Published:Updated:

`கிளம்புங்க.. வர்ற எம்.எல்.ஏ தேர்தல்ல வாக்களிச்சுக்கலாம்!’- கரூர்ப் பெண்களைப் பதறவைத்த அதிகாரிகள்

அமுதா, நதியா
அமுதா, நதியா

விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு, வாக்குச்சாவடிக்கு மாலையில் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டும் வாக்களிக்க மறுக்கப்பட்டதால், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கரூர் மாவட்டத்தில் நேற்று ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது, கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சிப் பகுதியில் உள்ள செட்டியபட்டி அரசு துவக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேருக்கு 5 மணி அளவில் டோக்கன் வழங்கப்பட்டும், இறுதி நேரத்தில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

அதில் அமுதா (வயது 27), நதியா (வயது29) ஆகிய இருவரும், கடவூர் அருகே உள்ள விவசாய நிலத்தில் கூலி வேலை செய்து விட்டு, பேருந்து மூலம் வீடு திரும்பினர். மாலை சுமார் 4.45 மணிக்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்ற அவர்களுக்கு அதிகாரிகளால் டோக்கன் வழங்கப்பட்டது. `ஜனநாயக கடமையை ஆற்றப்போகிறோம்' என்ற மகிழ்ச்சியில் இருந்த அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்கள் அதிகாரிகள். அதாவது, சிறிது நேரம் கழித்து வாக்குப் பதிவு நேரம் முடிந்துவிட்டதாகக் கூறி வாக்களிக்க வாக்குச்சாவடி மைய அதிகாரி அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

`4,905 வேட்புமனுக்கள்; களத்தில் கோடீஸ்வர வேட்பாளர்கள்!’- களைகட்டும் கரூர் உள்ளாட்சித் தேர்தல்

சரியாக 5 மணிக்கு வாக்குப்பதிவு முடித்த வாக்கு மைய அதிகாரி, மதியம் உணவு இடைவேளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, 5 மணிக்கு மேல் காலநீட்டிப்பு வழங்கப்பட்டு இருக்க வேண்டுமென செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களிலும் அரசு நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்குக் கரூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவிற்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

ஆனால், தினந்தோறும் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்து வரும் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி எந்த விடுமுறையும் அளிக்கப்படுவதில்லை. தேர்தல் நடந்த நாளில்கூட வறுமையின் காரணமாகப் பணிக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்ததாக வாக்களிக்க மறுக்கப்பட்ட பெண்கள் இருவரும் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்தி, நம்மிடம் பேசிய அமுதா மற்றும் நதியா இருவரும், ``எங்க குடும்பங்கள் வறுமை நிலையில் உள்ளன. `அன்றாடம் வேலைக்குப் போனாதான் சாப்பாடு' என்ற நிலைமை. எங்க பகுதியே வறட்சி நிறைந்த பகுதி என்பதால், தினமும் வேலை கிடைப்பது கஷ்டம். அரசின் 100 நாள் வேலைத்திட்டம் மூலமாகக் கிடைத்த வேலையும் இப்போதும் இல்லை. அங்கங்கே தனியார் பண்ணைகளில் கிடைக்கும் வேலைகளைப் பார்த்து, அதில் வரும் சொற்ப வருமானத்தை வைத்துதான், எங்க பொழப்பை ஓட்டுறோம். அப்படிதான், நேற்று எங்களுக்கு ஒருத்தர் வேலை கொடுத்தார்.

அமுதா, நதியா
அமுதா, நதியா

அதனால், நாலு மணி வரைக்கும் வேலை பார்த்துட்டு, பிறகு வந்து ஓட்டுப்போட்டுக்குவோம்னு நினைச்சோம். அதன்படி, நாலு மணிவரை வேலை பார்த்துட்டு, அதன்பிறகு பஸ் பிடிச்சு அவசரம் அவசரமாக வாக்களிக்க வந்தோம். அப்போ மணி 4.45. எங்களுக்கு அதிகாரிகள் வாக்களிக்க டோக்கனும் கொடுத்தாங்க. மகிழ்ச்சியா வாக்களிக்கப் போனப்போ, 'மணி 5 ஆயிட்டு. வாக்களிக்கும் நேரம் முடிந்துவிட்டது. வர்ற எம்.எல்.ஏ எலெக்ஷன்ல வாக்களிச்சுக்கலாம்'னு சொல்லி, எங்களை அனுப்பிட்டாங்க. வாக்களிக்க முடியவிலையேனு சோகமா வீட்டுக்குப் போனோம்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு