவரம், கலவரமானது. திடீரென்று உள்ளே ஆட்கள் இருப்பதாகக் கூறி அங்கிருந்தவர்கள் கல்லூரியின் பின்புறம் ஓடினார்கள். கல்லூரி ஜன்னல் கண்ணாடிகளை கல் வீசி உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை ஆர்.டி.ஓ மகாராணி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அடுத்த கட்டுரைக்கு