Published:Updated:

`எங்களுக்கு திருப்தி இல்லை; அவர் வேண்டாம்'- தலைமையாசிரியை நடவடிக்கையால் அதிர்ந்த ஊர்மக்கள்!

மணிமாறன்.இரா
Vengadesh R

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, அலஞ்சிரங்காடு அரசுப்பள்ளியில் பெற்றோர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பள்ளித் தலைமையாசிரியை மாணவர்களை அனுப்பிவிட்டு பள்ளியையும் பூட்டிவிட்டு கிளம்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

School
School

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அலஞ்சிரங்காட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு 17 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப்பள்ளியில், பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த தலைமையாசிரியர் பணி மாறுதல் பெற்று சென்ற நிலையில், கீரமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டார்.

HM and Parents
HM and Parents

கிருஷ்ணவேணி வந்ததில் இருந்து பள்ளிக்குச் சரியாக வருவதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களை அடுக்கிய கிராம மக்கள், பள்ளியில் அவர் தொடர, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்தனர். போராட்டங்களும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில்தான், வழக்கம்போல் கிருஷ்ணவேணி பள்ளிக்கு நீண்ட நேரம் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்கள் யாருமில்லாததால், மாணவர்கள் சாலையில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.

இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவர்களின் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்காக,காத்திருந்தனர். நீண்ட நேரம் கழித்துப் பள்ளிக்கு வந்த ஆசிரியையிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். அதற்கு, ஆசிரியை அப்படித்தான் வருவேன்.உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களிடம் கூறியதோடு, மாணவர்களை வெளியே உட்கார வைத்துவிட்டு,பள்ளியைப் பூட்டி விட்டு அங்கிருந்து விறு,விறுவென கிளம்பிச் சென்றுவிட்டார்.

இந்தத் தகவல் கிராமம் முழுவதுமே தீயாகப் பரவியது. பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிய பெற்றோர் பள்ளியின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் கல்வி அதிகாரி திராவிடச் செல்வம் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர் முத்துக்குமார் ஆகியோர் தொலைபேசி மூலம் பெற்றோர்களிடம் பேசினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், அனைவரும் கலைந்து சென்றனர்.

Parents
Parents

இதையடுத்து, மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவின் பேரில் பெரியாளூர் பள்ளி ஆசிரியர் பள்ளியைத் திறந்தார். மாணவர்கள் திரும்ப வரவழைக்கப்பட்டனர். மதியத்துக்கு மேல் பள்ளி மீண்டும் செயல்பட ஆரம்பித்தது.

இதுபற்றி மாணவர்களின் பெற்றோர் பேசுகையில், ``இவர் தலைமையாசிரியையாக நியமிக்கப்பட்டதில் இருந்து பள்ளிக்கு சரியாக வருவதில்லை. இவர் செயல்பாடுகள் மீது எங்களுக்குத் திருப்தி இல்லை. இவரைப் பள்ளியை விட்டு மாற்ற வேண்டும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்தினோம். ஆனால், மாற்றுவதாகக்கூறிய கல்வித்துறை அதிகாரிகள் மாற்றவே இல்லை. இனிமேலாவது இவரைப் பணியிட மாற்றம் செய்து புதிய தலைமையாசிரியரை பள்ளிக்கு நியமிக்க வேண்டும்" என்றனர்.

students
students

மாவட்டக் கல்வி அதிகாரி திராவிடச் செல்வத்திடம் பேசினோம், ``இதுபற்றி தகவல் அறிந்தவுடன் உடனே மாற்று ஆசிரியரைப் பள்ளிக்கு அனுப்பிவைத்து பள்ளியைச் செயல்பட வைத்து விட்டோம். தலைமையாசிரியை மீது பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், வட்டாரக் கல்வி அலுவலரிடம் இதுபற்றிய விளக்கம் கேட்டிருக்கிறேன். தலைமையாசிரியை மீது தவறுகள் இருக்கும் பட்சத்தில் துறை ரீதியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.