Published:Updated:

`அவ்வளவு நேரம் வலியைத் தாங்கிக்கொள்ள மாட்டார்’ - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

`அவ்வளவு நேரம் வலியைத் தாங்கிக்கொள்ள மாட்டார்’ - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!
`அவ்வளவு நேரம் வலியைத் தாங்கிக்கொள்ள மாட்டார்’ - இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்!

வேலூரில், பிரசவ வலி ஏற்பட்ட இளம்பெண்ணை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், 108 ஆம்புலன்ஸிலேயே குழந்தை பிறந்தது. தாய்-சேய் உயிரைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளருக்குப் பாராட்டுகள் குவிகிறது.

வேலூர் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பாய் தெருவைச் சேர்ந்தவர் முகமது அலி. இவரின் மனைவி முபீனா (29). இவர்களுக்கு ஏற்கெனவே மூன்று குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், முபீனா 4-ம் முறையாகக் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, நேற்று (18-ம் தேதி) மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, அவரின் குடும்பத்தினர், சத்துவாச்சாரி 108 ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் மற்றும் மருத்துவ உதவியாளர் ராஜி ஆகிய இருவரும் கரசமங்கலத்துக்கு விரைந்தனர். மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலையும் சமாளித்து, 10 நிமிடத்துக்குள் கர்ப்பிணி வீட்டுக்கு 108 ஆம்புலன்ஸ் சென்றுவிட்டது. அதற்குள், முபீனாவுக்கு பனிக்குடம் உடைந்து பிரசவ வலி அதிகமாகியிருந்தது.

அவரை மீட்ட ஆம்புலன்ஸ் ஊழியர்கள், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லத் திட்டமிட்டனர். மருத்துவமனையை நெருங்குவதற்குள் முபீனாவுக்கு பிரசவ வலி மேலும் அதிகமானதால், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும்-சேயும் நலமாக இருக்கிறார்கள். உடனடியாக, அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 3.5 கிலோ எடையில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சரியான நேரத்தில் சம்பவ இடத்துக்குச் சென்று கர்ப்பிணியை மீட்டதோடு, ஆம்புலன்ஸிலேயே சுகப்பிரசவம் பார்த்து இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர் செந்தில் மற்றும் மருத்துவ உதவியாளர் ராஜி ஆகிய இருவருக்கும் பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிகிறது. இதுசம்பந்தமாக ஆம்புலன்ஸ் டிரைவர் செந்திலிடம் பேசினோம். ‘‘நான் 10 வருடமாக ஆம்புலன்ஸ் ஓட்டுகிறேன். என் அனுபவத்தில், ஆம்புலன்ஸில் இதுவரை 7 பிரசவம் பார்த்துள்ளேன்.

விபத்து உட்பட உயிர்காப்பு சம்பவங்களில் பல நூறு பேரை உரிய நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துக் காப்பாற்றியுள்ளேன். சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கினார். அவரை, சரியான நேரத்தில் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துக் காப்பாற்றியுள்ளேன். இந்தச் சேவையை நான் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். என் வாழ்நாளில், இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்வதே எனக்குக் கிடைத்த பாக்கியமாகவும் செல்வமாகவும் பார்க்கிறேன்’’ என்றார் பெருமையோடும் புன்னகையோடும்.