தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

ஒரு பெற்றோரின் போராட்டம்

ஒரு பெற்றோரின் போராட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு பெற்றோரின் போராட்டம்

நெகிழ்ச்சி

‘`என் புள்ளைக்குப் பத்து வயசாகுது. ஆனா, எங்களைக்கூட யாருனு அவனுக்குத் தெரியாது. பேச்சு வராது. எல்லாம் படுத்த படுக்கையிலேயேதான். தானா எழுந்து நிக்க முடியாது. எப்போ தூங்குவான், எப்போ முழிப்பான்னு கணக்கில்லை. ஒரு நாளைக்கு 20 தடவை வலிப்பு வரும். சத்தமா அழுவான். பிரசவத்தப்போ டாக்டருடைய அலட்சியத்தால அவனுக்கு இப்படி ஆகிடுச்சு. போகாத ஆஸ்பத்திரியில்லை; பார்க்காத வைத்தியமில்லை. இனியும் முடியாதுங்கிற கட்டத்துக்கு வந்துட்டோம். அதனாலதான்...’’ - வார்த்தைகளை முடிக்க முடியாமல் அழுகிறார்கள், சசி கலா - திருமேனி தம்பதி... தங்கள் மகனைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடிய ஏழைப் பெற்றோர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றை ஆய்வுக்கு நியமிக்க, ‘சிறுவனைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க முடியாது’ என்று அந்தக் குழு அறிக்கை சமர்ப்பித்தது. அதை வாசிக்கும் போதே நீதிபதி கண்ணீர் வடித்தார். அந்த உருக்கமான வழக்கின் மூலத்தைத் தேடிச் சென்றோம்.

கடலூர் மாவட்டம் சோழதரம் அருகே உள்ள திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த திருமேனி - சசிகலா தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். பாவனா, சக்தி என இரண்டு பெண் பிள்ளைகளை அடுத்து மூன்றாவதாகப் பிறந்த மகன் பாவேந்தனுக்குத்தான் இந்த நிலைமை.

‘`2008-ம் வருஷம், எனக்குப் பிரசவவலி எடுத்ததும் காட்டு மன்னார்கோயில்ல இருக்கிற ‘ஷர்மிளா’ ஆஸ்பத்திரிக்குப் போனோம். அங்கே உதவி யாளர்கள்தான் பிரசவம் பார்த்தாங்க. பாவேந்தன் பொறந்ததும் எங்க வீட்டுல எல்லாருக்கும் சந்தோஷம். ஆனா, குழந்தை அழலை. டாக்டர் அங்கயற்கண்ணிகிட்ட கேட்டோம். ‘நாங்க பிரசவம்தான் பார்ப்போம். குழந்தைங்க டாக்டர்கிட்ட காட்டிக் கோங்க’னு சொல்லிட்டாங்க.

ஒரு பெற்றோரின் போராட்டம்

பதறியடிச்சு, காட்டுமன்னார் கோயில், சிதம்பரம்னு போய் குழந்தைகள் டாக்டர்கள் பலரைப் பார்த்தோம். ஆனா, குழந்தை வளர வளர, அந்தந்த மாசத்துக்கான எந்த வளர்ச்சியும் இல்லை. பணம் தான் கரைஞ்சுதே தவிர, பலன் ஒண்ணும் கெடைக்கலை. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவமனை, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, கேரளா கோழிக்கோடு, திருவனந்தபுரம்னு சிகிச்சைக்காக அலைஞ்சோம். எல்லா டாக்டர்களுமே குணமாக்க முடியாதுனு சொன்னதோடு, ‘பிரசவத்தப்போ குழந்தையை ஆயுதம்போட்டு எடுத்திருக் காங்க. அந்த பாதிப்புனாலதான் குழந்தைக்கு வலிப்பு வருது’னு சொன்னாங்க’’ என்று மறுகுகிறார் சசிகலா.

திருமேனி, மொத்த நம்பிக்கை யும் கரைந்து போனவராகப் பேசினார். ‘`நான் டெய்லர் கடை வெச்சிருந்தேன். நானும் என் மனைவியும்தான் மகனை ராவும் பகலுமா தொடர்ந்து பக்கத்துலேயேயிருந்து கவனிச்சுக்குறோம். அதனால கடையை மூடிட்டு இப்போ வீட்டுலேயே தைக்கிறேன். வீட்டு மனை, விவசாய நெலம் எல்லாத்தையும் புள்ளைக்கு வைத்தியம் பார்க்குறதுக்காக வித்துட்டோம். குடியிருக்குற வீடும் அடமானத்துல இருக்கு. பொம்பளப் புள்ளைங்களைப் படிக்கவைக்கவும் சாப்பாட்டுக்கும் ஒருத்தர் உதவி செய்றார். நான், என் பொண்டாட்டி, பொண்ணுங்களெல்லாம் நல்லா தூங்கி, சாப்பிட்டுப் பல வருஷமாச்சு.

என் மகன் படுற வேதனையை எப்படிச் சொல்றது? தன்னையே அவனால உணர முடியாது. தலை ஆடிக்கிட்டே இருக்கும். ஒரு நாளில், எப்போ, எத்தனை தடவை வலிப்பு வரும்னே தெரியாது. படுக்கையிலேயேதான் எல்லாம். அவன் சத்தம் போட்டு அழும்போது நாங்க செத்து செத்துப் பொழைக்குறோம். இப்போ 10 வயசுப் புள்ளைனு தூக்கிக்கொள்ள முடியுது. வளர வளர, எங்களாலயும் அது முடியாது. ஏன்னா, மனக்கவலையில எங்களுக்கும் இப்போ பல நோய்ங்க வந்துடுச்சு. உடம்புல எத்தனை நாள் வலுவிருக்கும்னு தெரியாது. எங்களுக்கு அப்புறம் அவன் என்னாவான்? அதனால குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்குக்கூட வந்தோம். ஆனா, எங்க பொண்ணுங்க என்ன பாவம் செஞ்சதுங்க? வேற வழி இல்லாமத்தான் கருணைக்கொலைக்கு மனுக் கொடுத்தோம்’’ என்கிறார் கையறு நிலையில் இருக்கும் அந்தத் தகப்பன், தேம்பியபடியே...

சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமேனியின் வேண்டுகோளைப் பரிசீலித்த நீதிபதிகள், சிறுவனைப் பரிசோதனை செய்யச் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைத்தனர். அந்தக் குழு ஆய்வு செய்து அறிக்கையைச் சமர்ப்பித்தது.

ஒரு பெற்றோரின் போராட்டம்

‘வலிப்பு நோய், மூளை பாதிப்பால் அவதியுறும் அந்தச் சிறுவனால், தனது பெற்றோர், சகோதரிகளின் குரலைக் கேட்டு உணர முடிகிறது. ஆனாலும், அவனை குணமாக்கும் மருத்துவ வளர்ச்சி இப்போது இல்லை. என்றாலும், யாரேனும் ஒருவரின் பராமரிப்பு மற்றும் சிகிச்சைகளுடன் ஆயுள் முழுக்க படுத்த படுக்கையிலேயே அவனால் வாழ முடியும். எனவே, சிறுவனைக் கருணைக்கொலை செய்ய அனுமதிக்க முடியாது’ என்ற அந்த அறிக்கையை வாசிக்கும்போதே நீதிபதி என்.கிருபாகரன் கண்ணீர்விட்டு அழுதது, நீதிமன்றத்தையே சில நொடிகள் மௌனிக்கச் செய்தது.

‘`தீர்ப்புக்கு அப்புறம், ஒரு தொண்டு நிறுவனத்துலே இருந்து, என் பையனை அங்கே கொண்டுட்டு வந்துவிடச் சொல்லியும், அவங்க பார்த்துக்குறதாகவும் சொன்னாங்க. வேணாங்கய்யா... இன்னும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் எங்க புள்ளைய நாங்களே பாத்துக்குறோம்’’ - இம்முறை கண்ணீர் வரவில்லை அவர்கள் கண்களில். அது கூடுதலாக வதைத்தது நம்மை.

- ஜி.சதாசிவம், படங்கள் : எஸ்.தேவராஜன்