Published:Updated:

சட்டவிரோத கல்குவாரியை மூட வேண்டும்! - மனுக்கொடுத்த விவசாயிக்குக் கொலைமிரட்டல்?

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வரும் கல்குவாரியை மூடக்கோரி, ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் புகார் மனுக் கொடுத்த விவசாயிக்கு, கல்குவாரி உரிமையாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குடியிருப்புக்குள் சிதறிக்கிடக்கும் கற்கள்
குடியிருப்புக்குள் சிதறிக்கிடக்கும் கற்கள் ( வெங்கடேஷ்.ஆர் )

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே சிறுஞ்சுனை கிராமத்தில் குடியிருப்புப் பகுதி அருகிலேயே சட்டவிரோதமாகக் கல்குவாரி ஒன்று நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தக் குவாரியில், வெடிகள் வைக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் கல் உடைக்கப்படுவதால், குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சட்டவிரோதமாகச் செயல்படும் கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும் எனச் சிறுஞ்சுனையைச் சேர்ந்த விவசாயி பரமசிவம் என்பவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் கனிம வள அதிகாரிகளிடம் மனுக்கொடுத்துள்ளார்.

கல்குவாரி
கல்குவாரி
வெங்கடேஷ்.ஆர்

இந்த நிலையில்தான் பரமசிவத்தின் வீட்டுக்குச் சென்ற குவாரி உரிமையாளர்கள், அதிகாரிகளிடம் கொடுத்த புகாரை வாபஸ் பெறக்கோரி மிரட்டியுள்ளனர். மேலும், புகாரை வாபஸ் பெறவில்லை என்றால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவோம் என கொலைமிரட்டல் விடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயி பரமசிவம் தன் குடும்பத்துக்கு பாதுகாப்புக் கேட்டும், கொலைமிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் திருக்கோகர்ணம் போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதுபற்றி விவசாயி பரமசிவம் கூறும்போது, ``சிறுஞ்சுனை கிராமத்தில் நான் விவசாயம் செஞ்சிக்கிட்டு வர்றேன். என்னோட விவசாய நிலத்துக்குப் பக்கத்தில்தான், இந்த சட்டவிரோத கல்குவாரி செயல்பட்டுக்கிட்டு இருக்கு. இங்க பக்கத்திலேயே குடியிருப்புகளும் இருக்குது. ஆனாலும், இங்கே பலத்த சத்தத்துடன் வெடிவைத்துக் கல் உடைக்கிறாங்க. சில நேரங்களில் வீடுகளுக்குள் பெரிய, பெரிய கற்கள் வந்து விழுகின்றன. என்னோட விவசாய நிலம் முழுவதும் கற்கள்தான். விவசாயமே செய்ய முடியாத நிலைதான் இருக்குது.

விவசாய நிலத்திற்குள் சிதறிக் கிடக்கும் கற்கள்
விவசாய நிலத்திற்குள் சிதறிக் கிடக்கும் கற்கள்
வெங்கடேஷ்.ஆர்

உடனே, இந்தக் கல்குவாரியை மூடணும்னு கலெக்டர் கிட்டேயும், கனிமவள அதிகாரிகளிடமும் மனுக்கொடுத்தேன். உடனே நடவடிக்கை எடுக்கிறதா அதிகாரிங்க சொன்னாங்க. இந்த நிலையில்தான் அதிகாரிகள் அவங்களுக்கு நெருக்கடி கொடுத்ததால குவாரிக்குச் சொந்தமான வெள்ளைச்சாமி அடியாட்களோடு எங்கள் வீட்டுக்கு வந்து அதிகாரிகள்கிட்ட கொடுத்த புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டி இருக்காங்க. காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத கல்குவாரி உடனே மூடப்பட வேண்டும்" என்றார்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, "குவாரி உரிமையாளர்கள் தரப்பில் விசாரித்தோம். அப்போது அவர்கள், அனுமதி பெற்றுதான் நாங்கள் குவாரி நடத்தி வருகிறோம். குடியிருப்பு வாசிகள் மற்றவர்கள் யாரும் குவாரி மீது புகார் கொடுக்க முன்வராத நிலையில், இவர் ஏதோ உள் நோக்கத்தோடு புகார் கொடுத்துள்ளார். என்று கூறியுள்ளனர். இதுபற்றி கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம். குவாரி உரிமம் பற்றிய ஆவணங்கள் கேட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.