Published:Updated:

தாய்க்கும் மனைவிக்கும் கோயில்... மயிலாடுதுறையில் நெகிழ்ச்சியில் ஆழ்த்திய நிகழ்வு!

தாய்க்கும் மனைவிக்கும் கோயில்
தாய்க்கும் மனைவிக்கும் கோயில்

வீட்டின் முன்பு கோயில் ஒன்றைக் கட்டி அதில் தன் மனைவி மற்றும் தாயின் சிலைகளை நிறுவியிருக்கிறார். மனைவியின் முதல் நினைவு நாளான நேற்று அக்கோயிலைத் திறந்து வைந்துள்ளார்.

கர்நாடகாவில் ஒரு தொழிலதிபர், மறைந்த தன் மனைவிக்கு சிலிகான் சிலை வடித்து வீட்டு வரவேற்பறை சோபாவில் அமர வைத்தார். மதுரையைச் சேர்ந்த தொழிலதிபர் மூகாம்பிகை சேதுராமன், தன் மனைவியின் மரணத்தைத் தாங்க முடியாமல் வீட்டில் அவருக்கு ஃபைபர் சிலையை வடித்து வைத்தார். இந்த வரிசையில், மயிலாடுதுறையில், இறந்த தன் மனைவிக்கு தத்ரூபமாகச் சிலை வடித்து, அவர் மீதான தன் ஆழமான காதலை வெளிப்படுத்தியுள்ளார், ஓய்வு பெற்ற உதவிக் காவல் ஆய்வாளர் மதன்மோகன். இது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கும் மனைவிக்கும் கோயில்
தாய்க்கும் மனைவிக்கும் கோயில்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர், 71 வயதாகும் மதன்மோகன். தன் மனைவி இறந்த முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று, மனைவி மற்றும் தாய்க்கு தத்ரூபமாகச் சிலைகள் வடிவமைத்து, கோயில் ஒன்றைத் திறந்துள்ளார். மதன்மோகனின் மனைவி, 61 வயது மீனாட்சியம்மாள் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். 40 ஆண்டுக்காலம் இல்லற உறவு, 5 மகள்கள், அனைவருக்கும் திருமணத்தை முடித்த திருப்தி என்று கண்ணுக்கு அழகாக வாழ்ந்து வந்தனர்.

ஆரம்பகாலத்திலிருந்து மதன்மோகனின் மிகக் கடினமான வாழ்க்கைச் சூழலில், அவரின் மனைவி கொடுத்த ஊக்கத்தாலேயே அனைத்தையும் கடந்துவந்துள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகு, மயிலாடுதுறையின் முக்கியத் தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்தார்.

தாயக்கும் மனைவிக்கும் கோயில்
தாயக்கும் மனைவிக்கும் கோயில்

இவ்வாறு தன் கடின காலத்தில் தன்னுடன் தோள்கொடுத்து நின்ற மனைவியின் மறைவை மதன்மோகனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால், மனைவியின் நினைவைப் போற்றும் வகையில் தன் வீட்டின் முன்பு கோயில் ஒன்றை கட்டி அதில் தன் மனைவி மற்றும் தாய் கமலாம்பாள் சிலைகளைத் தத்ரூபமாக வடிவமைத்து நிறுவியிருக்கிறார். மனைவியின் முதல் நினைவு நாளான நேற்று அக்கோயிலைத் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் கருடானந்த சுவாமிகள், மயிலாடுதுறை எம்.பி ராமலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு