Published:Updated:

`இறுதிக்கட்ட பிரசாரத்தில் கலந்துகொள்ளவில்லை.. ஆனாலும் வெற்றி!’- கரூர் நாகனூர் ஊராட்சி நிலவரம்

தேர்தலில் தனலெட்சுமி மற்றும் லதாவுக்கு மக்கள் தங்கள் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக தனலெட்சுமி 2,168 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கும் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு வராமல் இருந்தபோதும் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று ஜெயித்த சம்பவம் கரூரில் அரங்கேறியுள்ளது.

மருத்துவனையில் தனலெட்சுமி இருந்தபோது...
மருத்துவனையில் தனலெட்சுமி இருந்தபோது...
அ.தி.மு.க வேட்பாளரைக் கடித்த பாம்பு! - தோகைமலை அதிர்ச்சி

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள நாகனூர் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, தனலெட்சுமி என்பவர் போட்டியிட்டார். இவர், நாகனூர் ஊராட்சியின் அ.தி.மு.க கிளைச் செயலாளர் சங்கரின் மனைவியாவார். நாகனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, தனலெட்சுமி அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டார். தனலெட்சுமி கடந்த வாரம் வாக்காளர்களிடம் பரபரப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, கழுகூர் பகுதியில், தனலெட்சுமி உள்ளிட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து துறை அமைச்சரும், அ.தி.மு.க கரூர் மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்கு சேகரிக்க வருகைதந்தார். அப்போது, அமைச்சரை பிரமாண்டமான முறையில் வரவேற்க ஏதுவாக, நாகனூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் தனலெட்சுமி தனது ஆதரவாளர்களை அழைக்கச் சென்றார்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

அப்போது, அங்கிருந்த ஒரு வீட்டின் முன்பு இருந்த வேலிபடலில் கைவைத்தபடி நின்றிருந்தார். அந்த வேலியில் இருந்த விஷப்பாம்பு ஒன்று தனலெட்சுமியைக் கடித்தது. வலியால் துடிதுடித்த தனலெட்சுமியை, அவரின் கணவர் சங்கர் உள்ளிட்ட அ.தி.மு.க-வினர், முதலுதவிக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி செய்யப்பட்ட பிறகு, தனலெட்சுமி மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அபாயக்கட்டத்தில் இருந்தாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால், தனலெட்சுமியின் உயிர் காப்பாற்றப்பட்டது.

இதேபோன்று நாகனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட லதா என்பவருடைய கணவர் ராஜாவுக்கு, தேர்தல் பிரசாரத்தில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் ராஜாவை மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சையளிக்க வைத்தனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்குப் பின்பு ராஜா வீடு திரும்பினார். ஒரே ஊரைச் சுற்றி இரண்டு பதவிகளில் போட்டியிட்ட நபர் மற்றும் வேட்பாளரின் கணவருக்கு ஏற்பட்ட இந்தச் சம்பவங்கள், நாகனூர் பகுதி பொதுமக்களிடம் தீப்போல் பரவியது. அவர்களை நினைத்து மக்களும் சோகத்தில் `உச்' கொட்டினர்.

மருத்துவனையில் தனலெட்சுமி இருந்தபோது..
மருத்துவனையில் தனலெட்சுமி இருந்தபோது..

இந்த நிலையில், தேர்தலில் தனலெட்சுமி மற்றும் லதாவுக்கு மக்கள் தங்கள் வாக்குகளை வாரி வழங்கியுள்ளனர். தேர்தல் முடிவில் அ.தி.மு.க ஒன்றிய கவுன்சிலராக தனலெட்சுமி 2,168 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இதேபோன்று, மாரடைப்பால் கணவர் ராஜா பாதிக்கப்பட்ட நிலையில், அவரின் மனைவி லதா 1,582 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் நடக்கும் நாள் வரை தனலெட்சுமி மருத்துவமனையில் இருந்ததால், அவரது வெற்றிக்குப் பிறகு நாகனூர் பகுதி மக்கள், `எம்.ஜி.ஆருக்குப் பிறகு படுத்துக்கிட்டே ஜெயிச்சது தனலெட்சுமிதான்' என்று மக்கள் சிலாகித்துப் பேசுகிறார்களாம்.