Published:Updated:

`மின்சாரம்.. சுகாதாரம்.. வாழ்வாதாரம்.. வேண்டும்’ - பூர்வீக நிலத்தில் போராடும் மக்கள்!

மின்சாரம் இல்லாத கிராமம்
மின்சாரம் இல்லாத கிராமம் ( ஈ.ஜே.நந்தகுமார் )

கணவரை இழந்த மருதாயி கூறுகையில், ``அவரு இருக்கிற வரைக்கும் கஷ்டம் தெரியலை. இப்போ வாழுறதே வீண்தானோன்னு தோணுது. இடமும் வீடும் பாதுகாப்பில்ல. இதுல கரண்ட் வெளிச்சமும் இல்லாதது ரொம்பக் கொடுமைங்க. எம் புருஷனோட போகட்டும், இன்னொரு சாவு இங்க விழுந்திடக் கூடாது” என, நெஞ்சு விம்ம அழுகிறார்.

அலங்காநல்லூர் ஒன்றியம் அய்யங்கோட்டை பஞ்சாயத்துக்குட்பட்டது, நகரி கிராமம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த குடும்பத்தினர் பலர், இந்தக் கிராமத்தின் ஒருபகுதியில் வசித்துவருகின்றனர். அவர்களின் வீடுகளுக்கு மட்டும் 2013-ம் ஆண்டோடு மின்சாரம் வழங்குவதை முற்றிலும் நிறுத்தி மின்இணைப்பையும் துண்டித்துள்ளது அரசு. கடந்த 6 ஆண்டுகளாக இவர்கள் இருளிலேயே மூழ்கியுள்ளனர்.

மின்சாரம் இல்லாத கிராமம்
மின்சாரம் இல்லாத கிராமம்
ஈ.ஜே.நந்தகுமார்

``இது விவசாய மானியக்காரருக்குச் சொந்தமான இடம். நூத்தம்பது வருஷத்துக்கு முன்ன இங்க விவசாயக் கூலிவேலை பார்த்து வந்தவங்க நாங்க. அப்படியே பூர்வீகமா வாழத் தொடங்கிட்டோம். எங்க பகுதிக்கு முதல் வெளிச்சம், எம்.ஜி.ஆர் பீரியட்ல கிடைச்சது. `ஒத்த பல்பு சர்வீஸ்’ன்னு பேரு. அதுலதான் குடும்பம் நடத்தி வந்தோம்” என்றார் ஊர்ப்பெரியவர் வெள்ளையன்.

நகரி கிராம இளைஞர் மலைச்சாமி பேசுகையில், ``2007-ம் வருஷம் நடந்த கிராமசபைக் கூட்டத்தில ஒருமனதா, ‘அரசாங்கம் இலவசமா கரண்ட் வசதி செய்துதரணும்’ன்னு தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் அலுவலகத்திலயும் அதைப் பதிவுசெஞ்சிருந்தோம். எங்கக்கிட்ட நிலப்பட்டா எதுவும் இல்லாததால, கரண்ட் கனெக்ஷன் தர மறுத்தாங்க. 2011-ல இந்த ஒத்த பல்பு சர்வீஸ்களை முழுமையா நீக்குனாங்க. அதுல எங்க வீடுகள்ல இருந்த கரண்ட் சர்வீஸ் சுத்தமா போச்சு. மீட்டர் பாக்ஸ் கனெக்ஷனுக்கு மாறச்சொல்லிட்டாங்க. இலவசமா கொடுக்கவேண்டியதுக்கு தினக்கூலிங்க எங்கக்கிட்ட காசு கேட்டாங்க” என வேதனைப்பட்டார்.

மின்சாரம் இல்லாத கிராமம்
மின்சாரம் இல்லாத கிராமம்
ஈ.ஜே.நந்தகுமார்
நான் ப்ளஸ் டூ படிக்கிறேன் அண்ணா. டாய்லெட்டுக்கெல்லாம் இங்க வழியில்லை. ராத்திரிக்கின்னா நரக வேதனை. வெளிச்சமில்லாம படிக்க முடியாது. தெருவிளக்குலதான் படிப்பு. வீட்டில சமைச்சு எடுத்து வந்து தெருவில வச்சுச் சாப்பிடுவோம். வெளிச்சமில்லாததால நிறைய பசங்க படிப்பை விட்டுட்டாங்க. எனக்குப் படிக்க ஆசை
மாணவி கவிபிரபா

ஒரே ஒரு தெருவிளக்கு இணைப்பு மட்டும் உள்ள இந்தப் பகுதியில் மொத்தம் 23 வீடுகள். ஆனால், 5 வீடுகளுக்கு மட்டுமே மின் இணைப்பு இருப்பதால் சின்னஞ்சிறிய வீடு ஒவ்வொன்றிலும் மூன்று குடும்பங்கள் வசித்துவருகின்றன. வயதுப்பெண்களுக்கும் தங்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என இங்குள்ள தாய்மார்கள் கதறுகின்றனர். அருகே அமைந்திருக்கும் பிஸ்கட் தயாரிப்பு ஆலையின் மொத்தக் கழிவுகளும் தங்கள் பகுதிக்கு வந்துசேருவதால் துர்நாற்றமும் கொசுப்பெருக்கமும் அதீதம் எனக் கொதிக்கின்றனர்.

``போன வருஷம் டெங்குவால அடுத்தடுத்து ரெண்டு ஆம்பிளைங்க போய்ட்டாங்க. அவங்க குடும்பம் இப்போ அநாதையா நிக்குது. ஆனா, இந்த டெங்கு மரணங்களை `மர்மக் காய்ச்சல்’ன்னு சொல்லி மறைச்சிருச்சு, அரசாங்கம்” என்று ஆற்றாமையில் வெடித்துப்பேசினார், ஒரு பெண்மணி. கணவரை இழந்த மருதாயி கூறுகையில், ``அவரு இருக்கிற வரைக்கும் கஷ்டம் தெரியலை. இப்போ வாழுறதே வீண்தானோன்னு தோணுது. இடமும் வீடும் பாதுகாப்பில்ல. இதுல கரண்ட் வெளிச்சமும் இல்லாதது ரொம்பக் கொடுமைங்க. எம் புருஷனோட போகட்டும், இன்னொரு சாவு இங்க விழுந்திடக் கூடாது” என, நெஞ்சு விம்ம அழுகிறார்.

மருதாயி
மருதாயி
ஈ.ஜே.நந்தகுமார்

``நான் ப்ளஸ் டூ படிக்கிறேன் அண்ணா. டாய்லெட்டுக்கெல்லாம் இங்க வழியில்லை. ராத்திரிக்கின்னா நரக வேதனை. வெளிச்சமில்லாம படிக்க முடியாது. தெருவிளக்குலதான் படிப்பு. வீட்டில சமைச்சு எடுத்து வந்து தெருவில வச்சுச் சாப்பிடுவோம். வெளிச்சமில்லாததால நிறைய பசங்க படிப்பை விட்டுட்டாங்க. எனக்குப் படிக்க ஆசை” என்றார் மாணவி கவிபிரபா.

ஏக்கத்தோடு, ``மழைக்காலத்துல ரொம்பச் சிரமம், தம்பி. பிஸ்கட் கம்பெனி அசுத்தமெல்லாம் வீட்டுக்குள்ள வரும். பாம்புங்க வரும். வீடுக எல்லாம் சேதமடைஞ்சிருச்சு. இப்படியே தான் எங்க பொழப்பு ஓடுது. 150 வருஷ பூர்வகுடிகள் நாங்க. எங்க நிலத்தைத் தக்க வச்சுக்கிறதுக்குப் போராடிக்கிட்டு இருக்கோம்” என்றார், இன்னொரு பெண்மணி.

மின்சாரம் இல்லாத கிராமம்
மின்சாரம் இல்லாத கிராமம்
ஈ.ஜே.நந்தகுமார்

தங்களிடம் வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்டவை இருப்பதாகவும், அதனடிப்படையில் வசிப்பிடத்தைப் பதிந்துகொண்டு மின் இணைப்பு வழங்குமாறும், பிரமாணப்பத்திரங்கள் எழுதி மின்வாரியத்தில் தந்துள்ளார்கள். மின்வாரிய அதிகாரிகள் வி.ஏ.ஓ சான்றிதழ் கேட்டதும், அதையும் நாள்கணக்கில் அலைந்து பெற்றுக்கொடுத்துள்ளார்கள். கிராமப் பஞ்சாயத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மாறாக இணைப்புக்கு மின்சார வாரிய அதிகாரிகள் பணம் கேட்டிருக்கிறார்கள். அதையும் இவர்கள் கட்டிவிட்டார்கள். இன்னும் மின்சாரத்துக்காகக் காத்திருக்கின்றனர், நகரி கிராம மக்கள்.

சமயநல்லூர் மின்சாரத்துறை ஏ.இ. பாலகிருஷ்ணனைத் தொடர்புகொண்டோம். ``அந்த மக்கள் வீட்டு உபயோகத்துக்காக மின்சாரம் கேட்டு விண்ணப்பச்சிருக்கிறதால கட்டாயம் பணம் கட்டியாகணும். இப்போதான் பணம் கட்டியிருக்காங்க. நாங்க ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கோம்" என்றார்.

எம்.எல்.ஏ மாணிக்கம்
எம்.எல்.ஏ மாணிக்கம்

எம்.எல்.ஏ., மாணிக்கத்திடம் பேசினோம். ``என்னுடைய சொந்த முயற்சியில அவங்களுக்கு ரோடு போட்டுக் கொடுத்திருக்கேன். ஆனா, கரண்ட் கனெக்ஷன் தர்றதுல சிக்கல் இருக்கு. அந்த மக்கள் 100 வருஷமா வசிக்கிற பகுதி தனியாரோட சொந்த நிலம். தன்னோட பெயருல கனெக்ஷன் வாங்கணும்ன்னு நில ஓனர் சொல்றாரு. ஆனா, இது அந்த மக்களுக்குப் பின்னாளில் பிரச்னை ஏற்படும். நிலத்தோட ஓனருக்கும் மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் வராம சுமுகமா தீர்வுகாணுற முயற்சியில இருக்கேன். நானும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன்தான். சாதி மதத்தைப் பயன்படுத்துறது, ஆட்சிக்கும் பதவிக்கும் வர்றதுக்கு மட்டும்தான். மத்தபடி, எல்லா சமுதாய மக்களோட பிரச்னைகளையும் நான் சமமாகத் தான் பார்ப்பேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு