Published:Updated:

`சொந்த கிராமத்தில் தோல்வியைத் தழுவிய தி.மு.க வேட்பாளர்கள்!' - கலக்கத்தில் குளித்தலை எம்.எல்.ஏ

ராமர் எம்.எல்.ஏ
ராமர் எம்.எல்.ஏ ( நா.ராஜமுருகன் )

`தனது அண்ணன் மகளை ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கியே தீருவது' என்று ராமர் கடுமையாக பிரசாரம் செய்தார். ஆனால், சுதாவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவருடைய மனைவி பாப்பாத்தியம்மாள் போட்டியிட்டு, 1053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

குளித்தலை சட்டமன்றத் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராமரின் சொந்த ஊரான பாதிரிப்பட்டி-பில்லூர் 13வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கும் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர்களும், மாவட்ட ஊராட்சி 6-வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் மனைவி ஆகியோர் தோல்வியை அடைந்துள்ளது, ராமருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமர் எம்.எல்.ஏ
ராமர் எம்.எல்.ஏ
நா.ராஜமுருகன்

கடந்த டிசம்பர் 27 மற்றும் 30-ம் தேதிகளில் தமிழகம் முழுக்க உள்ள 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தொடர்ந்து, கடந்த 2 மற்றும் 3-ம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகம் முழுக்க பெரும்பான்மையாக தி.மு.க வெற்றிகளைக் கைப்பற்றியது.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

ஆனால், அதற்கு நேர்மாறாக கரூர் மாவட்டத்தில், அ.தி.மு.க 8 ஒன்றியங்களையும், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியையும் கைப்பற்றி, கரூர் மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த நிலையில், குளித்தலை சட்டமன்ற உறுப்பினரான ராமரின் சொந்த ஊரிலும் தி.மு.க வேட்பாளர்கள் தோல்வியடைந்திருக்கிறார்கள். கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள பாதிரிப்பட்டிதான் ராமரின் சொந்த ஊர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தோகைமலையைச் சேர்ந்தவர்கள் சிலர்,``தோகைமலை ஒன்றியத்தில் 15 ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் உள்ளன. இதில், தி.மு.க சார்பில் 14 வார்டுகளில் நேரடியாகவும், கழுகூர்-சின்னையம்பாளையம் 1 வது வார்டில் சுயேச்சை வேட்பாளருக்கு தி.மு.க ஆதவளித்தும் போட்டியிட்டனர். இதில், 4 வார்டுகளில் மட்டும் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை தி.மு.க கைப்பற்றியது. அதோடு, குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ ராமரின் சொந்த ஊரான பாதிரிப்பட்டி 13 வது வார்டில் தி.மு.க சார்பில் பள்ளிப்பட்டியை சேர்ந்த கருப்பையா என்பவர் போட்டியிட்டார். பில்லூர் தி.மு.க ஊராட்சி செயலாளர் ராகவன் தி.மு.க சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அவர் அதிருப்தியில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார். இதேபோன்று, அ.தி.மு.க சார்பில் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் போட்டியிட்டார். இதில், அ.தி.மு.க வேட்பாளர் 71 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

இதன் மூலம், தி.மு.க எம்.எல்.ஏ ராமரின் சொந்த ஊரில் அக்கட்சி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். பாதிரிப்பட்டி 13 வது வார்டில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கருப்பையா, தி.மு.க அதிருப்தி சுயேச்சை வேட்பாளர் ராகவன், அ.தி.மு.க வேட்பாளர் முருகேசன் ஆகிய மூவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தோகைமலை பகுதி மாவட்ட ஊராட்சி 6-வது வார்டில் தி.மு.க சார்பில் பொதுக்குழு உறுப்பினர் அண்ணாத்துரை என்பவரின் மனைவி ஈஸ்வரி போட்டியிட்டார். அ.தி.மு.க சார்பில் ஒன்றிய ஜெ பேரவைச் செயலாளர் பழனிசாமி என்பவரின் மனைவி வசந்தா போட்டியிட்டார். தேர்தல் முடிவில், அ.தி.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றார்.

Vikatan

இதிலும், தி.மு.க பொதுக்குழு உறுப்பினர் மனைவி மற்றும் தி.மு.க வேட்பாளர் தோல்வியடைந்தார். இதனால், `தோகைமலை ஒன்றியத்தில் தி.மு.க செல்வாக்கு இழந்துவிட்டதாக' கூட்டணிக் கட்சியினர் கவலையுடன் தெரிவித்தனர். இதேபோன்று, ராமரின் சொந்த ஊரான பாதிரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு, குளித்தலை ராமரின் அண்ணனும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ரெங்கரின் மகள் சுதா போட்டியிட்டார். `தனது அண்ணன் மகளை ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கியே தீருவது' என்று ராமர் கடுமையாக பிரசாரம் செய்தார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை
நா.ராஜமுருகன்

ஆனால், சுதாவை எதிர்த்து அ.தி.மு.க கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க ஒன்றியச் செயலாளர் சக்திவேல் என்பவருடைய மனைவி பாப்பாத்தியம்மாள் போட்டியிட்டு, 1,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால், எம்.எல்.ஏ ராமர் ஊரில் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்டக் கவுன்சிலர் என எல்லா பதவிகளையும் தி.மு.க இழந்துவிட்டது. 'எம்.எல்.ஏ ஊரிலேயே தி.மு.க இப்படி ஆயிட்டே'னு தி.மு.க-வினர் புலம்பி வருகிறார்கள்" என்றார்கள்.

அடுத்த கட்டுரைக்கு