மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வட் என்ற கிராமத்தில், கணவர் இறந்த பிறகு, பெண்களுக்கு நடத்தப்படும் சடங்குகளுக்குத் தடை விதித்து கடந்த 5-ம் தேதி பஞ்சாயத்து சார்பாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணவர் இறந்தவுடன் கையில் இருக்கும் வளையலை உடைத்தல், நெற்றிக் குங்குமத்தை அகற்றுதல், தாலியைக் கழற்றுதல் போன்ற சடங்குகள் நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இந்தப் பழங்கால பழக்க வழங்கங்களில் இருந்து பெண்களுக்கு விடுதலையளிக்கும் விதமாக, கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதற்கு மகாராஷ்டிரா அரசு வாழ்த்து தெரிவித்துள்ளது. அதோடு, இது போன்ற தீர்மானத்தை மற்ற மாநில பஞ்சாயத்துகளும் நிறைவேற்ற வேண்டும் என்று மாநில ஊரக மேம்பாட்டுத்துறைத் தெரிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது தொடர்பாக ஊரக மேம்பாட்டுத்துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கணவன் இறந்த பிறகு, பெண்களைக் கைம்பெண் ஆக்குவதற்கு நடத்தப்படும் சடங்குகளுக்குத் தடை விதித்து கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹெர்வட் கிராமம் நிறைவேற்றி இருக்கும் தீர்மானத்தை மற்ற கிராமங்களும் பின்பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். கணவரை இழக்கும் பெண்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். மனித உரிமைகளை மீறும் மற்றும் கணவரை இழந்த பெண்களின் கண்ணியத்துக்கு பங்கம் விளைவிக்கும் இது போன்ற நடைமுறைகள் அகற்றப்பட வேண்டும்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னர், கணவர் இறந்தவுடன் பெண்கள் உடன்கட்டை ஏறுதல் போன்ற கொடிய பழக்கங்களும் நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், அவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அகற்றப்பட்டது. என்றாலும், கணவரை இழக்கும் பெண்கள் பொது சமூக நிகழ்ச்சிகளில் சுதந்திரத்துடன் கலந்துகொள்ள முடியாத நிலை உள்ளிட்ட சில பழக்கங்கள் இன்றும் தொடர்ந்து வருவது வேதனை.