Published:Updated:

மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுக்கோட்டை மருத்துவக் கண்காட்சி!

மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுக்கோட்டை மருத்துவக் கண்காட்சி!
மருத்துவம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் புதுக்கோட்டை மருத்துவக் கண்காட்சி!

மருத்துவம் குறித்து விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாபெரும் மருத்துவக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவக் கண்காட்சியானது மார்ச் 8-ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது.

மருத்துவக் கண்காட்சியில் உடலின் ஒவ்வோர் உறுப்பும் அதன் பாகங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவம் சார்ந்த பல்வேறு செயல் விளக்க அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வோர் உறுப்பையும் தனித்தனியாக தாக்கும் நோய்கள், அதற்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் தீர்வு உள்ளிட்டவற்றைக் கண்காட்சியில் நோட்டீஸ் மூலம் தெரிவிப்பதுடன், மருத்துவக்கல்லூரி மாணவர்களும்  விளக்கம் அளிக்கின்றனர். உடல்கூறு இயல், உடலின் இயக்க முறைகள், உயிர் வேதியியல், நுண்கிருமிகள், சட்டம் சார்ந்த மருத்துவம், தீவிர அறுவை சிகிச்சை, புற்று நோய் அறுவை சிகிச்சை, ரத்த நாள அறுவை சிகிச்சை, மயக்கவியல் துறை என 25-க்கும் மேற்பட்ட துறைகளும் கல்லூரி ஆடிட்டோரியத்தில், 3 மாடிகளில் தனித்தனியாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காட்சியில் மாணவர்கள் மட்டுமில்லாது, பொதுமக்களும் மருத்துவம் குறித்து பல்வேறு தகவல்கள் மற்றும் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள முடியும். இதுகுறித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மீனாட்சி சுந்தரத்திடம் பேசினோம், 'புதுக்கோட்டை மருத்துவமனையில் பல்வேறு உயர் தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மருத்துவம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. எதிர்காலத்தில் மருத்துவராக வரும் மாணவர்களுக்கு இந்தக் கண்காட்சி மிகவும் பயனளிக்கும். தற்போது, வரையிலும் மாணவர்கள், பொதுமக்கள் என 30,000-க்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர்.

உடல் உறுப்பு தானம் செய்வது அவசியம். அதேபோல, இறந்த பிறகு உடல் தானமும் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். தொடர்ந்து, ஒவ்வோர் ஆண்டும் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

மருத்துவக்கல்லூரி மாணவர்கள், `மருத்துவம் படிக்கும் நாங்களே அனைத்துத் துறை சார்ந்த பல்வேறு தகவல்களையும், சந்தேகங்களையும் தீர்த்துக்கொண்டுள்ளோம். எங்களுக்குத் தெரிந்த தகவல்களை ஒவ்வொருவருக்கும் விளக்குகிறோம். இந்தக் கண்காட்சி அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது" என்றனர்.