Published:Updated:

`வளம் மீட்பு பூங்காவான குப்பைக் கிடங்கு!’ - தூய்மைக்கான விருது கொண்டாட்டத்தில் தஞ்சை கிராமம்

ஊரைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தே குப்பைகளை அகற்ற வேண்டும் என அன்பும், அக்கறையும் கொண்ட கட்டுப்பாட்டை விதித்துள்ளனர்.

திருவையாறு அருகே உள்ள பேரூராட்சி ஒன்று குப்பைக் கிடங்குகளை வளம் மீட்கும் பூங்காவாகவும், பொதுமக்கள் வழங்கும் குப்பைகளில் கிடைக்கும் பால் மற்றும் எண்ணெய்க் கவர்களை விதைப்பையாக உரம் வைத்து பயன்படுத்துவதுடன், அதில் தெருக்களில் கிடைக்கும் பல்வேறு மர விதைகளைக் கொண்டு `ஜீரோ காஸ்ட்' முறையில் மரக்கன்றுகளை உருவாக்கி அதைப் பொதுமக்களுக்கு இலவசமாக தருகிறார்கள். மேலும், தூய்மைக்காக தென்னிந்தியாவிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்து அசத்தியிருக்கிறது.

மரக்கன்று
மரக்கன்று

திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி என்ற கிராமம் பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் பத்தாயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு பேரூராட்சி அலுவலகம் தொடங்கி கிராமத்தின் கடைசி பகுதி வரை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுப்புறச்சூழல், சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுகிறது பேரூராட்சி நிர்வாகம். அத்துடன் ஊரைச் சுத்தம் செய்யும் துப்புரவுத் தொழிலாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அவர்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தே குப்பைகளை அகற்ற வேண்டும் என அன்பும் அக்கறையும் கொண்ட கட்டுப்பாட்டையும் விதித்துள்ளது. இதனால் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் தென்னிந்தியாவிலேயே தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தையும் பிடித்திருக்கிறது.

துப்புரவுப் பணியாளர்கள்
துப்புரவுப் பணியாளர்கள்

இது குறித்து மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி செயல் அலுவலர் குகன் கூறியதாவது, ``மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை நாடெங்கும் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இதன் மூலம் இங்கு வளர்ச்சிக்காக தூய்மை இந்தியா திட்டம் மற்றும் ஜல் அபியான் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் மத்திய அரசு காலாண்டுக்கு ஒருமுறை தூய்மையாக உள்ள நகரங்கள் குறித்து சர்வே நடத்துவது வழக்கம். அப்படி நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகளை டில்லியில் கடந்த 31-ம் தேதி நடைபெற்ற விழா ஒன்றில் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டார். அதில் 25,000 மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பிரிவில் தென்னிந்திய மாநிலங்களில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாம் காலாண்டில் இரண்டாம் இடமும் பெற்று தென் இந்தியாவின் தூய்மையான நகரம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

பேரூராட்சி
பேரூராட்சி

அத்துடன் முதல் காலாண்டில் அகில இந்திய அளவில் 149-வது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் குறிபிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால் அகில இந்திய அளவில் தூய்மையான முதல் 150 நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெற்ற ஒரே நகரம் என்ற பெருமைமிகு சாதனையையும் செய்திருக்கிறது.

இதற்குக் காரணம் துப்புரவுத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பான பணியும் பொதுமக்களின் ஒத்துழைப்புதான். பொதுவாக நாம் மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது; சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காக பல்வேறு நடைமுறைகளை இங்கு அறிமுகப்படுத்தி அதைச் செயல்படுத்தி வருகிறேன். குறிப்பாக பணியாளர்கள் குப்பைகளை அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று தரம் பிரித்து வாங்கி வருவர். குப்பைத் தொட்டி இல்லாத தெருக்களையே இங்கு பார்க்க முடியாது. பொதுமக்கள் அந்தத் தொட்டிகளையும் பயன்படுத்திக்கொள்வர். எடுத்துவரும் குப்பைகளைச் சேமிக்கும் கிடங்கை வளம் மீட்பு பூங்காவாக மாற்றியிருக்கிறோம்.

பேரூராட்சி
பேரூராட்சி

பொதுமக்கள் வழங்கும் குப்பைகளில் கிடைக்கும் பால் மற்றும் எண்ணெய் கவர்களை சுத்தம் செய்து விதைப்பையாக பயன்படுத்துவதுடன் அதில் குப்பைகளின் மூலம் உருவாக்கப்படும் உரங்களை வைப்பதுடன், பின்னர் அந்த பைகளில் தெருக்களை சுத்தம் செய்யும்போது கிடைக்கும் பல்வேறு மரங்களின் விதைகளை வைத்து மரக்கன்றை உருவாக்கி அவற்றை பொதுமக்களுக்கே இலவசமாகத் தருகிறோம்.

எந்தவித செலவும் இல்லாமல் `ஜீரோ காஸ்ட்' என்ற திட்டத்தைப் பயன்படுத்தி மரக்கன்றுகளை உருவாக்குவதால் பேரூராட்சிக்கு எந்தப் பொருளாதார இழப்பும் இல்லை. அத்துடன் ஊரும் பசுமையாக மாறி வருகிறது. மேலும், குப்பைகள் மூலம் மண்புழுக்கள் உள்ளிட்ட உயிர் உரங்களை உற்பத்தி செய்து தேவைப்படும் விவசாயிகளுக்கும் கொடுப்பதுடன், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவற்றை சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.

குகன்
குகன்

குப்பைகளை சேகரித்து தரம் பிரிக்கும் பகுதியைச் சுற்றிலும் வாழை மரங்கள் வளர்த்து வருகிறோம். இதனால் எப்போதும் `ரிசார்ட்' போன்று பசுமையாக இருக்கும். இதனால் துப்புரவுப் பணியாளர்களும் ஆர்வமாகப் பணி செய்கிறார்கள். அத்துடன் அவர்கள் ஆரோக்கியமும் முக்கியம் என்பதிலும் கவனம் செலுத்துவதால் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்துகொண்டுதான் பணி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அலுவலகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பதால் முறைகேடுகள் எதற்கும் வழிவகுக்காமல் பொதுமக்களுக்கு நேர்மையான சேவை வழங்கப்படுகிறது. பணியாளர்களின் வருகைப்பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை, குப்பை அள்ளும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் கருவியும் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குப்பை
குப்பை

ஏதேனும் குறைகள் இருந்தால் வாட்ஸ்அப் மூலம் புகார் தெரிவித்தால்போதும் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவை சரிசெய்யப்படும். இவற்றையெல்லாம் தூய்மை இந்தியா திட்டத்தின் அதிகாரிகள் நேரில் ஆய்வுசெய்து மக்களிடம் கருத்துகளை கேட்டு அதன் பிறகே தென்னிந்திய அளவிலான தூய்மையான நகரங்களின் பட்டியலில் மேலத் திருப்பூந்துருத்தி பேரூராட்சிக்கு முதல் காலாண்டில் முதலிடமும், இரண்டாவது காலாண்டில் இரண்டாம் இடமும் வழங்கியுள்ளனர்” என்றார்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம், `நாம் மட்டும் தூய்மையாக இருந்தால் போதாது நம் சுற்றுப்புறச் சூழலும் தூய்மையாக இருக்க வேண்டும் எனப் பேரூராட்சி தரப்பில் கூறி பல்வேறு நடைமுறைகளை வகுத்தனர்.

பேரூராட்சி
பேரூராட்சி

அதற்கு நாங்கள் நல்ல ஒத்துழைப்பைக் கொடுத்து வருகிறோம். அதனால் இப்போது எங்க பகுதியே சோலைவனமாக மாறியிருப்பதுடன், சுத்தத்தில் குட்டி சிங்கப்பூராகவும் திகழ்ந்து வருகிறது'' என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு