Published:Updated:

`முதலில் கட்டடம்; பிறகுதான் அனுமதி'- ஊட்டி அருகே விதியை மீறி கட்டப்பட்ட போலீஸ் ஸ்டேஷன்!

உரிய கட்டட அனுமதி பெறாமல் கட்டப்பட்டதால், அருவங்காடு காவல் நிலைய புதிய கட்டடம், கடந்த பல மாதங்களாக பயன்பாட்டிற்கு திறக்கப்படாத நிலையில் உள்ளது.

Aruvankadu Police station new building
Aruvankadu Police station new building

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள அருவங்காடு காவல் நிலையம், பல ஆண்டுகளாக வெடிமருந்து தொழிற்சாலைக்கு உட்பட்ட கட்டடத்தில் இயங்கிவருகிறது. சொந்தக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதற்காக அருவங்காடு பகுதியில் குன்னூர் ஊட்டி சாலை அருகில் நிலம் தேர்வுசெய்யப்பட்டு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அருவங்காடு காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

Aruvankadu Police station new building
Aruvankadu Police station new building

ஜெகதளா பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட அளவிலான வேளாண் பொறியியல், புவியியல், வனத்துறை உள்ளிட்ட துறைகள் அடங்கிய கமிட்டியிடமும் எவ்வித அனுமதியும் பெறாமல், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தும், கடந்த பல மாதங்களாக புதிய கட்டடம் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது. 1,500 சதுர அடிக்கு மேல் கட்டப்பட்டுள்ளதால், உரிய அனுமதி பெற்றால் மட்டுமே திறக்க முடியும். காவல்துறை தரப்பில் ஜெகதளா பேரூராட்சியில் அனுமதிவேண்டி தற்போதுதான் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட அளவிலான ஏ.ஏ.ஏ கமிட்டிக்கு பேரூராட்சி நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து உதகை நகர விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜனார்த்தனன் கூறுகையில், “நீலகிரி மாவட்டத்தின் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கவும், நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களைத் தவிர்க்கும் பொருட்டும், கடந்த 1993-ம் ஆண்டு, மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக்கூடாது. நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில், 1,500 சதுர அடிக்குள் மட்டுமே கட்டடம் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. அரசுட்துறைகளே உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டுமானங்களை மேற்கொள்வது அதிர்ச்சியாக உள்ளது” என்றார்.

Aruvankadu Police station new building
Aruvankadu Police station new building

கட்டுமான விவகாரம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “அருவங்காடு காவல் நிலைய புதிய கட்டடத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பாக, ஜெகதளா பேரூராட்சியிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெறப்பட்டு கட்டடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்” என்றனர்.