Published:Updated:

குடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

குடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!
குடிகாரர்களால் உயிரிழந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்!

நெல்லை மாவட்டத்தில் மது போதையில் சென்ற இளைஞர்கள் எதிரே பைக்கில் வந்தவர் மீது மோதியதில், இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அவர் மூளைச்சாவு அடைந்ததால் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிக்குமார். 39 வயதான இவர் தனியார் நிறுவனத்தில் கணக்கராகப் பணியாற்றி வந்தார். அவரது தந்தை கணபதி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், தாய் சாந்தாவுடன் பழனிக்குமார் வசித்து வந்தார். கடந்த 2-ம் தேதி இவர் பணி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது எதிரே ஒரே பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். 

குடிபோதையில் இருந்த அவர்கள் டானா என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த பழனிக்குமார் பைக்கில் வேகமாக மோதியுள்ளனர். அதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கோமா நிலையில் இருந்த அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. 

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில், பழனிக்குமார் உடல்நிலை இன்று மோசமடைந்தது. அவர் மூளைச் சாவு அடைந்ததால் அது குறித்து மருத்துவக் குழுவினர் அவருடைய தாயார் சாந்தாவிடம் தெரிவித்துள்ளனர். தனது மகன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் பிறருக்கு அளிக்கப்பட்டால், உயிருக்குப் போராடும் நபர்களைக் காப்பாற்ற முடியும் என்பதால் தனது மகனின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தார். 

அதனால் பழனிக்குமார் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு, தேவையில் இருக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டது, பழனிக்குமாரின் இதயம், இரு கிட்னிகள்,.கல்லீரல், கண், தோல் உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. இதயம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, ஒரு கிட்னி மதுரைக்கு அனுப்பப்பட்டது மற்றொரு கிட்னி பாளையங்கோட்டையில் உள்ள நோயாளிக்கு உடனடியாக ஆபரேஷன் மூலம் பொறுத்தப்பட்டது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பழனிக்குமாரின் தாய் சாந்தா, ‘’எனது கணவர் இறந்த நிலையில், ஆதரவாக இருந்த ஒரே மகனும் விபத்தில் உயிரிழந்து விட்டான். மது போதையில் வந்தவர்கள் நிகழ்த்திய விபத்தில் அப்பாவியான எனது மகன் சிக்கி உயிரிழந்திருக்கிறான். எந்தத் தவறும் செய்யாத எனது மகன் உயிரிழக்க டாஸ்மாக் மதுக்கடைகளே காரணம். அதனால் அரசாங்கம் உடனடியாக மதுக்கடைகளை மூட வேண்டும். 

மதுக் குடிப்பவர்கள், உடனடியாக அந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்பதே எனது விருப்பம். வாழக்கையைத் தொடங்க வேண்டிய வயதில் என் மகன் உயிரிழந்து இருப்பதால், அவனது உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தேன். அதன் மூலம் அவன் இந்த உலகத்தில் தொடர்ந்து வாழ்வதாகவே நான் நம்புகிறேன்’’ என்று கண்ணீரோடு தெரிவித்தார்.