Published:Updated:

பாகிஸ்தான் உளவாளி வலையில் விழுந்த சென்னை மருத்துவ மாணவி!

Vikatan Correspondent
பாகிஸ்தான் உளவாளி வலையில் விழுந்த சென்னை மருத்துவ மாணவி!
பாகிஸ்தான் உளவாளி வலையில் விழுந்த சென்னை மருத்துவ மாணவி!
பாகிஸ்தான் உளவாளி வலையில் விழுந்த சென்னை மருத்துவ மாணவி!

சென்னை: சென்னையில் சிக்கிய பாகிஸ்தான் உளவாளியின் காதலியான மருத்துவ மாணவி, காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கதறி அழுதுள்ளார். விசாரணைக்கு பின்னர் அவரை காவல்துறையினர் விடுவித்து விட்டனர்.

கடந்த 10ஆம் தேதி பாகிஸ்தான் உளவாளி அருண்செல்வராசன் என்பவரை சென்னை சாலிகிராமத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த இந்த உளவாளி அருண் செல்வராசனை 6 நாட்கள் காவலில் வைத்து, தேசிய புலனாய்வுப்படை காவல்துறையின் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில், "மும்பையை அடுத்து, தமிழகத்தில் சென்னை உள்பட 20 இடங்களில் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக, உளவாளி அருண்செல்வராசன் தெரிவித்துள்ளார். அவர் ஒரு அம்புதான். அவரை ஏவி விட்ட இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை, விசாரித்தால்தான், முழு விவரமும் தெரிய வரும்.

அருண்செல்வராசனிடம், விசாரணை முடிந்த பிறகு தான், இலங்கை சென்று பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த உரிய ஏற்பாடுகளை செய்வோம். அருண்செல்வராசன் தனது செல்போன் பேச்சை பதிவு செய்து வைத்துள்ளார். அந்த செல்போன் பேச்சை ஆதாரமாக வைத்து, அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

அருண்செல்வராசன், சென்னையில் வசிக்கும் பல் மருத்துவ மாணவியை காதலித்துள்ளார். இந்த மாணவி இலங்கையை சேர்ந்த தமிழர் ஆவார். இவர் நடத்திய விழாவுக்கு, உரிய ஏற்பாடுகளை தனது சொந்த செலவில், அருண் செல்வராசன் நடத்தி கொடுத்துள்ளார். அந்த மாணவியை ஏற்கனவே ஒருமுறை விசாரித்தோம். தற்போது, அருண்செல்வராசன் முன்னிலையில் மீண்டும் விசாரணை நடத்தி இருக்கிறோம்.

விசாரணை நடத்தும் போது, அந்த மாணவி கதறி அழுது கொண்டே, அருண்செல்வராசன் பாகிஸ்தான் உளவாளி, என்று தெரிந்திருந்தால், அவரிடம் பழகி இருக்க மாட்டேன், என்று தெரிவித்தார். அந்த மாணவி கைது செய்யப்படுவாரா? என்று இப்போது சொல்ல முடியாது. விசாரணை முடிக்கப்பட்டு அவரை விடுவித்து விட்டோம்.

அருண் செல்வராசன், சென்னையில் ஆடைஅலங்கார போட்டி நடத்த ஏற்பாடு செய்து வந்துள்ளார். அந்த நிகழ்ச்சி நடத்த, சென்னை விமான நிலைய அதிகாரி ஒருவர் உள்பட சில அரசு உயர் அதிகாரிகள் உதவி செய்துள்ளனர். இதனால் அந்த அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

அருண்செல்வராசன், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். அவர் சொல்லும் தகவல்கள் வீடியோ படமாக பதிவு செய்யப்படுகிறது" என்று தெரிவித்தார்.