Published:Updated:

மனிதர்களை வைத்து மருத்துவ ஆய்வு - கோவை கூலித் தொழிலாளிக்கு ஹார்ட் அட்டாக்..!

மனிதர்களை வைத்து மருத்துவ ஆய்வு - கோவை கூலித் தொழிலாளிக்கு ஹார்ட் அட்டாக்..!
மனிதர்களை வைத்து மருத்துவ ஆய்வு - கோவை கூலித் தொழிலாளிக்கு ஹார்ட் அட்டாக்..!

வறுமை காரணமாக, மனிதர்களை வைத்து ஆய்வுசெய்யும் கும்பலிடம் சிக்கி, கோவையில் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (36). இவர், கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள காஸ்டிங் நிறுவனத்தில் பணிசெய்துவந்தார். இந்நிலையில், குடும்பச் சூழ்நிலை காரணமாக அருகில் உள்ள நண்பர் மூலம் வெள்ளக்கிணறு அருகில் உள்ள ஸ்பானிஸ் என்னும் லேப்பில் சத்து மாத்திரை ஆய்வுப் பரிசோதனைக்குச்  சென்றுள்ளார்.ஆனால் அங்கு சென்றவுடன் முழு உடல் பரிசோதனை செய்துவிட்டு, மனித உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்கான ஆய்வுசெய்யப்போவதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுக்கு முன்பு, கிருஷ்ணமூர்த்தியின் உடல் மற்றும் இதயத்தை முழுமையாகப் பரிசோதனை செய்துள்ளனர். பின்னர், இவருக்கு கொழுப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக உணவு கொடுத்துள்ளனர்.அதேபோல, கொழுப்பை அதிகரிக்கும் மருந்து மாத்திரைகளையும் கொடுத்துள்ளனர். இப்படி அதிகப்படியான கொழுப்பு கொடுத்ததால், கிருஷ்ணமூர்த்திக்கு இதயப் பகுதியில் அடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அளவுக்குச் சென்றுவிட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி, “என் குழந்தை மற்றும் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவச் செலவுக்கு நண்பர் சரவணனிடம் இரண்டாயிரம் ரூபாய் பணம் கேட்டிருந்தேன். ஆனால், சரவணனிடம் பணம் இல்லாததால், ‘சத்து மாத்திரை பரிசோதனை நிலையத்தில் ஆய்வுக்குச் சென்றால் பணம் கிடைக்கும். நானும் கஷ்டமான நேரத்தில் அங்குதான் செல்வேன்’ என்றார். இதனால், நான் அங்கு சென்றேன். அங்கு, ‘கொழுப்பைக் குறைப்பதற்கான புதிய மருந்தாய்வுக்கு உட்படுத்த உள்ளோம், 3 நாள்கள் தங்கி ஆய்வுசெய்தால், எட்டாயிரம்  ரூபாய் தருகிறோம்.  எந்த பக்க விளைவும் கிடையாது. பாதிப்புகள் ஏற்பட்டால் முழுப்பொறுப்பு நிர்வாகம் எடுத்துக்கொள்ளும்’ என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால்,  அதிக கொழுப்பு ஏறி இதய பாதிப்புக்குள்ளான நான், எனது உடல் பாதிப்புக்கு தீர்வு கேட்டபோது, ‘என் உடலில் ஏற்பட்ட பாதிப்புக்கும் ஆய்வு நிலையத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று கூறுகின்றனர். ஏழ்மையின் கொடுமையால் இந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுவிட்டேன். என்னைப் போன்று யாரும் இதுபோன்ற மோசமான நிலைக்குப் போகக் கூடாது. பாதிக்கப்பட்ட நான் வழக்கறிஞர் மூலம் புகார் தெரிவித்துவிட்டேன். இன்னும் எத்தனை பேர் என்னைப்போன்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்பது தெரியவில்லை. எனவே, காவல்துறை அதிகாரிகளும், மருத்துவ அதிகாரிகளும் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு தர வேண்டும்” என்றார்.

இந்த மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு முறை ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக , கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகாரும் அளித்துள்ளார் கிருஷ்ணமூர்த்தி.

இதுகுறித்து ஸ்பானிஸ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க நேரில் சென்றபோது, "உள்ளே யாரும் இல்லை. யாரையும் அனுமதிக்க மாட்டோம்" என்று அனுமதிக்க மறுத்துவிட்டனர். மேலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும் அழைப்பை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் கொடுத்தால், பரிசீலனைக்குப் பிறகு அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.