Published:Updated:

"நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம்!" - வீடுகள் இடிக்கப்பட்ட மஞ்சள் மேடு மக்கள் கண்ணீர்

மதுரை மக்கள்
மதுரை மக்கள்

"நாங்கள் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது. அதனால்தான் எங்களின் கடமையைச் செய்கிறோம்" என்கிறார்கள் அதிகாரிகள்.

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையதுக்குப் பின்புறம் உள்ள மஞ்சள்மேட்டில், குடிசைமாற்று வாரியத்தின் 3 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இவை கூலித் தொழிலாளர்களுக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் ஒதுக்கப்பட்ட வீடுகள். தற்போது "'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ் இந்த வீடுகளைப் புதுப்பித்து தருகிறோம், அதனால் காலி செய்ய வேண்டும்'' என அரசு கூறியுள்ளது. ஆனால், வீடுகளைக் காலி செய்தால் தங்குவதற்கு வேறு இடம் இல்லை என அப்பகுதி மக்கள் காலி செய்யாமல் அதே வீடுகளில் வசித்து வந்தனர். இந்த நிலையில், இன்று காலையில் வீடுகளில் உள்ள மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சிறிது நேரத்தில் ஜே.சி.பி எந்திரத்தின் துணையோடு வீடுகளை இடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அதிகாரிகள்.

ஆறுமுகம்
ஆறுமுகம்
`கழிவறையில் ஸ்பை கேமரா; ஹார்டுடிஸ்க்கில் ஆபாச வீடியோ!' - ஐ.டி.ரெய்டில் சிக்கிய சென்னை கணக்காளர்

''நாங்கள் 300 குடும்பங்கள் இப்பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு இருப்பவர்கள் அனைவரும் அன்றாடக் கூலி வேலை செய்பவர்கள். வீடுகளைப் புதுப்பித்துத் தருகிறோம் என அரசு கூறியது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், புதுப்பிக்கும் வரை வெளியில் வாடகைக்குத் தங்கும் அளவுக்கு எங்களிடம் வசதி இல்லை. குறைந்தபட்ச வாடகையே 3,000 இருக்கும் சூழ்நிலையில் அரசு ஆணை எண் 332/200-ன் படி எங்களுக்கு ரூபாய் 8,000 கருணை தொகையாக தந்து உதவக் கேட்டோம். இல்லாதபட்சத்தில் வேறு இடத்தில் தற்காலிகமாக இடம் ஒதுக்கித் தந்தால் அங்கே குடிசை அமைத்துத் தங்கிக்கொள்கிறோம் என்றும் கூறினோம். ஆனால், எங்கள் கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.

மேலும், 300 வீடுகளாக இருக்கும் இப்பகுதி புதிய திட்டத்தின் அடிப்படையில் 320 வீடுகளாக வர உள்ளன. புதிதாகச் சேர்க்கவிருக்கும் 20 வீடுகள் எங்கள் தேவைக்கு அதிகமாக இருப்பதால், அதன் மூலம் ஊழல் நடக்க வாய்ப்புள்ளது. அந்தப் புதிய 20 வீடுகளை அதிகாரிகள் அவர்களின் வேண்டியவர்களுக்கோ, பணத்தைப் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட நபர்களுக்கோ வீடுகளை ஒதுக்க வாய்ப்புள்ளது. எனவே, கூடுதலாகக் கட்டவிருக்கும் 20 வீடுகளை வேண்டாம் என்கிறோம். நாங்கள் காலி செய்யாமல் இருந்ததால் அதிகாரிகளின் அதிகாரத்துக்கு இணங்க மாநகராட்சியிலிருந்து துப்புரவுப் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக இப்பகுதியை சுத்தம் செய்யவில்லை. இன்று காலை மின் இணைப்பையும் துண்டித்துவிட்டனர். நான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து பார்த்தபோது, ஜே.சி.பி-யை வைத்து வீடுகளை இடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இப்போது நாங்கள் நடுத்தெருவில் நிற்கிறோம் எங்கே போவது எனத் தெரியவில்லை'' எனக் கலங்குகிறார் அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்.

குடியிருப்பு
குடியிருப்பு

இதுதொடர்பாகக் குடிசை மாற்று வாரிய அதிகாரி முனியசாமியிடம் பேசினோம்,

''அம்மக்களின் நலன் கருதியே அவர்களின் வீடுகளை அரசு புதுப்பித்துத் தருகிறது. 200 அடியாக தற்போது உள்ள ஒரு வீடு 400 அடியாக வரவுள்ளது. மேலும், மூன்று அடுக்கு மாடியாக இருக்கும் அப்பகுதி நான்கு அடுக்கு மாடியாகவும் மாறவுள்ளது. உதவித் தொகை பெறுவது தொடர்பாக மதுரை கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள். அவ்வழக்கை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.

மஞ்சள்மேட்டுப் பகுதியுடன் ஆத்திகுளம் குடிசை மாற்று வாரிய பகுதியிலும் வீடுகளைப் புதுப்பிக்க உள்ளோம். அப்பகுதியில் தற்போது 304 வீடுகள் உள்ளன. புதுப்பிக்கும் திட்டத்தில் 320 வீடுகளாக மாற உள்ளன. இது அரசு போட்டிருக்கும் கான்ட்ராக்ட் பிளான். ஒரு மாடி கூடுதலாகக் கட்ட இருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை கூடுகிறது. கூடுதலாக கட்டவிருக்கும் வீடுகளில் கண்பார்வை இல்லாதவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடு இல்லாதவர்கள் வர வாய்ப்புள்ளது. நாங்கள் கொடுத்த அவகாசம் முடிந்துவிட்டது. அதனால்தான் எங்களின் கடமையைச் செய்கிறோம்'' என்றார் அவர்.

குடியிருப்பு
குடியிருப்பு
`25 பைசாவுக்குப் பிரியாணி வாங்கிய 200 பேர்!’ -வேலூர் மக்களை ஆச்சர்யப்படுத்திய ஹோட்டல்

மக்களின் நலனுக்காகவே இந்தத் திட்டம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இந்த வீடுகளைக் காலி செய்தால் எங்களுக்கு வேறு வழியில்லை எனும் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளி, அவர்களை நிர்கதியாக நிற்கவிட்டு பின் எதற்காக, யாருக்காக இந்தத் திட்டம் என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வியாக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு