Published:Updated:

`காலையில்தான் பிறந்திருக்கும்!'- கண்விழிக்கும் முன் பச்சிளம் குழந்தையை காட்டில் வீசிச்சென்ற கொடூரம்

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகில் வீசிச்சென்ற சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

New born baby
New born baby

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலிருந்து தோடர் (குடியிருப்பு) மந்துக்குச் செல்லும் மரங்கள் அடர்ந்த பகுதியில் இன்று காலை 8 மணியளவில் பெண்கள் சிலர் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. நடந்து சென்றவர்கள் அருகில் சென்று பார்த்ததில் பச்சிளம் குழந்தை ஒன்று மரத்தின் அடியில் குளிருக்கு நடுங்கிய நிலையில் அழுதபடி இருந்தது. குழந்தையைக் கண்டு அதிர்ந்துபோனவர்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.

New born baby
New born baby

மாவட்ட நிர்வாகம் சார்பில் மருத்துவக்குழு, குழந்தைகள் பாதுகாப்பு மையம் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனத்துடன் வந்த மருத்துவக் குழுவினர் குழந்தையை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்துவருகின்றனர்.

மீட்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்துவரும் ஊட்டி அரசு மருத்துவர்கள் கூறுகையில் ``மீட்கப்பட்டது ஆண் குழந்தை, இன்று காலையில் பிறந்திருக்கக்கூடும். கடும் குளிரால் பாதித்துள்ளது. மற்றபடி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளது. குழந்தையின் எடை 2.48 ஆக உள்ளது. ரத்தப்பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு தத்து வள மையத்திடம் ஒப்படைக்கப்படும்'' என்றனர்.

New born baby
New born baby

இந்தச் சம்பவம் குறித்து தாவரவியல் பூங்கா அதிகாரிகள் கூறுகையில் ``பூங்காவுக்கு அருகில் மரங்கள் அடர்ந்த ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் யாரோ குழந்தையை வீசிச் சென்றுள்ளனர். அதிகாலை நேரம் என்பதால், மக்கள் நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் தெரியவில்லை'' என்றனர்.

இது குறித்து ஊட்டியைச் சேர்ந்த ஜனார்த்தனன் கூறுகையில் ``கடந்த மாதம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியில் இதேபோன்று பச்சிளம் குழந்தை ஒன்றை வன விலங்குகள் நிறைந்த காட்டில் வீசிச்சென்றனர். தற்போது இன்று சுற்றுலாப் பயணிகள் கூடும் அரசுப் பூங்கா அருகில் இப்படி ஒரு இரக்கமற்ற செயல் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.