Published:Updated:

குடிநீர் கேட்டு தவித்த முதியவர் - சேலம் அரசு மருத்துவமனையின் அவல நிலை!

குடிநீர் கேட்டு தவித்த முதியவர் - சேலம் அரசு மருத்துவமனையின் அவல நிலை!
குடிநீர் கேட்டு தவித்த முதியவர் - சேலம் அரசு மருத்துவமனையின் அவல நிலை!

சேலம், மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில், அதுவும் மருத்துவமனை டீன் அலுவலகம் உள்ள கட்டடத்தின் மூன்றாவது மாடியில்,  சுமார் 80 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் படுக்கையிலிருந்து கீழே விழுந்து, தரையில் நிர்வாண கோலத்தில், கையில் காலி வாட்டர் பாட்டிலை நீட்டியவாறு ''தண்ணீர்... தண்ணீர்...'' என்று அந்த வழியாகச் செல்பவர்களிடம் கெஞ்சிய சம்பவம் குலை நடுங்கச் செய்தது.  

குடிநீர் கேட்டு தவித்த முதியவர் - சேலம் அரசு மருத்துவமனையின் அவல நிலை!

இதுபற்றி அந்த வார்ட்டில் உள்ளவரிடம் விசாரித்தபோது, ``நாங்க மருத்துவமனையில் சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. எங்களுக்கு முன்பிருந்தே இந்த தாத்தா இங்கு இருக்கிறார். இவர் மட்டும் தனியாக படுத்திருக்கிறார். இவர்கூட யாரும் இல்லாததால், கவனித்துக் கொள்ளுவதற்கு ஆள் இல்லை. இவரால் பேச முடியவில்லை. அதனால்,  இவரைப் பற்றிய விவரங்கள் எதுவும் கேட்டுத் தெரிந்துகொள்ள முடியவில்லை.

படுக்கையில் இருந்து அடிக்கடி பொத்து பொத்துனு கீழே விழுந்துவிடுவார். நாங்கள்தான் தூக்கி படுக்கையில் போட்டு வேட்டி கட்டிவிடுவோம். பசித்தால் சத்தம் போடுவார். நாங்க சாப்பிடுவதில் கொஞ்சம் கொடுப்போம். ஒரு மணி நேரமாகக் கீழே விழுந்து தண்ணீர் கேட்டுக் கெக்சுகிறார்.  நாங்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாததால் கொடுக்க முடியவில்லை.  

இந்த மூன்றாவது மாடிக்கு குடிநீர் வருவதில்லை. கீழே  சென்று குடிநீர் பிடித்து வர வேண்டும். கீழே படி இறங்கி ஏறுவதற்கு ரொம்ப சிரமமாக இருக்கிறது. அங்கே போனாலும் உடனே தண்ணீர் பிடிக்க முடியாது.  கும்பலாக இருக்கும். குடிநீர் பிடிப்பதற்கு குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். இங்கு இருப்பவர்கள் சாப்பாடுகூட கொடுப்பார்கள். ஆனால், குடிநீர் கொடுக்க மாட்டார்கள். குடிநீர் கேட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. குடிநீர் இல்லாமல் இவர் தவிப்பதைப் பார்க்கும்போது பாவமாக இருக்கிறது'' என்றார்.

இதுபற்றி மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையின் டீன் திருமால்பாபுவிடம் கேட்டதற்கு, ''மருத்துவமனை முழுவதும் குடிநீர் தாராளமாகக் கிடைக்க அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. 3-வது மாடியில் குடிநீர் இல்லை என்பது  நீங்கள் சொல்லித்தான் என் கவனத்திற்கு வந்திருக்கிறது. உடனே அதிகாரிகளை அனுப்பி பார்க்கச் சொல்லுகிறேன்'' என்றார்.

Vikatan