அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?
பிரீமியம் ஸ்டோரி
News
அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

ய்ட்ஸ்... மற்ற நோய்களைவிட மக்கள் அதிகம் அச்சப்படக்கூடிய ஒரு கொடிய ஆட்கொல்லி நோய். ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்கினால், ‘அவ்வளவுதான் முடிந்தது வாழ்க்கை...’ என்பதே இப்போதுவரை மக்களின் புரிதலாக இருக்கிறது. ஹெச்.ஐ.வி வைரஸை மட்டுமல்ல, அதனால் பாதிக்கப்பட்டவர்களையும், தள்ளிவைத்துப் பார்க்கவே நினைக்கிறது பொதுச் சமூகம். ‘எச்சில் மூலமாகவோ, அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ ஹெச்.ஐ.வி பரவாது. அதோடு ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் என்றால்தான் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதிலும்கூட முறையான மருத்துவச் சிகிச்சையோடு கவனமாக இருந்தால், வாழ்க்கையை நீட்டித்துக்கொள்ள முடியும்’ என எவ்வளவோ, விழிப்பு உணர்வுப் பிரசாரங்கள் செய்தும்கூட இன்னும் மக்களிடம் அதே அச்ச நிலைதான் தொடர்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணமாகக் கர்நாடக கிராமமொன்றில், ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணின் சடலம்  ஏரியிலிருந்து மீட்கப்பட்டதால், ஒட்டுமொத்த ஏரி நீரையே  கிராம மக்கள் வெளியேற்றிய சம்பவத்தைச் சொல்ல முடியும். நிலைமை இப்படியிருக்க, எந்தவித அக்கறையுமில்லாமல், ஹெச்.ஐ.வி வைரஸ் பாதித்த ரத்தத்தை ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்குச் செலுத்தி, அந்தப் பெண்ணின் வாழ்க்கையையே துயரத்துக்குள்ளாக்கியிருக்கும் பேரவலம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது வரம். ஆனால், அது சாபமாக மாறியது சாத்தூர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு மட்டும்தான்.  `ஒரு தாய்,  சேயைப் பெற்றெடுப்பது மறு ஜென்மத்துக்குச் சமம்’ என்பார்கள். மறு ஜென்மம் தேவையில்லை. இந்த ஜென்மத்திலேயே வாழ முடியாத நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். ``ரத்தத்தை முறையாகப் பரிசோதிக்காமல் எனக்குச் செலுத்தி ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படுத்தியதற்குப் பதிலாக, வேறு ஊசி ஏதாவது போட்டு என்னைக் கொலை செய்திருக்கலாம்’’ - பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணின் வாக்குமூலம் இது.  ``எங்களுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து அழுது அழுது கண்ணீர் வற்றியதுதான் மிச்சம்’’ - அந்தப் பெண்ணின் கணவரின் கையறு நிலை இது!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றப்பட்ட ரத்தம், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது வாலிபருடையது. தன்னுடைய உறவினர் பெண் ஒருவருக்கு வழங்க, அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்ததானம் செய்திருக்கிறார். ஆனால், அந்த ரத்தம் உறவினர் பெண்ணுக்கு ஏற்றப்படவில்லை. மாறாக, சிவகாசி அரசு மருத்துவமனையின் ரத்த வங்கியிலிருந்து சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த ரத்தம் அங்கே ஒரு கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்டிருக்கிறது.

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

இதற்கிடையில், ரத்தம் கொடுத்திருந்த வாலிபர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்த சூழலில், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்துள்ளார். அதில், ‘தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்பது அந்த வாலிபருக்குத் தெரியவந்திருக்கிறது. உடனே அவர், தான் ஏற்கெனவே ரத்தம் கொடுத்திருந்த அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து சாத்தூரிலுள்ள கர்ப்பிணிப் பெண்ணைப் பரிசோதித்துப் பார்த்ததில், அவரையும் ஹெச்.ஐ.வி பாதித்திருப்பது உறுதியானது. அந்தப் பெண்ணின் உடலிலும் சில மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருந்தன. இந்த விவகாரம் மீடியாக்களில் பரபரப்பாகப் பற்றிக்கொள்ள, ரத்தம் கொடுத்த  வாலிபர், ‘தான் தவறு செய்துவிட்டோமோ’ என்கிற விரக்தியில் - குற்றவுணர்ச்சியில்  தற்கொலை செய்துகொண்டு இறந்து போனார்.

மேற்கண்ட இந்தச் சம்பவத்தில் அந்த வாலிபரின் மீது என்ன தவறிருக்கிறது, அவர் ஏன் இறக்கவேண்டும்? ரத்தம் கொடுக்க நினைத்த  அவர் எண்ணத்திலும் தவறில்லை. தனக்கு ஹெச்.ஐ.வி பாதித்ததும் அதைச் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற அவரது பொறுப்பு உணர்வும் பாராட்டத்தக்கது. ஆனாலும், யாரோ செய்த தவற்றுக்கு - பொறுப்பற்ற வேலைக்கு அவரின் உயிர் பறிபோயிருக்கிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளித்தவர்கள் மற்றும் ரத்தத்தைச் சரிவரப் பரிசோதிக்கத் தவறியவர்களின்மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் வீடு மற்றும் வேலைவாய்ப்பும் தருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் அந்தப் பெண்ணையும், அவர்களின் குடும்பத்தையும்  ஆற்றுப்படுத்துமா என்றால், இவை எங்களுக்கான ஆறுதல்கள் அல்ல என்று அந்தப் பெண்ணும், அவரது கணவரும் வேதனையுடன் தெரிவித்திருக்கின்றனர்.

சாத்தூர் கர்ப்பிணி மட்டுமல்ல... மதுரையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் தனியார் மருத்துவமனையில் தனக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதாகப் புகார் அளித்திருக்கிறார். சென்னை அருகே மாங்காட்டைச் சேர்ந்த ஒருவரும் ‘கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தினால் ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ எனப் புயலைக் கிளப்பியிருக்கிறார். இவர்கள் மருத்துவர்கள்மீது அளித்த வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

‘‘இவையெல்லாம் வெளிச்சத்துக்கு வந்தவை, வராத கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன’’ என்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளர் அமீர்கான்.

‘‘ஆய்வகங்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்தமாக மருத்துவமனைகள் அனைத்தும் தரமாகச் செயல்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கத் திறன்வாய்ந்த அமைப்பு எதுவும் நம் நாட்டில் இல்லை. கண்காணிப்பதற்கான  ஆட்களும் இங்கு  இல்லை. பலவருடப் போராட்டங்களுக்குப் பிறகு கடந்த வருடம்தான்  ‘மருத்துவ நடைமுறைச் சட்டம்’ அமலுக்கு வந்தது. அந்தச் சட்டத்தில் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ரத்த வங்கிகள் எப்படிச் செயல்படவேண்டும் என்கிற விதிமுறைகள் இருக்கின்றன.

மருத்துவமனைகள் புதிதாகப் பதிவு செய்யும்போது மட்டும்தான் இந்தச் சட்ட விதிகள் பரிசோதிக்கப்படுகின்றன. ஆனால், தொடர்ச்சியாக மருத்துவமனையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதில்லை. அடுத்ததாக, ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பதிவைப் புதுப்பிக்கும்போதுதான் மீண்டும் சோதனை செய்கிறார்கள். நியாயமாக நடந்துகொள்பவர்கள் சரியாக நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் தங்கள் இஷ்டத்துக்குச் செயல்படுகிறார்கள். இதுவரை எத்தனை ஆய்வகங்களில், தவறாகச் செயல்படுபவர்கள் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்? அவர்கள்மீது என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன... என்கிற தகவல்கள் ஏதும் இல்லை. இப்போதும்கூட ரத்தம் கொடுத்த இளைஞர் சொன்னதால்தான் விஷயம் வெளியில் வந்தது. இல்லையென்றால், வெளியில் வந்திருக்காது. அப்படியே மூடி மறைத்திருப்பார்கள்.

ஏற்கெனவே, அரசு மருத்துவமனைகளில், ‘பயனாளிகள் நலச்சங்கம்’ என்கிற அமைப்பு இருக்கிறது. அதில் அந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மூத்த மருத்துவர்கள் எனப் பல முக்கியப் பிரமுகர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். ஆனால், இந்தச் சங்கம் செயல்படுவதே இல்லை. ஏனெனில், பல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இப்படி ஒரு சங்கம் இருப்பதும், அதில் தாங்கள் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதுவுமே தெரியவில்லை. அந்தளவுக்குத்தான் இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் இருக்கின்றன. இப்படி இருக்கும்பட்சத்தில் இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்கவே முடியாது.

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

இதைவிட முக்கியமானது, ஒரு தவறு வெளியில் தெரிந்துவிட்டால், அதைச் சரிசெய்து கொள்ளத்தான் ஒரு நல்ல அரசாங்கம் முற்பட வேண்டுமே தவிர, வெளியில் சொன்ன இளைஞரின் குடும்பத்தை மிரட்டுவதில் தீவிரம் காட்டக்கூடாது. அதேபோல, ஏதாவது தவறு நடந்துவிட்டால், தனிப்பட்ட ஒரு நபரின்மீது பழியைப் போட்டு, அவரின்மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது போதாது. இந்தச் சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட ஆய்வகப் பணியாளர், வேலையை உதறிவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டார். காரணம், அவர் ஒரு ஒப்பந்தப் பணியாளர்தான். அவருக்கு பொறுப்பு உணர்வு எதுவும் இல்லை. இது போன்ற உயிர்காக்கும் பணியிடங்களில் எல்லாம் ஒப்பந்தப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை முதலில் நிறுத்தவேண்டும். முழு நேரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவச் செயற்பாட்டாளர்கள்  என அனைவரும் பங்கேற்கக்கூடிய ஓர் அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும். மருத்துவமனைகளின் செயல்பாடுகளை, தரத்தை முறையாகக் கண்காணிக்கவேண்டும்’’ என்கிறார் அமீர்கான்.

இதற்கிடையில், ஹெச்.ஐ.வி பாஸிட்டிவ் ரத்தம் ஏற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட அந்தக்  கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்குமா என்பதை 45 நாள்களுக்குப் பிறகே கண்டறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் குழந்தையின் எதிர்காலம் எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மருத்துவமனைகளில் ரத்தப்  பரிசோதனைகள் முறையாகச் செய்யப்படுகின்றனவா, அது போதுமானவையா, இன்னும் என்ன மாதிரியான வசதிகளை உருவாக்க வேண்டும் என ‘மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம் அமைப்பின் பொதுச்செயலாளர் மருத்துவர் காசியிடம் பேசினோம்.

“ஒருவருக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை மூன்று வாரங்களில் இருந்து மூன்று மாதங்களுக்குள் கண்டுபிடிக்கலாம். இந்தக் குறிப்பிட்ட காலத்தை ‘விண்டோ பீரியர்டு’ என்போம். நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதை எலிசா பரிசோதனையில் மூன்று மாதங்களுக்குப் பின்பே உறுதிசெய்ய முடியும். பொதுவாக எலிசா பரிசோதனைதான் இங்கே செய்யப்படுகிறது.  ஆனால், `பி.சி.ஆர் பரிசோதனை’யில், (Polymerase chain reaction) அதிகபட்சம் ஒரு மாத காலத்துக்குள் கண்டுபிடித்துவிட முடியும். பி.சி.ஆர் பரிசோதனை செய்ய குறைந்தது  5,000 ரூபாயாவது செலவாகும். ரத்த வங்கிகளில் தானமாகப் பெறப்படும் ஒவ்வொரு ரத்தப் பையையும் 5,000 ரூபாய் செலவழித்து பரிசோதனை செய்வது முடியாது. ஆகவேதான், ரத்த வங்கிகளில் எலிசா பரிசோதனை முறையே நடைமுறையில் இருக்கிறது. அதற்குக் காரணம், அரசு மருத்துவமனைகளில் ரத்தம் இலவசமாக ஏற்றப்படுகிறது. எனவே, அதற்கு அதிக
பட்சமாக  500 ரூபாய்தான் அரசு செலவழிக்கும்.

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

எனவே, இதுபோன்ற அசம்பாவிதங்களை வேறு முறையில் தவிர்க்கலாம்.  ரத்தம் தானம் கொடுப்பவரைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாகவும், கூடுதல் அக்கறையோடும் இருக்க வேண்டும். ரத்தம் கொடுப்பவரும் தனக்குத் தவறான பழக்கங்கள் இருந்தால் அல்லது தனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்குமோ என்ற அச்சம் இருந்தால், அதை வெளிப்படையாக மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.  அப்படி, அவர் வெளிப்படையாகச் சொன்னாலும்கூட அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிய முடியாது. ஏனெனில், அப்போது அவர் விண்டோ பீரியர்டில் இருந்திருப்பார். சாத்தூர் கர்ப்பிணி விவகாரத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.

செலவு அதிகம் பிடிக்கும் பி.சி.ஆர் பரிசோதனையை ரத்தம் கொடுக்கும் அனைவருக்கும் செய்ய முடியாது. ஆகவே, ரத்தம் தர முன்வருபவர்களிடம், உடனே ரத்தத்தைப் பெறாமல் கவுன்சலிங் தந்து, அதன்பின் ரத்தம் எடுப்பதே சரியானதாக இருக்கும். அப்படிச் செய்யும்போது, ரத்தம் தருபவர் தனக்கு ஏற்கெனவே தவறான பழக்கங்கள் இருப்பதைத் தெரிவிக்கும்போது, அவர்களுடைய ரத்தத்தை மட்டும் உயர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கலாம்.

அதேபோல, ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது அவர் தன்னுடைய உறவினர்களில் நம்பகத்தன்மையாக உள்ள ஒருவரிடமிருந்து ரத்தம் பெறுவதே பாதுகாப்பானது. ஏனெனில், இந்த முறைதான் பிரச்னைகளை ஓரளவுக்குத் தடுக்கும். ஆனால், பெரும்பாலும் உறவினர்கள் ரத்தம் கொடுக்க முன்வருவதில்லை. அவர்களுக்கு ரத்ததானம் குறித்த விழிப்பு உணர்வு இல்லாததால்தான், அவர்கள் தர மறுக்கிறார்கள். அதைச் சரிசெய்ய அவர்களுக்கு கவுன்சலிங் கொடுத்து தானம்கொடுக்க வைக்கலாம். அதேபோல, வணிகரீதியாகத் தனியார் மருத்துவமனைகளில் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ரத்தம் தானமாகப் பெறுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். தன்னார்வமாகக் கொடுக்கும் முறை மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும்போது வருங்காலங்களில் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல்  தவிர்க்கலாம்” என்கிறார்.

அலட்சியம் என்னும் ‘ரத்தக் கறை’! - துயர் துடைக்க என்ன வழி?

ரத்த வங்கிகளில் மட்டுமல்ல... ரத்தத்தைச் சுத்திகரிக்கக்கூடிய மையங்களிலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னை லிவர் ஃபவுண்டேஷன் என்னும் தனியார் அமைப்பு தமிழ்நாட்டில் மஞ்சள்காமாலை பாதிப்பு குறித்து ஓர் ஆய்வு செய்தது. அந்த ஆய்வில், டயாலிசிஸ் செய்துகொள்ளும் பலருக்கு ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று இருப்பதாக ஓர் அதிர்ச்சித் தகவல் வெளியானது. ஒட்டுமொத்தமாக 14 மாவட்டங்களில் 18,589 பேரிடம் செய்யப்பட்ட   ரத்தப் பரிசோதனையில், 359 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிப்பும், 303 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி பாதிப்பும், 56 பேருக்கு ஹெபடைட்டிஸ் சி பாதிப்பும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. தேனி, வேலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிகமான பாதிப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட ஒரு  தனியார் மருத்துவமனையின் டயாலிசிஸ் யூனிட்டில் மட்டும் டயாலிசிஸ் செய்துகொண்ட அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று இருந்தது  கண்டறியப்பட்டது. மொத்தமாக 23 பேரின் ரத்தத்தைப் பரிசோதனை செய்து பார்த்ததில், நான்கு பேருக்கு ஹெபடைட்டிஸ் பி-யும், மீதமுள்ள 19 பேருக்கு ஹெபடைட்டிஸ் சி-யும் நோய்த் தொற்றாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், மேற்கண்ட இரண்டு வைரஸ்களும் ரத்தத்தின்மூலம் பரவக்கூடிய மிகவும் ஆபத்தான வைரஸ்கள். இதனால் உண்டாகும் மஞ்சள்காமாலையைக்  குணப்படுத்துவது என்பது மிகவும் சவாலான ஒன்று. ஹெச்.ஐ.வி வைரஸைப்போல இதுவும் உயிர்க்கொல்லி வைரஸ்தான்.

மருத்துவமனைக்குள் நுழைகிற எல்லோரும், ‘தன்னுடைய நோயை மருத்துவர் குணப்படுத்திவிடுவார்’ என்கிற நம்பிக்கையில்தான் செல்கிறார்கள். ஆனால், மருத்துவமனைகள் இப்போது சந்தேகத்துக்குரிய இடங்களாக மாறியிருக்கின்றன. எனவே, அரசு, தனியார் என்ற பாகுபாடு இல்லாமல், ஒட்டுமொத்தமாக நம் நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து மருத்துவமனைகளையுமே கண்காணிக்க வேண்டிய தேவையிருக்கிறது என்பது  மட்டுமே உண்மை!

- இரா.செந்தில் குமார், கிராபியென் ப்ளாக்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்
ஓவியம்: பிரேம் டாவின்ஸி