Published:Updated:

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக திரளும் மகளிர் அமைப்புகள்!

ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக திரளும் மகளிர் அமைப்புகள்!
ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக திரளும் மகளிர் அமைப்புகள்!

சாத்தூர் கர்ப்பிணிக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கும் அதேபோல் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக எழுப்பிய புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கர்ப்பமாக இருந்தபோது ஹீமோகுளோபின் குறைவால் தனக்கு ஏற்றபட்ட ரத்தத்தின் மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாகப் புகார் எழுப்பியிருக்கிறார். உதவிக்கு யாரும் இல்லாத நிலையில் மருத்துவ அறிக்கையை ஆதாரமாகக் கையில் வைத்துக்கொண்டு, அரசின் உதவியைக் கேட்டு அலைந்துகொண்டிருக்கிறார். “கடந்த 2017 டிசம்பரில் நான் இரண்டாவது முறையாகக் கருவுற்றிருந்தேன். முதல் குழந்தைக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தோம். வீட்டுல கொஞ்சம் பணக் கஷ்டம் இருந்ததால் இரண்டாவது பிரசவத்தை அரசு மருத்துவமனையிலேயே பார்த்துக்கலாம்னு என்னோட கணவர் சொன்னார். இதனால் மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போனோம். அவங்க சொன்ன மாதிரி பக்கத்துல இருக்குற தனியார் ஹாஸ்பிட்டல்ல எல்லா டெஸ்ட்டும் எடுத்தேன். அந்த ரிப்போர்ட்ல எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லைன்னு சொன்னாங்க. அதைத் தொடர்ந்து மாங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே தொடர்ந்து சிகிச்சை எடுத்துகிட்டு வந்தேன்.

05.04.2018 அன்று மீண்டும் டெஸ்ட்டுக்குப் போனபோது உங்களுக்கு ரத்தத்துல ஹீமோகுளோபின் குறைவா இருக்குன்னு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினாங்க. அங்கு ரெண்டு பாட்டில் ரத்தம் ஏற்றினாங்க. 15 நாள் சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு வந்துட்டோம். பிரசவத்துக்காக மீண்டும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு வந்த பிறகு உங்களுக்கு ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொல்லிட்டாங்க. அவங்க ரத்தம் ஏத்துன பிறகுதான் ஹெ.ஐ.வி வைரஸ் எனக்கு வந்திருக்கு. இதுகுறித்து அரசாங்கத்திடம் மனு கொடுத்தும் எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை. இதனால எங்க குடும்பமே சிதைஞ்சு போச்சு” எனப் புகார் அளித்திருக்கிறார் அந்தப் பெண்.

இதைத் தொடர்ந்து மாங்காட்டில் உள்ள அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள், அவரிடம் நடந்தவற்றைக் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறிய நிலையில் மாங்காடு அரசு சுகாதார நிலையத்துக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்துக் கேட்டறிந்தனர். ‘மருத்துவர்களின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம். சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹெச்.ஐ.வி பாதிப்புக்குள்ளான அந்த பெண்ணுக்கு அரசுப்பணி, நிவாரணத் தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்’ என்கிறார்கள். பல்வேறு அமைப்புகளும் அந்த பெண்ணுக்கு ஆதரவாகக் களம் இறங்க இருப்பதாகக் கூறுகிறார்கள்.