Published:Updated:

பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

அலட்சியம் காட்டுகிறதா அரசு?

பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

அலட்சியம் காட்டுகிறதா அரசு?

Published:Updated:
பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!
பிரீமியம் ஸ்டோரி
பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை முடக்கிப்போட்ட பன்றிக் காய்ச்சல், இப்போது மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. சென்னை, கோவை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பரவிவரும் பன்றிக் காய்ச்சலுக்கு மருத்துவர்கள் சிலரும் தப்பவில்லை. வழக்கமாக குளிர்காலத்தில் வீரியம் கொள்ளும் பன்றிக்காய்ச்சல், இந்த முறை முன்கூட்டியே பரவத் தொடங்கியிருப்பதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

2015-ல் இந்தியாவில் 42,592 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 2,990 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 898 பேரில் 29 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் நவம்பர் தொடங்கி பிப்ரவரி வரை பன்றிக்காய்ச்சல் பரவினாலும், 2015-ம் ஆண்டு அளவுக்கு உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு குளிர் காலம் தொடங்குவதற்கு முன்பே பன்றிக்காய்ச்சல் வீரியம் கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ‘தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் இறந்துள்ளனர். ஆனாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது’ என்று தமிழக அரசு கூறுகிறது. ஆனால், ‘கடந்த ஆண்டைவிட நோயின் பாதிப்பு அதிகம். தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துங்கள்’ என்று அரசை எச்சரிக்கிறார்கள் களத்தில் இருப்பவர்கள்.

பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

நெல்லை அரசு மருத்துவமனை பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயது பள்ளி மாணவர் ஒருவர் மரணடைந்துள்ளார். இங்கு தோல்நோய்ப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர் கல்யாண்குமார், பன்றிக்காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் மனைவி, அம்மா, தந்தை ஆகியோருக்கும் பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதால், அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினர். நெல்லை, மணப்படைவீடு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் என்பவரின் 16 வயது மகன் வேலு, வயிற்று வலியும் காய்ச்சலும் இருந்த நிலையில் திடீரென உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் கூறும் நிலையில், சுகாதாரத் துறையினர் அதை மறுத்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் கண்ணன், “அரசு மருத்துவர் கல்யாண்குமாருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தும்மல், இருமல் மூலமாக இந்தக் காய்ச்சல் பரவும் என்பதால், காய்ச்சலின்போது அவரைச் சந்தித்த 33 பேருக்கு முன்னெச்சரிக்கையாக மருந்து தரப்பட்டுள்ளது’’ என்றார்.

சமூக ஆர்வலரான குறிச்சி சுலைமான், ‘‘கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இங்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  ஆனாலும், கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தமிழக எல்லைக்குள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. காவல்துறையினரின் செக் போஸ்டுகளை மீறி அவை எப்படி தமிழக எல்லைக்குள் வருகின்றன என்பதே மர்மமாக இருக்கிறது. இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பதால், பன்றிக்காய்ச்சல் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. அதனால் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்’’ எனக் கேட்டுக் கொண்டார்.

இதேபோல் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊட்டி ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் அப்துல் ரகுமான் உயிரிழந்துள்ளார். பல்லடம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரும், சாய்பாபா காலனியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். திருச்சி மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சென்னையில் சட்டப்பஞ்சாயத்து அமைப்பின் நிர்வாகியான செந்தில் ஆறுமுகத்தின் மனைவி புவனேஸ்வரி கடந்த வாரம் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து பேசிய செந்தில் ஆறுமுகம், “என் மனைவியை தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். தகவல் தெரிந்தவுடன் அரசுத் தரப்பில் பன்றிக்காய்ச்சல் குறித்த விவரங்களைப் பதிவு செய்தனர். அரசுத் தரப்பில் மக்களுக்கு இந்த விஷயத்தில் எந்தளவு அக்கறை காட்டுகிறார்கள் என்பதை அறிவதற்காக, பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகளை சென்னை மாநகராட்சியில் கேட்டேன். பலமுறை அலைக்கழித்த பின்பு, நான்கு நாள்கள் கழித்தே மாத்திரைகளைக் கொடுத்தனர். பன்றிக்காய்ச்சல் விஷயத்தில், சுகாதாரத் துறை கண்துடைப்புக்காக மட்டுமே பணிகளைச் செய்கிறது” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பருவத்துக்கு முன்பே பரவும் பன்றிக் காய்ச்சல்!

தமிழக அரசின் முன்னாள் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ, “தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பன்றிக் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, துறைமுகங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியர் தலைமையில் மாதாமாதம் பன்றிக்காய்ச்சல் ஆய்வுக் கூட்டம் நடைபெற வேண்டும்” என்றார்.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, “சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஆனால், ‘அவுட் பிரேக்’ அளவுக்கு ஒரே பகுதியில் அதிகமானோர் பாதிக்கப்படவில்லை. 12 லட்சம் டாமிஃப்ளூ மாத்திரைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளைக் கையாளும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், நோயாளிகளின் உடனிருப்போர், உறவினர்கள் என அனைவருக்கும்  முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மையங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது. தமிழகத்தின் எந்தப் பகுதியில் இருந்தும் மாதிரியை அனுப்பி பரிசோதனையை மேற்கொள்ள முடியும். பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் இருக்கிறது. யாரும் பீதியடைய வேண்டாம்” என்றார்.

- பி.ஆண்டனிராஜ், சி.ய.ஆனந்தகுமார், இரா.குருபிரசாத், ஜெனி ஃப்ரீடா
படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism