Published:Updated:

`என் மருமகளைப் போல மக்களுக்குச் சேவை செய்வேன்!' - ஊராட்சித் தலைவரான 82 வயது நல்லம்மாள் உறுதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
நல்லம்மாள்
நல்லம்மாள் ( எம். விஜயகுமார் )

என் மருமகள் மல்லிகா ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது இந்த ஊராட்சிக்குத் தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவறை என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்தார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக 82 வயது மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வானார். அதே புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக கடந்த முறை அவரின் மருமகள் மல்லிகா இருந்தார். தற்போது மாமியார் அதே ஊராட்சி மன்றத் தலைவராக நாளை பதவியேற்க இருக்கிறார்.

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அ.தி.மு.க ஒன்றிய பொருளாளராக இருப்பவர் ஈஸ்வரன். இவர் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சியில் வசித்து வருகிறார். இவரின் மனைவி மல்லிகா கடந்த முறை புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். சமீபத்தில் அவர் உடல் நிலை சரியில்லாமல் மரணமடைந்தார். அதையடுத்து, இந்த முறை 82 வயதான ஈஸ்வரனுடைய அம்மா நல்லம்மாள் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

இவரை எதிர்த்து யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யாததால் அந்த ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளுக்கான உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் நாளை பதவியேற்க இருக்கிறார்கள்.

நல்லம்மாள்
நல்லம்மாள்
எம். விஜயகுமார்

இந்த நிலையில் நல்லம்மாளிடம் பேசியபோது, ``என்னுடைய கணவர் பெயர் செட்டியண்ண கவுண்டர். அவர் இறந்துவிட்டார். எனக்கு லட்சுமி என்ற மகளும், ஈஸ்வரன் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. என் மகன் ஈஸ்வரனோடு வசித்து வருகிறேன். என் மகன் ஈஸ்வரன் ஒப்பந்ததாரராக இருக்கிறார். என் மருமகள் பெயர் மல்லிகா. அவர் கடந்த முறை இதே ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். அவர் உடல் நிலை சரியில்லாமல் 3 மாதத்துக்கு முன்பு இறந்துவிட்டார்.

என் மருமகள் மல்லிகா ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தபோது இந்த ஊராட்சிக்குத் தேவையான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிவறை என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுத்தார். அவர் செய்த சேவையின் காரணமாக எங்க ஊராட்சியில் என்னை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. தற்போது எனக்கு 82 வயதாகிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் என் மருமகளைப்போல நானும் மக்களுக்குச் சேவை செய்வேன். பதவியேற்ற பிறகு ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்டு, தீர்த்து வைப்பேன்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு