Published:Updated:

பி.டி.ஓ, ஓவர்சீர், இன்ஜினீயர்... ஊராட்சியில் யாருக்கு எவ்வளவு லஞ்சம்? ஆடியோ அதிர்ச்சி!

ஊராட்சித் துறையில் எதற்கெல்லாம் லஞ்சம், எந்தெந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் என்று கடலூர் மாவட்ட ஊராட்சி ஊழியர் ஒருவர் பேசும் செல்போன் ஆடியோ வெளியாகி, ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

அரசு இயந்திரத்தின் அத்தனை பிரிவுகளிலும் லஞ்சமும், ஊழலும் அழிக்க முடியாத அளவுக்கு வேரூன்றிக் கிடக்கிறது. கடைநிலை ஊழியர் தொடங்கி உயர் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் வரை சங்கிலித் தொடராக கைமாறுகிறது லஞ்சப் பணம். இவர்களின் பணப் பசிக்கு குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி, பள்ளிக் கட்டடங்களைக்கூட ஈவு இரக்கமின்றி இரையாக்கிவிடுகிறார்கள். இந்த சிண்டிகேட் எப்படி நடக்கிறது என்பதை கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த சத்தியவாடி ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம் புட்டுப் புட்டு வைக்கும் செல்போன் ஆடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அவரும் அதே ஊராட்சியின் துணைத் தலைவர் பாண்டியனும் பேசும் அந்த செல்போன் உரையாடல் அப்படியே இங்கு.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்

துணைத் தலைவர் பாண்டியன்: “அண்ணே...”

ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம்: “சொல்லு பாண்டியா”

பாண்டியன்: “என்ன பிரின்ட் எடுத்துட்டீங்களா? எம் புக்குல கையெழுத்து வாங்கணும்னு சொன்னீங்களே வாங்கிட்டீங்களா?”

அமிர்தலிங்கம்: “இல்ல... இங்கதான் வேலை. எங்கேயும் போகல. பிரின்ட் வாங்கல இன்னும். அது பெரிய மாசான கூத்து பாண்டியா. அதுக்குத்தான் அந்த எம் புக் பக்கமே போறது இல்ல. உன் பேரை சொன்னால் ஓவர்சீர் அலர்றாரு.”

பாண்டியன்: “அண்ணா, நான் சத்தியமா ஒண்ணுமே பண்ணலைண்ணா. முன்ன ஒருநாள் உங்ககிட்ட சொன்னேன்ல. அதுல இருந்து நான் அவர் ஆபீஸ் பக்கமே போறது இல்லைண்ணா.”

அமிர்தலிங்கம்: “அவனெல்லாம் சாபக்கேடு. அவனுக்கெல்லாம் இதே தொழிலு. அதவிடு. பஞ்சாயத்து ஒர்க்கா செஞ்சாலும், எந்த ஃபண்டுல செஞ்சாலும் டெண்டர் விட்டா அதை கான்ட்ராக்டுகாரன் செஞ்சுப்பான். டிபார்ட்மென்ட் வேலைலாம் நாமதான் போயி நிக்கணும். இப்போ, பாஸ்கர் (முன்னாள் ஊராட்சித் தலைவர் சாவித்ரியின் மகன்) ரோடு போட்டான்ல. இந்த வேலைய பூரா அவன் பாத்துப்பான்.”

பாண்டியன்: “இந்தாளுக்கு வேலையே இல்லை. காசு மட்டும்தான் குடுக்கணும்?”

அமிர்தலிங்கம்: பணம் மட்டும் என் அக்கவுன்டுல வரும். எடுத்து குடுத்தா வாங்கிட்டு போயிடுவான்.”

பாண்டியன்: “சிரமம் இல்லாம வந்துடும். அதுல லாபமாண்ணே?“

அமிர்தலிங்கம்: “கான்ட்ராக்ட்டு கிடைச்சாலே லாபம்தானே. ஆனா, மண்ணை அள்ளிபோட்டுட்டுப் போனாதான் வேலை ஆகும்.”

பாண்டியன்: “ஓ... திருப்தியா வேலை செய்ய முடியாது?”

அமிர்தலிங்கம்: “திருப்தியா வேலை செஞ்சா இவன் போண்டி. பால்டாயில் (விஷம்) வாங்கி குடிக்கற மாதிரி. மழை நீர் சேகரிப்பு செய்யச் சொல்லி நிமித்தி எடுத்தானுங்க. இந்த வேலையில ஒண்ணும் கிடைக்காதுனு சொல்லி அவன் கழட்டிக்கிட்டான். என்ன செய்வியோ தெரியாது. நாளைக்கு காலைல செஞ்சிடணும்னு மீட்டிங்ல என்னைப் புடிச்சி கடிச்சிட்டாங்க. 20,000 ரூபாய்ல பள்ளிக்கூடம், அங்கன்வாடி, பஞ்சாயத்து கட்டடத்துல புது பைப் வாங்கி இறக்கியிருக்கிறேன். இதுவரைக்கு பத்து பைசாகூட நான் பாக்கல அதுல. இந்த வேலையை அடுத்தவன் செஞ்சான்னா அவங்கிட்ட நான் காசை வாங்கிட்டு வந்துடுவேன். ஹெல்த் இன்ஸ்பெக்டருக்கு தண்ணி டெஸ்டுக்கு போறதுக்கு 2,000 ரூபாய் பணம் கேட்டுக்கிட்டு இருக்காரு. இன்னொன்னு தெரிஞ்சுக்க. 6 கே.ஜி பைப்பை அப்படியே போட்டா நம்ம கைல ஒரு அணா மீறாது.”

பாண்டியன்: ”நாம மட்டமா செஞ்சிக்க வேண்டியதுதானா..?“

அமிர்தலிங்கம் : “மட்டமா செஞ்சு அதுல மண்ணை அள்ளிப் போட்டுட்டு வந்தாதான் அதுல 10 ரூபா நிக்கும். நம்ம பஞ்சாயத்துல அங்கன்வாடி கட்டடத்தை உள்ள போயி பாத்தியா ? பூரா புட்டுக்கிட்டு கெடக்குது. லெட்டீன் செவுரு ஆடிக்கிட்டு கெடக்குது. எல்லாம் கலகலத்துக் கெடக்குது. நீ பாத்து பாத்து வேலை செஞ்சேன்னு வெச்சிக்க. கட்டடம் நல்லாருக்கும். நீ கலகலத்துப் போயிடணும்.”

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர் அமிர்தலிங்கம்

பாண்டியன்: ”அப்படியாண்ணே...”

அமிர்தலிங்கம்: “இந்த பாஸ்கர் இருக்கானே... இங்கேயும் அங்கேயும் மண்ணை வாரி அள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கான். அதனால அவனுக்கு கையை கடிக்காம ஓடுது. மனசாட்சி உள்ளவன் கான்ட்ராக்ட் வேலைக்கு போனான்னா அவன் போண்டியா போயிடுவான்.”

பாண்டியன்: “சரிண்ணே... அந்த வேலைக்கான ஊதியமாச்சும் நிக்கணும் இல்லண்ணே...”

அமிர்தலிங்கம்: “அதான் சொல்றேனே... பாத்து நேக்காதான் பண்ணிக்கணும். நீ வேலையை ஆரம்பிக்கும்போது நான் சொல்லித் தர்றேன். வீடு கட்டுற என்.எம்.ஆர் வேலை போயிக்கிட்டிருக்கு. இப்போ என்ன வேலை ஓடிக்கிட்டிருக்குனு மணிகிட்ட சொல்லி பிரின்ட் எடுக்கச் சொல்லேன். யார் யாரு வீடு கட்டுறாங்கன்னு தெரிஞ்சுக்குவோம்.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பாண்டியன்: “சரிண்ணே...”

அமிர்தலிங்கம்: “பைப்லைன் போட்டதுல ஆனந்துக்கு (ஓவர்சீர்) 10,000 ரூபாய் லம்ப்பா குடுத்தது.”

பாண்டியன்: ”ஏன்னே நம்ம பஞ்சாயத்துக்கு செய்யறதுல எப்படி கொடுப்பாங்க? ஓவர்சீருக்கே பத்தாயிரம் குடுத்தீங்கன்னா அப்புறம் பி.டி.ஓ-வுக்கு எவ்வளவு கொடுக்கணும்... இன்ஜினியர்னு வேற சொல்றீங்க?”

அமிர்தலிங்கம்: “எல்லாத்தையும் குடுத்துட்டுதான் நான் ஏமாந்து வரணும். இல்லைன்னா பணத்தை பிரசிடன்ட்கிட்ட வாங்கிக்கன்னு சொல்லிட்டு அவன் போயிடுவான்.”

பாண்டியன்: “இப்போ பணம் குடுத்தா அவரே குடுத்துடுவாரா?”

ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியன்
ஊராட்சி துணைத் தலைவர் பாண்டியன்

அமிர்தலிங்கம்: “அவனே குடுத்துடுவான் பணம். இல்லேண்ணா அது இதுன்னு சொல்லி ரேட்டை குறைச்சி நம்மள நடுத்தெருவுல விட்ருவானுங்க. அவனுங்களையெல்லாம் பகைச்சிக்கக் கூடாது. பதமா போயிடணும். ஆலடில ரோடு போட்டதுக்கு பணம் எனக்குத்தானே வந்தது...”

பாண்டியன்: “இப்போ உங்க காசுலதான் பி.டி.ஓ, சேர்மன், ஓவர்சீர்க்கெல்லாம் குடுத்தீங்களாண்ணே?”

அமிர்தலிங்கம்: “பின்ன என்ன... பணம் குடுத்ததாலதான் கையெழுத்தாச்சி. பணம் குடுத்ததாலதான் மோட்டரே குடுத்தான். கொஞ்சநாள்தான்பா இருப்பேன். அப்புறம் வீரமணியை இங்க தள்ளிவிட்டுட்டு நான் போயிடுவேன்.”

பாண்டியன்: “அவர் எப்படி? உங்களை மாதிரி இருப்பாராண்ணே...”

அமிர்தலிங்கம்: ”அவன நீங்க பதப்படுத்தி கைல வெச்சிக்க வேண்டியதுதான். பாத்துக்கலாம். மொத்த பில் ரூ.52,000. அதுல 1% ரூ.520 புடிப்பான். அதுபோக மிச்சம் ரூ.51,480. அதுல உனக்கு ஒரு பத்து ரூபாய் (ரூ.10,000) வந்துடும். கடைக்கு 34 போயிடும். ஓவர்சீருக்கு 4, இஞ்சினியருக்கு 2, செக்‌ஷன்ல புக் எழுதுவறனுக்கு ரூ.1,000, பி.டி.ஓ-வுக்கெல்லாம் இன்னும் நான் குடுக்கல. என்ன கேப்பாரோ என்னன்னு தெரியல” என்று நீள்கிறது அந்த ஆடியோ.

இதுகுறித்து விளக்கம் கேட்க ஊராட்சி செயலர் அமிர்தலிங்கத்தை அவரது செல்போனில் தொடர்புகொண்டபோது, “விவகாரம் அதிகாரிகளின் நடவடிக்கையில் இருப்பதால் இப்போது எதையும் கூற முடியாது. அந்த ஆடியோவில் என் குரலில் வேறு யாரோ பேசியிருக்கிறார்கள்” என்று முடித்துக்கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்

துணைத் தலைவர் பாண்டியனைத் தொடர்புகொண்டபோது, “அந்த ஆடியோவுல அமிர்தலிங்கம் சொல்வது அனைத்தும் உண்மைதான். எங்கிட்ட அனுமதி வாங்காமலேயே ரூ.15,000-க்கு என்னிடம் கையெழுத்து வாங்கிட்டாரு. ஒரு புது மோட்டார் வாங்குறதுக்காக, 52,000 ரூபான்னு சொல்லிட்டு ரூ.67,000-க்கு கையெழுத்து வாங்கிட்டாரு. அதப்பத்தி கேக்கப்போயிதான் அவரு எல்லா உண்மையையும் போட்டு ஒடச்சிட்டாரு” என்று முடித்துக்கொண்டார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வனிடம் பேசினோம். “அமிர்தலிங்கம் என்பவரை சஸ்பெண்ட் செய்திருக்கிறோம். பல இடங்களில் இப்படி நடக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கும் இடங்களிலும், பரவலாக எந்தெந்த இடங்களில் யார் யார் விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது குறித்தும் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறேன். அதனடிப்படையில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் எதற்கெல்லாம் எவ்வளவு லஞ்சம் தெரியுமா? அதிர வைக்கும் `ஸ்கேன்' ரிப்போர்ட்

இந்த விவகாரத்தில் மேலோட்டமான நடவடிக்கைகளோடு நிறுத்திவிடாமல், பஞ்சாயத்து தேர்தல் நடப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பணிகள், அரசுக் கட்டடங்கள், அப்போது பணியில் ஊராட்சி செயலாளர்கள், இன்ஜினீயர்கள், ஓவர்சீர்கள், பி.டி.ஓ-க்கள் என அனைத்து தரப்பினரையும் விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கைகள் எடுப்பதுடன், அப்போது கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தையும் உடனே ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை எழுப்பியிருக்கின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு