Published:Updated:

35 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மாதிரி பல் - கின்னஸ் சாதனைப் படைத்த மருத்துவர்!

35 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மாதிரி பல் - கின்னஸ் சாதனைப் படைத்த மருத்துவர்!
35 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மாதிரி பல் - கின்னஸ் சாதனைப் படைத்த மருத்துவர்!

புதுக்கோட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன் 35 அடி உயரத்திலான மிகப்பெரிய மாதிரி பல் வடிவமைத்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன். பல் பராமரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையிலும், கின்னஸ் சாதனை முயற்சிக்காகவும் 35 அடி உயரத்திலான மிகப்பெரிய மாதிரி பல் வடிவமைத்தார். அதை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில் காட்சிப்படுத்தினார். கின்னஸ் சாதனை முயற்சியை அங்கீகரிப்பதற்காக, லண்டனைச் சேர்ந்த சுவப்னில் தலைமையிலான ஆய்வாளர்கள் குழு புதுக்கோட்டை வந்திருந்தது. 35 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி பல்லை முழுமையாக ஆய்வாளர்கள் குழு ஆய்வு செய்து, முடிவில் கின்னஸ் சாதனையாக அங்கீகரித்து, அதற்கான சான்றிதழை உடனே ராஜேஷ் கண்ணனிடம்  வழங்கியது.

இதற்கு முன்பு வரையிலும், கடந்த 2015-ல் நியூசிலாந்து நாட்டில் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தின் சார்பில், 30 அடி உயரத்தில் மாதிரி பல் அமைக்கப்பட்டு இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை  புதுக்கோட்டை பல் மருத்துவர் மற்றும் அவரது குழு இணைந்து முறியடித்துள்ளது, 

கின்னஸ் சாதனை குறித்து பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் பேசினோம், `பல் பராமரிப்பு, பல் பாதுகாப்பதின் அவசியம் குறித்து எல்லாம் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இந்தக் கின்னஸ் சாதனை முயற்சியையே கையில் எடுத்தேன். கின்னஸ் சாதனை நிகழ்த்த நான் மட்டுமில்லாமல், என்னுடன் சேர்ந்து 10 பேர் குழு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தது. இந்த கின்னஸ் சாதனை முயற்சி ஒரு கூட்டு முயற்சிதான்.

முதலில் ஒரு பெரிய  நிறுவனம் நிகழ்த்தி உள்ள கின்னஸ் சாதனையை உடைத்து, நாங்கள் புது கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தி உள்ளோம். இதற்காக, ஆய்வாளர்கள் குழு ஏராளமான நிபந்தனைகள் விதித்தது. இந்த செயற்கைப் பல்லானது பிளாஸ்டர் ஆப் பேரீஸ் மூலம் தான் முழுமையாகச் செய்யப்பட்டுள்ளது. இந்த செயற்கைப் பல்லை வடிவமைக்க சுமார் 40 நாள்கள் ஆகி உள்ளன. 20 நாள்களுக்கும் மேலாக என் தலைமையிலான குழு இரவு பகலாக பல்லை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.