Published:Updated:

`சிவன் அனுமதி கொடுத்துவிட்டார்; ஜீவசமாதி ஆகப்போறேன்'- சாமியாரின் அறிவிப்பால் படை எடுக்கும் மக்கள்!

அருண் சின்னதுரை
ஈ.ஜெ.நந்தகுமார்

இருளப்பசாமி நாளை அதிகாலை நேரத்தில் ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளதால் அவரை காண பக்தர்கள் கூட்டம் குவிகிறது.

Irulappasami
Irulappasami

சிவகங்கை மாவட்டம் சக்கந்தி அருகே உள்ள பாசாங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளப்பசாமி. 80 வயதுடைய இவர் சிறுவயதிலிருந்தே சிவ பக்தராம். சிவபக்தரான இருளப்பசாமி, பல ஆண்டுகளுக்கு முன்னாள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது அவரைப் பரிசோதித்த மருத்துவர்களும் கைவிட, அன்று இரவு அவருடைய கனவில் சிவபெருமான் தோன்றி பிழைக்க வைத்ததாகவும் அன்று முதல் சிவாலயங்களுக்கு கால்நடையாக நடந்து சென்றே வழிபட்டு வருவதாகவும் இருளப்பசாமி கூறுகிறார்.

Irulappasami
Irulappasami

இதனால் பல்வேறு சிவ ஸ்தலங்களுக்கும் தொடர்ந்து பயணித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே ஜீவ சமாதி அடைய உள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கான சமயம் தற்போது வந்துள்ளதாக சில நாள்களுக்கு முன் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகைதந்து தொடர்ந்து ஆசி பெற்று வந்தனர்.

அவர் ஜீவசமாதி அடைவதாக குறிப்பிட்ட தேதி 13.9.19 ஆவணி 27-ம் நாளான நாளை அதிகாலை 12 மணி முதல் 5 மணிக்குள்ளாக ஜீவ சமாதி அடைய உள்ளதாக தெரிவித்ததையடுத்து, இன்று பல்வேறு இடங்களிலிருந்து வந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து இருளப்பசாமியைச் சந்தித்து ஆசி பெற்றுவருகின்றனர். தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டும் என எலுமிச்சை பழமும் காணிக்கையும் செலுத்தி வணங்கிச் செல்கின்றனர். அதிகாலை நேரம் ஜீவ சமாதி அடைய உள்ளதாக தெரிவித்துள்ளதால் பல மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

Irulappasami
Irulappasami

சித்தர் என அழைக்கப்படும் இருளப்பசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``எனக்கு நாளை அதிகாலை சமயத்தில் ஜீவ சமாதி அடைய சிவன் உத்தரவு கிடைத்ததால் ஜீவ சமாதி ஆகப் போகிறேன். நோய்வாய்பட்டிருந்தபோது மருத்துவர்கள் நான் பிழைக்க மாட்டேன், அவ்வளவுதான் என்று தெரிவித்தனர். ஆனால், அன்று இரவே சிவபெருமான் என் கனவில் வந்து `நான் உன்னைக் காப்பாற்றுவேன்' என்று தெரிவித்தார். அதன்படி பல ஆண்டுகளாக என்னை நல்லபடியாக அவர் பார்த்துக்கொள்கிறார். தொடர்ந்து சிவாலயங்களுக்குச் சென்ற எனக்கு ஜீவ சமாதி அடைய அனுமதியும் கொடுத்துள்ளார்'' என்றார்.

அவர் ஜீவ சமாதி அடைவதற்கான ஏற்பாடுகள் செய்யும் கண்ணன் கூறுகையில், ``கடந்த இரண்டு வருடத்துக்கு முன்பு என்னைச் சந்தித்த இருளப்பசாமிகள் அவருக்கு ஜீவசமாதி அடையும் ஏற்பாடுகளை பார்த்துக்கொள்ள உத்தரவிட்டார். அதன் தேதி நேரத்தையும் குறித்துக்கொடுத்தார். அதன்படி பாசாங்கரையில் இருக்கும் அவரின் இடத்தில் அவரின் உயிர் பிரிந்ததும் கிணறுபோல தோண்டப்பட்ட இடத்தில் வைக்க உள்ளோம். அவர் உயிர்பிரிந்த பின்தான் உள்ளே வைக்க மருத்துவ வட்டாரங்கள் அனுமதித்துள்ளது. அதன்படியே உள்ளே வைப்போம். இருளப்பசாமிகள் என் வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். அவர் சொன்ன அத்துனை விஷயங்களும் பலிக்கும். அவர் ஜீவசமாதிக்குப் பின் மிகப்பெரும் ஆலயம்போல் இந்த இடம் விளங்கும்'' என்றார்.

Irulappasami
Irulappasami

ஜீவசமாதி அடைய உள்ளதாக தெரிவித்ததும் இன்று கடும் வெயிலை பார்க்காமல் தொடர்ந்து பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். தற்போது இரவு நெருங்கியபோதும் ஆட்டோ, கார், பைக் என்று பக்தர்கள் இருளப்பசாமியை தரிசித்து வருகின்றனர்.