Published:Updated:

“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“

“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“
பிரீமியம் ஸ்டோரி
News
“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“

மருந்தாளுநர் கல்லூரியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மாணவர்கள்

‘கல்லூரியில் சேர அனுமதி... ஆனால், தேர்வு எழுத அனுமதி இல்லை’ என்கிற விநோதச் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள், 137 மாணவர்கள். நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ‘பாத்திமா காலேஜ் ஆஃப் ஃபார்மஸி’ என்ற கல்லூரி உள்ளது. 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் ஏராளமான மாணவர்கள் அதில் படித்து வந்துள்ளனர். இடையில் என்ன நடந்ததோ... 2014-15 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையின்போது திடீரென விழித்துக்கொண்ட டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், இந்தக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் தேர்வெழுதும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

இதுபற்றிப் பேசிய வழக்கறிஞர் ஜி.ரமேஷ், ‘‘கல்லூரிக்கான அனுமதி ரத்துசெய்யப்பட்ட போதிலும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளின் பட்டியலில் இந்தக் கல்லூரி பெயரும் இருக்கிறது. எனவே இந்தக் கல்லூரியில், ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சேர்கிறார்கள். பெரும்பாலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநில மாணவ, மாணவிகளே அதிகமாக ஏமாந்துவிடுகிறார்கள்.

“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“

2014-2015-ம் கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு அந்த ஆண்டில் தேர்வு எழுத அனுமதி கொடுக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவு பெற்று 2016-ல் தேர்வு எழுதினர். ஆனாலும் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. அந்த மாணவர்கள் இந்த வருடம் கல்லூரிப் படிப்பை முடித்துச்செல்ல வேண்டிய நிலையில், அடுத்த தேர்வை எழுதுவது எப்படி என்பது பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. மாணவர்களுக்குப் பதிவு எண் வழங்கியதுடன், அவர்களிடமிருந்து கல்வி மற்றும் தேர்வுக் கட்டணங்களைப் பெற்றுக்கொண்ட பல்கலைக் கழகம், தேர்வு எழுத மட்டும் அனுமதிக்காமல் இருப்பது சட்ட விரோதம்’’ என்றார்.

இதுபற்றிப் பேசிய மாணவர்கள், ‘‘எங்களிடம் ரூ. 40,000 முதல் ரூ.1,00,000 வரை பெற்றுக்கொண்டு சீட் கொடுத்தனர். ஹாஸ்டல் கட்டணமாக ரூ10,000, உணவுக்காக மாதம் ரூ.3,000  வசூலித்தனர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் இருந்ததால், கல்லூரியில் சேர்ந்தோம்.  கல்லூரி கட்டடத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். ‘வேறு இடத்தில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. விரைவில் அங்கு சென்றுவிடலாம்’ என்றார்கள். சேர்ந்த பிறகுதான், நாங்கள் ஏமாற்றப்பட்ட விவரமே தெரியவந்தது. எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது. நான்கு  ஆண்டுகள்  படித்து முடித்துச்செல்ல வேண்டிய நிலையில், தேர்வு எழுத முடியாமல் தவிக்கிறோம். எங்களுக்கு மாற்று கல்லூரிகளில் சேர்க்க தமிழக அரசு நடவடிக்கை வேண்டும்’’ என்று கலங்கினார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“

இதுபற்றிக் கல்லூரியின் நிர்வாகியான ரவி என்ற முகைதீன் பாஷாவிடம் கேட்டதற்கு, ‘‘அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (AICTE) மற்றும் ஃபார்மஸி கவுன்சில் ஆஃப் இந்தியா (PCI) ஆகிய இரண்டும் கடந்த ஆண்டு வரை மாணவர் சேர்க்கையை நடத்த எங்களுக்கு அனுமதி அளித்திருக்கின்றன. இந்த ஆண்டுகூட மாணவர் சேர்க்கை நடத்த ஏ.ஐ.சி.டி.இ அனுமதி அளித்துள்ளது. ஆனால், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்நோக்கத்துடன் எதையோ எதிர்பார்த்து, எங்கள் மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்காமல் காலம் தாழ்த்துகிறது.

அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் எங்கள் கல்லூரியின் பெயர் உள்ளது. மாணவர் சேர்க்கையை நடத்த தடை விதிக்கவில்லை. ஆனால், 2016 பிப்ரவரியில் உயர் நீதிமன்றம் தேர்வுகளை நடத்துமாறு உத்தரவிட்டும் அதற்கான முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தியது பல்கலைக்கழகம். இப்போது வரை மதிப்பெண் சான்றிதழ்களைத் தராமல் இழுத்தடிக்கிறது. தேர்வு எழுத ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று அனுமதி வாங்க முடியுமா? இப்போது, பல்கலைக்கழகம்மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்’’ என்றார்.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் விளக்கத்தை அறிய துணைவேந்தரைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தோம். அவர் மீட்டிங்கில் இருப்பதாகவும் பதிவாளரிடம் பேசுமாறும் சொன்னார்கள். அதனால் பதிவாளர் பாலசுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டோம். ‘‘அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக்கழகம் அங்கீகாரத்துக்கு உட்படுத்தாத சில விஷயங்களை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல், மாணவர்களுக்கு வகுப்புகளும் நடத்தாமல் இந்தக் கல்லூரி உள்ளது. பிறகு, அந்த மாணவர்களை எப்படி தேர்வு எழுத அனுமதிக்க முடியும்?

“அட்மிஷன் ஓகே... ஆனால் தேர்வு எழுதக்கூடாது!“

அவர்கள் எந்தத் தேர்வுக் கட்டணமும் எங்களுக்குச் செலுத்தவில்லை. நாங்கள் கல்லூரியை ஆய்வு செய்யச் சென்றபோது அதைக் கல்லூரி நிர்வாகம் தடுக்கும் வகையில் நடந்துகொண்டது. மீண்டும் உயர் நீதிமன்ற உத்தரவு பெற்று ஆய்வுக்குச் சென்றபோதுகூட கல்லூரி பூட்டப்பட்டிருந்தது. இணையதளத்தில் அந்தக் கல்லூரியின் பெயர் நீடிப்பதற்கு, இணையதளம் புதுப்பிக்கப்படாமல் இருப்பது காரணமாக இருக்கலாம். உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மாணவர் நலன் சார்ந்து நாங்கள் முடிவெடுப்போம்” என்று முடித்துக்கொண்டார்.

கல்லூரி நிர்வாகத்துக்கும் பல்கலைக்கழகத்துக்கும் இடையே நடக்கும் ஈகோ யுத்தத்தில் அப்பாவி மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது.

- பி.ஆண்டனிராஜ், ச.முத்துகிருஷ்ணன்
படங்கள்: எல்.ராஜேந்திரன், ஆர்.எம்.முத்துராஜ்