Published:Updated:

சாலை விரிவாக்கத்துக்காக இடிக்கப்பட்ட `நெய்வேலியின் அடையாளம்'..!

நெய்வேலி நகரத்துக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் உள்ள தற்காலிக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

நெய்வேலி ஆர்ச் கேட்
நெய்வேலி ஆர்ச் கேட்

`அண்ணன்... நான் ஆர்ச் கேட்டில் நிக்குறேன், வந்து பிக்-அப் பண்ணிக்கோ'; `நாளை ஆர்ச் கேட் வழியாக சென்னை செல்கிறேன்'; `ஆர்ச் கேட்டிலிருந்து 2 கி.மி தூரத்தில் எங்கள் வீடு' - இதுபோன்ற குரல்களுக்கு அடையாளமாக திகழ்ந்த இடம்தான் நெய்வேலி ஆர்ச் கேட். அது தற்போது இடிக்கப்பட்டது என்பது தான் நெய்வேலிவாசிகளின் தற்போதைய சோகம்.

ஆர்ச் கேட்
ஆர்ச் கேட்

விழுப்புரம் முதல் தஞ்சாவூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு நெய்வேலி ஆர்ச் கேட் தடையாக இருப்பதாகக்கூறி தேசிய நெடுஞ்சாலைத் துறையால் இடிக்கப்பட்டுவிட்டது. பண்ருட்டிக்கும் வடலூருக்கும் இடையே உள்ள இந்த ஆர்ச் கேட்டை இடிக்காமல் மேம்பாலம் கட்டலாம் என்பதே நெடுஞ்சாலைத் துறையின் திட்டமாக இருந்தது. ஆனால், மேம்பாலம் கட்டுவதற்கு பல கோடிகள் கூடுதல் செலவாகும் என எஸ்ட்டிமேஷனில் தெரியவந்ததால், வேறு வழியின்றி தற்போது ஆர்ச் கேட் இடிக்கப்பட்டுவிட்டது. இதனால் நெய்வேலி நகரத்துக்குள் செல்லும் வாகனங்கள் அருகில் உள்ள தற்காலிக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

சென்னைக்கு எல்.ஐ.சி பில்டிங்கும், மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோயிலும், கன்னியாகுமரிக்கு திருவள்ளுவர் சிலையும் அடையாளச் சின்னமாக திகழ்வதைப்போல் இந்நாள் வரை நெய்வேலிக்கென அடையாளமாக திகழ்ந்தது இந்த ஆர்ச் கேட் தான். ஆனால், தற்போது அந்த அடையாளம் தகர்க்கப்பட்டது என்பதை நெய்வேலி மக்களை வேதனை கொள்ளச் செய்துள்ளது. வெளியூருக்கு வேலைக்கும், தங்கி படிப்பதற்காகவும் சென்றுள்ள உள்ளூர்வாசிகள் ஊர் திரும்பும்போது அங்கு ஆர்ச் கேட் இல்லாமல் போனால் நிச்சயம் ஏமாற்றம் அடைவார்கள்.

ஆர்ச் கேட்
ஆர்ச் கேட்

வெறும் மக்கள் கூடும் இடமாக மட்டுமல்லாமல் நெய்வேலி மக்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவும் அடையாளமாகவும் திகழ்ந்த இந்த ஆர்ச் கேட் நெய்வேலி மக்களின் நினைவுகளில் நீங்காத இடம் கொண்டிருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.