Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: கைமீறும் கொரோனா பரவல் - முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்று முக்கிய அறிவிப்பு

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் எஸ்.எஸ்.சி எனப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. அதோடு முதல்வர் உத்தவ் தாக்கரே முழுமையான பொதுமுடக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தீவிரமாகப் பரவும் கொரோனாவைக் கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகள் போதிய அளவு பலனளிக்கவில்லை. தொடர்ந்து தொற்று அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. இதையடுத்து முழுமையான பொதுமுடக்கத்தைக் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலித்துவருகிறது.

இது தொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே, அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் கலந்து ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா அமைச்சரவைக் கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட அனைத்து அமைச்சர்களும் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

வர்ஷா கெய்க்வாட்
வர்ஷா கெய்க்வாட்

இதையடுத்து புதிய பொதுமுடக்கம் தொடர்பாக இன்று (21-ம்தேதி) முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக மகாராஷ்டிராவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் வரும் நாள்களில் கொரோனாவின் தாக்கம் குறையுமா என்ற கேள்வி எழுந்திருப்பதால், சி.பி.எஸ்.சி உட்பட இதர கல்வி முறை போர்டுகளும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்துசெய்துள்ளன. அதைப் பின்பற்றி மகாராஷ்டிரா அரசும் எஸ்.எஸ்.சி எனப்படும் 10-ம் வகுப்பு ஸ்டேட் போர்டு பொதுத்தேர்வை ரத்துசெய்திருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே ஆகியோர் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டனர்.

வர்ஷா கெய்க்வாட் இது குறித்துக் கூறுகையில், ``மகாராஷ்டிராவில் நிலவும் கொரோனா பரவலைக் கருத்தில்கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன. மற்ற போர்டுகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துவிட்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை பிறகு நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளன. அதே முடிவைத்தான் மகாராஷ்டிரா அரசும் எடுத்திருக்கிறது. அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறு மதிப்பெண் வழங்கப்படும் என்பது குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்பினால், நேரடித் தேர்வு எழுதவும் வாய்ப்பு கொடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை ஜூன் மாதமும், 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை மே இறுதியிலும் நடத்த அரசு திட்டமிட்டிருந்தது. தேர்வை ஆன்லைனில் நடத்த வேண்டும் என்று பெற்றோர்களில் ஒருசாரார் வலியுறுத்திவந்தனர்.

`ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கினாரா முன்னாள் முதல்வர் பட்னாவிஸ்?! - மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு

இதற்கிடையே மும்பை அருகிலுள்ள கல்யாண் சிறையில் ஒரே நேரத்தில் 30 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கிடையே மகாராஷ்டிராவில் நிலவும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க விசாகப்பட்டினத்திலிருந்து டேங்கர்களில் ஆக்சிஜன் எடுத்து வர காலி டேங்கர் லாரிகள், ரயில் மூலம் மும்பையிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு