Published:Updated:

தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்னை: ஆதரவாகக் களமிறங்கிய மருத்துவச் சங்கம்!

இதன் விசாரணையில், 20 மாணவர்கள் விடுதியில் தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், சக மாணவர்களைக் குடிக்கத் தூண்டியதாகவும் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட மாணவர்களை 3 முதல் 6 மாதம்வரை சஸ்பெண்ட் செய்து டீன் குமுதா உத்தரவிட்டார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்னை: ஆதரவாகக் களமிறங்கிய மருத்துவச் சங்கம்!
தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரச்னை: ஆதரவாகக் களமிறங்கிய மருத்துவச் சங்கம்!

ல்லூரி விடுதியில் தங்கி மருத்துவம் படிக்கும் மாணவர்கள், போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாகக் கூறி மாணவர்கள் சிலரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது, தஞ்சை மருத்துவக் கல்லூரி நிர்வாகம். மேலும், இதைக் காரணம்காட்டி மாணவர்கள் விடுதியை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த நிலையில், ``மாணவர்களைக் குற்றவாளிகள்போல் நடத்தக் கூடாது" என அவர்களுக்கு ஆதரவாகச் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் களமிறங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு பல மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் வந்துசெல்கின்றனர். மேலும், உள்நோயாளிகளாகத் தங்கியிருந்து 1,000-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவக் கல்லூரியாகவும் செயல்பட்டுவரும் இந்த மருத்துவக் கல்லூரியில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவ மாணவிகள் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் டாக்டருக்குப் படித்து வருகின்றனர். ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் சரிவர சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை என்றும், ஊழியர்கள் நோயாளிகளிடமும் அவர்களைப் பார்க்க வருபவர்களிடமும் லஞ்சம் பெறுவதாகவும், மருத்துவமனை மனிதத் தன்மையற்றுச் செயல்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 20 தினங்களுக்கு முன்பு விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் சிலர், விடுதியில் தொடர்ந்து மதுகுடித்து ரகளையில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, சுமார் 20 மாணவர்களை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது, மருத்துவக் கல்லூரி நிர்வாகம். முன்னதாக, போதைப்பொருள்களைப் பயன்படுத்திய மாணவர்களை, ``இதை விட்டுவிட வேண்டும்" என டீன் குமுதா பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், அந்த மாணவர்கள் திருத்திக்கொள்ளாமல் அப்படியே நடந்து வந்ததாகவும் தெரிகிறது. இதற்காக டீன் குமுதா தலைமையில், நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதன் விசாரணையில், 20 மாணவர்கள் விடுதியில் தினமும் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகவும், சக மாணவர்களைக் குடிக்கத் தூண்டியதாகவும் உறுதி செய்யப்பட்டதாகக் கூறி சம்பந்தப்பட்ட மாணவர்களை 3 முதல் 6 மாதம்வரை சஸ்பெண்ட் செய்து டீன் குமுதா உத்தரவிட்டார்.

மேலும் ஆண்கள் விடுதியைப் பெண்கள் விடுதியாகவும், பெண்கள் விடுதியை ஆண்கள் விடுதியாகவும் மாற்றப்போவதாக நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள், நிர்வாகத்துக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேசிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சிலர், ``மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு எனத் தனித்தனி தங்கும் விடுதிகள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளது. பிளம்மிங் என்ற பெயரில் ஆண்கள் விடுதியும், பேர்கன் என்ற பெயரில் பெண்கள் விடுதியும் செயல்பட்டு வருகிறது. இதில், மொத்தம் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், சில மாணவர்கள் போதைப்பழக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதையடுத்து, இரண்டு விடுதிகளையும் இடமாற்றம் செய்யப்போவதாக கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆனால், மாணவர்கள் விடுதியில் போதுமான இடவசதி உள்ளதால் நாங்கள் விடுதியைக் காலி செய்யமாட்டோம். பெண்கள் விடுதியில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மேலும், விடுதியை மாற்றும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் எனக் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினோம்" என்றனர்.

இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கம் மாணவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளது. அதன் பொதுச் செயலர் ரவீந்திரநாத், ``மருத்துவக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதாகக் கூறி, சில மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை ரத்துசெய்ய வேண்டும். இவற்றை காரணம்காட்டி, விடுதியை மாற்ற முயற்சி செய்கின்றனர். சுமார் 45 வருடம் பழைமையான பிளமிங் விடுதியைவிட்டு மாணவர்களை மாற்றக்கூடாது. மேலும், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் எனப் பல கோரிக்கைகளை நிர்வாகத்திடம் வைத்தோம். இவற்றை நிறைவேற்றி நடவடிக்கை எடுப்பதாகக் கல்லூரி முதல்வரும், நிர்வாகத் தரப்பிலும் கூறியிருப்பது வரவேற்புக்குறியது.

தமிழக மருத்துவ மாணவர்களின் மனஉளைச்சலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். உளரீதியான பாதிப்புக்குள்ளாகும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஒவ்வொரு கல்லூரியிலும் தனி மருத்துவர்கள் குழுக்களை அமைக்க வேண்டும். மாநில அளவிலும், மருத்துவக் கல்லூரிகள் அளவிலும், மாணவர் நல அமைப்புகளை உருவாக்க வேண்டும். மருத்துவ மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை அதிகரிப்பதுடன், ஆய்வில் ஈடுபடுவதையும் ஊக்கப்படுத்த வேண்டும். பயிற்சி மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் உடல், உளநலனைப் பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடுத்துவதைக் கைவிட வேண்டும். அவர்கள் செய்ய வேண்டிய பணிகளைத் தவிர, இதர ஊழியர்கள் செய்யவேண்டிய பணியை அவர்கள்மீது திணிக்கக் கூடாது. மருத்துவ மாணவர்கள் - பேராசிரியர்கள் உறவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களைக் குற்றவாளிகளைப்போல நடத்துவதைக் கைவிட்டு, கலாசாரக் காவலர்கள்போல கல்லூரி நிர்வாகங்கள் நடப்பதையும் கைவிட வேண்டும்" என்றார்.