Published:Updated:

`ரெண்டு கை இருக்கிறவங்களுக்கே அந்த நேர்த்தி வராது!’ - ஒற்றைக் கையில் பிள்ளையார் செய்யும் பாண்டி

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

மண்பாண்டம் செய்றவங்களுக்கு, முதுகு ரொம்ப வலிக்கும். என் அப்பாவுக்கு முதுகு ரொம்ப வளைஞ்சுப்போச்சு. ஆனாலும் அவருக்கு இந்தத் தொழிலை விட மனசில்லை.

பாண்டி
பாண்டி ( சாய்தர்மராஜ் )

’குறை, உடலுக்குத்தான் மனதிற்கு இல்லை’ என்பது போல் அசாத்திய திறமையுடன் களிமண்ணைப் பிசைந்து சிலைகளை வடிவமைத்துக்கொண்டிருந்தார், பாண்டி. ஒரு பக்கம் இளையராஜா பாடல்கள் ரேடியோவில் இழைந்து கொண்டிருந்தது. பெண்கள், ஆண்கள் என அந்தத் தெருவே மண்பாண்டங்களை அழகுபடுத்தியது. இன்னொரு பக்கம் மண்பாண்டப் பொருள்களை நெருப்பில் சுடும் வாசம் வந்தது. இடது கையில் களிமண்ணை எடுத்து, வலது கையில் விநாயகர் சிலையை வார்த்துக்கொண்டிருந்தார், பாண்டி.

மானாமதுரை பாண்டி
மானாமதுரை பாண்டி
சாய்தர்மராஜ்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, மண்பாண்டப் பொருள்களுக்குப் பெயர்பெற்றது. வைகை நதி பாயும் இந்த வளமான மண்ணில், செய்யும் மண்பாண்டப் பொருள்களை வெளிநாட்டுப் பயணிகளும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். இங்கு செய்யப்படும் கடம், முன்னணி இசைக் கலைஞர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கு உள்ள குலாலர் தெருவில் மண்பாண்டத் தொழில் செய்துவரும் மாற்றுத்திறனாளி பாண்டியைச் சந்தித்தோம்.

என் பெயர் பாண்டியராஜன். மானமதுரையில் நான்கு தலைமுறையாக மண்பாண்டத் தொழில் செய்றோம். 12 வரைக்கும் படிச்சிருக்கேன். சின்ன வயசுலேயே மண்பாண்டத் தொழிலை ஆர்வத்தோட கத்துக்கிட்டேன். இதை ஒரு கலையாகத்தான் பார்க்கிறேன். எனக்கு இடது கை பாதிதான். பிறவியிலேயே அப்படித்தான். அதனால், பெருசா எனக்கு கஷ்டம் தெரியாது.

மண்பாண்டங்கள்
மண்பாண்டங்கள்
சாய்தர்மராஜ்

பார்ப்பவர்களுக்குத்தான் கஷ்டமாகத் தெரியும் போல. முழுமையாகக் கை இல்லைனாலும், என்னுடைய கைக்கான தொழிலைத்தான் செய்றேன். அப்பாவும் அண்ணனும் இதே தொழிலைத்தான் செய்றாங்க. சீஸனுக்கு ஏத்தமாதிரி மண்பாண்டப் பொருள்கள் செய்றோம். இப்போ, பிள்ளையார் சதுர்த்திக்காக பிள்ளையார் சிலைகள் செய்கிறோம். சாமி சிலைகள், விளக்குகள், புரவி, பொம்மை, அடுப்பு, முளைப்பாரி சட்டி, உண்டியல், பானை, ஊறுகாய் ஜாடி என்று எல்லாப் பொருள்களும் செய்வோம்.

கஷ்டமர் ஆர்டர் கொடுத்தால், அவர்களுக்கு விரும்பிய பொருளை செய்துகொடுப்போம். காலைல 3 மணிக்கே வேலைக்கு வந்துவிடுவோம். அப்பத்தான் மண் குழைக்க சரியா இருக்கும். வெயிலுக்கு முன்னமே ரெடி பண்ணிட்டா நல்லது. களிமண், குறுமணல் உள்ளிட்ட மூலப் பொருள்கள்தான் சேர்ப்போம். அதனால், சுகாதாரக் கேடு இருக்காது. சிலைக்கு கலர் கொடுத்தாலும் வாட்டர் கலர்தான் கொடுப்போம். சிலையைத் தண்ணிக்குள்ளே போட்ட சில மணி நேரத்திலேயே அது மண்ணா மாறிடும்.

மண்பாண்டங்கள்
மண்பாண்டங்கள்
சாய்தர்மராஜ்

எங்களுக்கு போட்டியா வட மாநிலத்துக்காரங்க கெமிக்கல் சிலைகள் செஞ்சாலும், எங்களுக்குனு தனி மவுசு இருக்கத்தான் செய்யுது. சிலைகள் மட்டும்தான் தனியா, வெளிய பேசிச் செய்வோம். மத்த பொருள்களை மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டி மூலமாதான் வியாபாரம் செய்வோம். 1 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கினா, அதுக்கான பொருள்களை, சொசைட்டிக்கு செஞ்சு கொடுப்போம்.

கூட்டுறவு சொசைட்டி ரொம்ப உதவியா இருக்கு. முன்னவிட இப்ப மண்பாண்டத் தொழில் அமோகமா இருக்கு. மக்கள் மண்பாண்டப் பொருள்களை விரும்பி வாங்குறாங்க. விற்பனை நல்லா இருக்கு. ஆனால், மண்பாண்டப் பொருள்கள் செய்ய குறுமணல்தான் தட்டுப்பாடா இருக்கு.

இந்த வேலைலயே சுட்டி விளக்கு செய்றதுதான் ரொம்ப சிரமம். அது, நுணுக்கமான வேலை. அதைச் செய்ய கத்துக்கிட்டா போதும், ஓரளவுக்கு எல்லா பொருளும் செய்ய ஆரம்பிச்சிடலாம்.

தண்ணீர் ஜாடி
தண்ணீர் ஜாடி
சாய்தர்மராஜ்

பார்க்கிறதுக்கு ஈஸி மாதிரி தெரியும். ஆனா, புது கைக்கு சுத்தமா வராது. மண்பாண்டம் செய்றவங்களுக்கு, முதுகு ரொம்ப வலிக்கும். என் அப்பாவுக்கு முதுகு ரொம்ப வளைஞ்சுப்போச்சு. ஆனாலும் அவருக்கு இந்தத் தொழிலை விட மனசில்லை. போதுமான வருமானம் வருது. சந்தோஷமாகத்தான் தொழில் செய்கிறேன். நல்ல பொருளை விக்கிறோம்கிற மன திருப்தியும் இருக்கு. மண்பாண்டப் பொருள்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமான விஷயமும்கூட. மண்பானைத் தண்ணீர் குடிக்கும் எனக்கு, இதுவரை சளி பிடிச்சதில்லை.

எங்க பாட்டி 102 வயது வரைக்கும் வாழ்ந்தார். அவர், கடைசி வரை மண்பானைத் தண்ணீதான் குடிச்சார். இருந்த வரைக்கும் நல்ல தெம்பாகத்தான் இருந்தார். அதனால் நீங்களும் மண்பாண்டப் பொருள்களைப் பயன்படுத்துங்க!” என்றபடி விநாயகர் காதை சரிசெய்தார்.

பாண்டியின் அம்மா மீனாட்சி
பாண்டியின் அம்மா மீனாட்சி
சாய்தர்மராஜ்

பாண்டியின் அம்மா மீனாட்சி, ”எனக்கு 2 பையன், 2 பொண்ணு. எல்லாரையும் கரை சேர்த்துட்டேன். பாண்டிக்கு, அவன் அக்கா மகளையே கல்யாணம் பண்ணிவச்சுட்டேன். இப்ப அவன் குழந்தைக்கும் 2 வயசாயிடுச்சு. பிறக்கும்போது பாண்டி எப்படிதான் பிழைக்கப் போறானோனு நினைச்சேன். இப்ப எங்கள அவன்தான் பிழைக்கவைக்கிறான்.

மண்பானை செய்றதுல அவன் பயங்கர கெட்டி. கட்டி மண்ணா இருந்தாலும், பச்ச மண்ணா மாத்திடுவான். களிமண்ணு அவன் சொல்பேச்சு கேக்கும். எங்க வீட்டுல மண்பானை சமையல்தான். மீன் குழம்பு வச்சா ருசி அப்புடி இருக்கும்” என்றார்.

மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு தொழிற்சங்க தலைவர் லெட்சுமணன், ``மண்பாண்டப் பொருள்களைக் கொண்டுவந்து விற்பனை செய்யும்வரை. தாயின் வயிற்றில் குழந்தை இருப்பது போலத்தான். மிகவும் பக்குவமாகப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், ஒவ்வொரு பொருளுக்கும் மெனக்கெடுவது அவ்வளவு கடினமானது. அந்த விஷயங்களில், மண்பாண்டத் தொழிலாளி பாண்டியைக் கண்டு எத்தனையோ நாள் வியந்திருக்கிறேன். மானாமதுரையில், 500-க்கும் மேற்பட்ட  மண்பாண்டத் தொழிலாளர்கள் வேலை செய்தாலும், மிக நேர்த்தியாகச் செய்யும் தொழிலாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

லெட்சுமணன்
லெட்சுமணன்
சாய்தர்மராஜ்

பாண்டிக்கு முழுமையாகக் கைகள் இல்லை என்றாலும். அதைப் பற்றி கவலைப்படாமல், ஓவியமாகச் செய்வார். என்னால்கூட அவ்வளவு நேர்த்தியாக வேலை செய்ய முடியாது. பாண்டி, சிலை செய்யும் விதம் தனி. கார்த்திகை சுட்டி போடும் விதம் கொள்ளை அழகு. பாத்துக்கிட்டே இருக்கலாம். பாண்டி எப்படி வேலை செய்வார் என்று என்னிடம் கேட்டால், `ரயில் வேகம் அல்ல ஃபிளைட் வேகம்’ என்பேன்” என்று புன்னகைத்தார்.

பாண்டியை திரும்பிப் பார்த்தேன். பிள்ளையார் சிலையின் கண்களைத் திறக்க, பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தது அந்தக் `கை!’