Published:Updated:

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

வெ.நீலகண்டன்

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

வெ.நீலகண்டன்

Published:Updated:
வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

மக்குத் தெரிந்த சில படிப்புகள், சில நுழைவுத்தேர்வுகள்..இவையே உலகம் என்று நினைப்பதே பல பிரச்னைகளுக்குக் காரணம். எத்தனையோ வாய்ப்புகள் நம் கண்ணுக்குத் தெரியாமல், கைகளுக்கு முன்னால் காத்துக்கிடக்கின்றன.

‘மருத்துவப் படிப்பென்றால் எம்பிபிஎஸ், பிடிஎஸ்  மட்டும் தான்’ என்று பலர் கருதுகிறார்கள். ஆனால் மருத்துவம் சார்ந்த பலநூறு படிப்புகள் இருக்கின்றன.

“நர்சிங், பிசியோதெரபி, ஆக்குபேஷனல் தெரபி, கார்டியாக் டெக்னாலஜி, கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, நியூக்ளியர் மெடிசின் டெக்னாலஜி என மருத்துவம் சார்ந்த ஏராளமான பட்டப் படிப்புகள் இருக்கின்றன. இந்தப் படிப்புகளை முடித்தவர்கள், அதிகப்பட்சம் 5 ஆண்டுகளில் மிகச்சிறந்த இடத்தில் அமரமுடியும். இந்தியாவின் முக்கிய மருத்துவத் தலைநகரமாக சென்னை, கோவை போன்ற நகரங்கள் வளர்ந்து வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு. வெளிநாடுகளில் இருந்து மருத்துவச் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளை முடிப்போருக்கு, கைநிறைய சம்பளத்தில் உடனடியாக வேலை கிடைக்கும்...” என்கிறார் கல்வியாளர் ராஜராஜன்.

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

நீட் தேர்வு மட்டுமல்ல... எம்.பி.பி.எஸ் படிப்புக்கு அகில இந்திய அளவில் மேலும் இரண்டு நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுதுமுள்ள எய்ம்ஸ் (AIIMS-All India Institute of Medical Sciences) மருத்துவக் கல்லூரிகளில் படிப்பதற்காக ஒரு தேர்வு நடத்தப்படும். பாண்டிச்சேரியிலும், காரைக்காலிலும் உள்ள ஜிப்மர் (JIPMER ) மருத்துவக் கல்வி நிறுவனத்தில் சேர தனி நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மத்தியத் தொகுப்புக்கான 15 சதவிகித இடங்கள் போக மீதமிருக்கும் இடங்கள், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படும். அதேசமயம்,  தமிழகக் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் நீங்கலாக, மத்தியத் தொகுப்புக்கு வழங்கும் 15 சதவிகித இடங்களில் மாணவர்களைச் சேர்க்கவும்,  இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசின் கால்நடை மருத்துவக் கல்வி நிறுவனங்களில்  B.V.Sc படிக்கவும்,  All India Pre Veterinary Test என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.  பிளஸ் டூவில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!மருத்துவத்தை விட்டால் மாணவர்களின் அடுத்த தேர்வு பொறியியல் தான். மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்... இவைதான் பெரும்பாலான மாணவர்களின் தேர்வாக இருக்கிறது.  இவற்றைக்கடந்து,  தேர்வு செய்ய  தமிழகத்தில் 80 பொறியியல் பாடப்பிரிவுகள் உண்டு.

“ பொறியியலில், குறிப்பிட்ட ஒரு படிப்புக்குத் தான் எதிர்காலம் என்று சொல்வதும் தவறு. சிவில், மெக்கானிக்கல் முதல் மைனிங் இன்ஜினீயரிங், ஏரோநாட்டிக்கல் வரை எல்லாப் படிப்புகளுக்கும் எதிர்காலம் உண்டு. பொறியியல் துறை பிரமாண்டமாக வளர்ந்து கொண்டேதான் இருக்கும். பத்தாண்டுகளுக்கு முன்பு தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளரும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். இன்று ஒரு கடல் போல அது விரிந்து விட்டது. அதனால், பொறியியலில் எந்தப் படிப்பு படித்தாலும் வாய்ப்புகளுக்குக் குறையில்லை.

இந்தியாவிலும் பிற நாடுகளிலும் சுரங்கத் தொழில் உச்சம் பெற்றுவருகிறது. அதனால் இந்தச் சூழலில் மைனிங் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்வு செய்வது நல்லது. ஆனால், அந்தப் பணிச்சூழலைத் தெரிந்துகொண்டு படிப்பைத் தேர்வு செய்ய வேண்டும்.  இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளுக்கு எக்காலமும் தேவையிருக்கும். இந்தப் படிப்புகளை முடிக்கும் அறிவார்ந்த ஒருவர், முதலீடே இல்லாமல் வெறும் ஐடியாக்களை மட்டுமே கொண்டு   முன்னுக்கு வரமுடியும்.

வாய்ப்புகளை வசப்படுத்துங்கள்!

இன்று கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருக்கிற சுந்தர்பிச்சை,  படித்தது மெட்டலர்ஜிக்கல் இன்ஜினீயரிங்கும், மெட்டீரியல் சயின்ஸும். கூகுளுக்கு சிஇஓ ஆகவேண்டும் என்ற இலக்கோடு அவர் படிக்கவில்லை.  ஆனால், ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் படித்தார். எல்லாத் துறைகளிலும்  அறிவை வளர்த்துக்கொண்டார்.  அதேபோல, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம்ராஜன், டெல்லி ஐ.ஐ.டி.யில் எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர். பொறியியல் படிக்கும்போது ரிசர்வ் வங்கியின் கவர்னராக வேண்டும் என்பது அவரது இலக்கில்லை. வளர்த்துக்கொண்ட திறமையும், தேடலுமே அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்த்தது...” என்கிறார் கல்வியாளர் நெடுஞ்செழியன். 

காந்திநகர் ஐ.ஐ.டியில், M.Sc in Cognitive Science என்ற ஒரு படிப்பு இருக்கிறது. பி.ஏ, பி.எஸ்.சி. பி.டெக், பி.காம் படித்த எவரும் இந்தப்படிப்பில் சேரலாம். மாதமாதம் 5000 ரூபாய் உதவித்தொகை தருகிறார்கள். வெளிநாட்டில் போய் படிக்க 60 ஆயிரம் பணம் தருகிறார்கள். ஆனால், யாரும் இந்தப் படிப்பைச் சீண்டுவதேயில்லை. இதுமாதிரி  இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் நூற்றுக்கணக்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

டேராடுனில் உள்ள இந்திய ராணுவக் கல்லூரி , கேரளா, எழில்மலாவில் உள்ள இந்திய கடற்படைக் கல்லூரி, ஐதராபாத்தில் உள்ள விமானப்படைக் கல்லூரிகளில் இளநிலை அறிவியல், தொழில்நுட்பப் படிப்புகளை முடித்து நேரடியாக ராணுவ அதிகாரியாக பணியில் இணைவதற்காக NDA (National Defence Academy) என்ற நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் கல்விச்செலவு முழுவதையும் அரசே எற்றுக்கொள்ளும். பிளஸ் டூவில் கணிதம், இயற்பியல், வேதியியல் படித்தவர்கள் இக்கல்லூரிகளில் சேரலாம். சேர்க்கை அறிவிப்பு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானபிறகு வரும்.

மும்பையில் உள்ள ஜெம்மாலஜிக்கல் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா என்ற நிறுவனம் ஜெம்மாலஜி துறையில் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளை வழங்குகிறது. இங்கு பட்டம் பெறுபவர்கள் லண்டன் ஜெம்மாலஜிக்கல் அசோசியேஷன் நடத்தும் உலகளாவிய தேர்வில் பங்கேற்று சர்வதேச அளவில் வேலை பெறலாம்.

நிகழ்காலத்தை யார் சரியாகப் பயன்படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான் எதிர்காலம் சிறப்பாக அமையும். கனவுகளை விசாலமாக்கிக் களத்தில் இறங்குங்கள்! காலம் உங்கள் கரத்துக்குக் கட்டுப்படும்!

“படிப்பைத் தேர்வு செய்யும்போதே, ஐந்தாண்டுகள் கழித்து எவ்வளவு சம்பளம் கிடைக்கும், என்ன வேலை கிடைக்கும் என்ற சிந்தனையோடு செய்யாதீர்கள். நீங்கள்,எந்த அளவுக்கு ஈடுபாட்டோடு, உற்சாகத்தோடு, தேடலோடு படிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் எதிர்காலம் சிறக்கும்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism