Published:Updated:

`நாளை ஆஜர்படுத்த வேண்டும்; தவறினால்..!’ - முதுகுளத்தூர் தி.மு.க கவுன்சிலர் வழக்கில் உயர் நீதிமன்றம்

ஒன்றிய தலைவர் பதவியைக் கைப்பற்ற பிரதான கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் அ.ம.மு.க கவுன்சிலர் முருகன் ஒன்றிய தலைவராக முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

 மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம் ( விகடன் )

அ.தி.மு.க-வினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் 8-வது வார்டு திருவரங்கம் தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் சாத்தையாவை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும், தவறும் பட்சத்தில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 மதுரை உயர் நீதிமன்றம்
மதுரை உயர் நீதிமன்றம்
விகடன்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க தலா 4 வார்டுகளில் வென்றனர். எஞ்சிய 7 வார்டுகளில் அ.ம.மு.க வேட்பாளர் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்த முருகன் உள்ளிட்ட 7 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்ற பிரதான கட்சிகளான அ.தி.மு.க, தி.மு.க-வுக்கு பெரும்பான்மை இல்லை. இதனால் சுயேச்சை உறுப்பினர்கள் ஆதரவுடன் அ.ம.மு.க கவுன்சிலர் முருகன் ஒன்றியத் தலைவராக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கு தி.மு.க கவுன்சிலர்களும் மறைமுக ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அ.தி.மு.க-வின் முன்னாள் மாவட்டச் செயலாளரான தர்மர் ஒன்றியத் தலைவராகும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் தந்தை சாத்தையா சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் 8 வது வார்டு திருவரங்கத்தில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 3-ம் தேதி காலை 5 மணியளவில் நண்பர்களை சந்திப்பதற்காக வெளியில் சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தொலைபேசிக்கு என் தாய் தொடர்பு கொண்டார். அப்போது, அ.தி.மு.க-வைச் சேர்ந்த தர்மர் உள்ளிட்டோர் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து நாங்களும், தி.மு.க -வினரும் எனது தந்தையை மீட்டுத் தருமாறு முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் முறையிட்டோம், புகார் கொடுத்துள்ளோம். ஆனால், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
உ.பாண்டி

ஆனால், 6-ம் தேதி என் தந்தையை அழைத்து வந்து பொறுப்பேற்க செய்தனர். அப்போது என் தந்தையை சந்திக்க முயன்றேன். ஆனால், சுற்றியுள்ளவர்கள் தடுத்துவிட்டனர். பதவியேற்பு முடிந்ததும், என் தந்தையை வலுக்கட்டாயமாக அ.தி.மு.க-வினர் அழைத்துச் சென்றனர். எனது தந்தையை அ.தி.மு.க-வினர்தான் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளனர். நீதிமன்றம் தலையிட்டு அ.தி.மு.க-வினரின் கட்டுப்பாட்டில் உள்ள என் தந்தையை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

சாத்தையா
சாத்தையா
உ.பாண்டி

இந்த மனு இன்று நீதிபதிகள் ராஜா, புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, ``சாத்தையா யாருடைய சட்டவிரோத காவலிலும் இல்லை’’ என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், `மனுதாரரின் தந்தையான தி.மு.க கவுன்சிலரை நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும்’ என போலீஸாருக்கு உத்தரவிட்டனர். அவ்வாறு செய்யத் தவறினால் ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக வேண்டும் என எச்சரிக்கை செய்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.