Published:Updated:

650 கிராம் பச்சிளம் குழந்தை... போராடி உயிரை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
650 கிராம் பச்சிளம் குழந்தை... போராடி உயிரை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை!
650 கிராம் பச்சிளம் குழந்தை... போராடி உயிரை மீட்ட சென்னை அரசு மருத்துவமனை!

ஒரு நாளைக்குப் பத்து மில்லி பால்தான் கொடுக்க முடியும். ஒவ்வொரு சொட்டு பாலும் உணவுக் குழாயில் இறங்க பல மணி நேரம் ஆகும். நிறைய தொற்றுநோய் பிரச்னைகளும் வந்துச்சு. ஊசிகளால் அவன் அவதிப்படும் ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நெஞ்சை அறுக்கிற மாதிரி வலிக்கும்.

பிறக்கும்போது 650 கிராம் எடையில் பிறந்த குழந்தையை, நான்கு மாத போராட்டங்களுக்கு பின் உயிர் பிழைக்க வைத்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது குறித்து குழந்தையின் தாய் சந்தான லட்சுமியிடம் பேசினோம்.

``எனக்கு சொந்த ஊர் காரைக்குடி, தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறேன். இது எனக்கு ரெண்டாவது பிரசவம். மகப்பேறு காலத்தின் ஏழாவது மாசத்தில் எனக்குக் கடுமையான காய்ச்சல் வந்துச்சு.

சிகிச்சைக்குப் போனபோது டைபாயிடு காய்ச்சல்னு தெரிய வந்துச்சு. வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் காயச்சல் பரவியிருக்க வாய்ப்பு இருக்குனு டாக்டர்கள் சொன்னாங்க. அதுக்கான பரிசோதனை செய்தபோதுதான் குழந்தையின் இதயத்துடிப்பு குறைய ஆரம்பித்த விஷயம் தெரிஞ்சுது. அதனால் உடனே குழந்தையை வெளியே எடுக்கணும்னு டாக்டர்கள் சொல்ல, நாங்களும் சம்மதிச்சோம். திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்தான் பிரசவம் நடந்து, ஆண் குழந்தை பிறந்துச்சு. குறைமாத பிரசவம் என்பதால் குழந்தை தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பிலே இருந்தான். ஆனாலும், ``குழந்தை பிழைப்பது சிக்கல்தான்’’ னு மருத்துவர்கள் சொல்லவே, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தோம். குழந்தையைக் காப்பாற்ற முடிஞ்ச அளவு முயற்சி செய்யலாம்னு மருத்துவர்கள் சொன்னாங்க. 

என் குழந்தை மீண்டு வருவான்னு எனக்கு முழு நம்பிக்கை இருந்துச்சு. அதனால் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். நுரையீரல் முழு வளர்ச்சி அடைவதற்கு முன்பே குழந்தை பிறந்ததால், சுவாச பிரச்னையால் நிறைய அவதிப்பட்டான். ஒரு நாளைக்குப் பத்து மில்லி பால்தான் கொடுக்க முடியும். ஒவ்வொரு சொட்டு பாலும் உணவுக் குழாயில் இறங்க பல மணி நேரம் ஆகும். நிறைய தொற்றுநோய் பிரச்னைகளும் வந்துச்சு. ஊசிகளால் அவன் அவதிப்படும் ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு நெஞ்சை அறுக்கிற மாதிரி வலிக்கும். சுவாச பிரச்னையால் மரண விளிம்பு வரைகூட சில சமயம் போனவனை, ரத்தமும் சதையும் உள்ள முழு குழந்தையாக அரசு மருத்துவர்கள் உருவாக்கி கொடுத்துருக்காங்க. அவங்களை என் குழந்தைக்கு உயிர் கொடுத்த சாமினுகூட சொல்லலாம். குறைமாச பிரசவம், குழந்தையின் உயிர் போராட்டம், எனது ஆரோக்கியம் என உடலாலும் மனதாலும் பல மடங்கு மன அழுத்தம் அடைந்தபோது என் குடும்பமும் மருத்துவர்களும்தான் துணையாக இருந்தார்கள். நான்கு மாத ஐ.சி.யு சிகிச்சைக்குப் பின் தற்போது வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம்’’ என்ற சந்தான லட்சுமியைத் தொடர்கிறார், குழந்தைக்குச் சிகிச்சை வழங்கிய குழந்தை நல மருத்துவர் அனிதா.

``அந்தக் குழந்தை மருத்துவமனைக்கு வரும்போது, எதிர்ப்பு சக்தி ரொம்ப குறைந்த நிலையில், சுவாசப் பிரச்னைகளுடன் வந்தான். எங்கள் தலைமை மருத்துவர் கமலரத்தினம் சார், சிறுவனுக்குத் தனிக்கவனம் செலுத்த பரிந்துரை செய்தார். இன்குபேட்டரில் வைத்து குழந்தைக்கு பலகட்ட சிகிச்சை முறைகள் செய்யப்பட்டு குழந்தையின் எடை கூட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் குழந்தையின் உறுப்புகள் வளர்ச்சி, எடையின் அளவு போன்றவை கணக்கிடப்பட்டு அதற்கு ஏற்ற சிகிச்சைகள் வழங்கினோம். மிக ஆபத்தான நிலையில் இருந்துதான் குழந்தை மீண்டெழுந்துள்ளான். எதிர்காலத்தில்கூட அவனது ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். 

குழந்தை உடல் நலனில் தேறி வீட்டுக்குச் செல்லும் நிலைக்கு வந்துவிட்டான் எனினும், வாரம் ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்ய வலியுறுத்தியுள்ளோம். பொதுவாக, கருவுற்று இருக்கும் தாய்மார்கள் தங்கள் உடல் நலனில் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். லேசான காய்ச்சல், ரத்த அழுத்தம், மஞ்சள் காமாலை போன்றவை ஏற்பட்டாலே, குழந்தைக்குப் பரவாமல் தடுக்கச் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்’’ என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு