Published:Updated:

`எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல!’- வேட்பாளர்களின் வீட்டுக்கே செல்லும் சிவகங்கை இளைஞர்கள்

தெக்கூர் இளைஞர்கள்
தெக்கூர் இளைஞர்கள் ( சாய்தர்மராஜ் )

எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று எச்சரிக்கைப் பலகையுடன், வேட்பாளர்கள் வீட்டுக்குச் சென்று அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டாம் எனக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர் கிராம நற்பணி மன்ற இளைஞர்கள்.

சிவகங்கை மாவட்டம் பெரியகோட்டை அருகே உள்ளது தெக்கூர். இங்குள்ள வ.உ.சி நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து, தங்கள் ஊரில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது என முடிவு செய்து கிராம மக்களையும் வேட்பாளர்களையும் அறிவுறுத்தி பலகை வைத்துள்ளனர்.

தெக்கூர்
தெக்கூர்

இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இது குறித்து வ.உ.சி நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், ``எங்கள் ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் வ.உ.சி நற்பணி மன்றத்தை சுமார் 35 ஆண்டுகளாகச் செயல்படுத்தி வருகிறோம்.

தூய்மைப் பணி, பள்ளி மாணவர்களின் முன்னேற்றப் பணி, இலவச மருத்துவ முகாம், மரக் கன்று நடும் பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு, கஜா நிவாரணப் பணி என பல சமுதாயப் பணிகளை செய்துவருகிறோம். இதனால் மானாமதுரை ஒன்றியத்தில் சிறந்த நற்பணி மன்ற விருது பெற்றுள்ளோம்.

இந்த நிலையில், ஓட்டுக்குப் பணம் வாங்குவதை எங்கள் ஊரில் முழுமையாக நிறுத்த வேண்டும் என முடிவு செய்தோம். அதன்படி கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் அறிவித்தபோது விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இளைஞர்களின் களப்பணி
இளைஞர்களின் களப்பணி

அதையடுத்து, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கடுமையாக களப்பணியாற்றி ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும் வாங்குவதையும் 90 சதவிகிதம் தடுத்தோம். தற்போது வர உள்ள தேர்தலில் முழுமையாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என அனைத்து வேட்பாளர்களிடம் நேரடியாகச் சென்று கடிதம் மூலம் அன்பை வெளிப்படுத்தி வேண்டுகோள் விடுத்தோம்.

அவர்களும் எங்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர். ஊரில் உள்ள வாக்காளர்களிடமும் ஒவ்வொரு நபராக விழிப்புணர்வு செய்துள்ளோம். பொதுமக்களும் ஆதரவு தருவதாக உறுதியளித்துள்ளனர். எங்கள் ஊரில் சுமார் 400 வாக்காளர்கள் உள்ளனர். அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம். வாக்குச்சாவடி தூரமாக அமைந்தால் மன்றம் செலவில் வாகனம் ஏற்படுத்துவோம்.

வ.உ.சி இளைஞர்கள்
வ.உ.சி இளைஞர்கள்

ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க விரும்புகிறோம். 99% சதவிகிதம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் தடுப்போம் என இளைஞர்கள் உறுதியோடு இருக்கோம்" என தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு