லைஃப்ஸ்டைல்
ஆசிரியர் பக்கம்
ஹெல்த்
என்டர்டெயின்மென்ட்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆவி பிடித்தல்... என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தலாம்..?! #Avaludan

ஆவி பிடித்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆவி பிடித்தல்

என்ன பொருள்கள் சேர்த்து ஆவி பிடிப்பது என்று அறியாதவர்கள், வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது நலம்.

ஆவி பிடிக்கும் முறைகள், அதில் பயன்படுத்தும் மருத்துவப் பொருள்கள், அது குறித்த டிப்ஸை அவள் விகடன் சோஷியல் மீடியா பக்கங்களில் கேட்டிருந்தோம். #Avaludan என்ற ஹேஷ்டேக்குடன் அவர்கள் பகிர்ந்திருந்தவற்றில் சில இங்கே...

Saroja Balasubramanian

வேப்பிலை பொடி ஒரு டீஸ்பூன், ஓமம் ஒரு டீஸ்பூன், கல் உப்பு ஒரு கைப்பிடி, மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், துளசி இலை ஒரு கைப்பிடி, வெற்றிலை மூன்று (கிள்ளிப்போட்டது)... ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து மேலே சொன்னவற்றை எல்லாம் போட்டு இரண்டு நிமிடங்கள் ஆவி பிடித்தால் சளித்தொல்லை நீங்கும்.

Lydia Israel

என்ன பொருள்கள் சேர்த்து ஆவி பிடிப்பது என்று அறியாதவர்கள், வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பது நலம்.

Baby Palani

இரண்டு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, நொச்சி இலை, தும்பை இலை, எட்டு மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து, ஒரு நிமிடம் ஆவி பிடிக்கலாம்.

Uma Maheswari K Umakumar

மூக்கு ஒழுகுதல், சளித்தொந்தரவு, அதனால் உடல் அசதி போன்றவற்றுக்கு, தண்ணீரில் கைப்பிடி நொச்சி இலை, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

ஆவி பிடித்தல்
ஆவி பிடித்தல்

Bhavna Anand

ஆவி பிடித்தவுடன் வியர்வையை நன்கு துடைத்துவிட்டு இயற்கை காற்று 10 நிமி டங்கள் நம்மீது படும்படி இருக்க வேண்டும். உடனே ஏ.சி அறைக்குள் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

Anbu Bala

ஆவி பிடித்தலில் தவறாமல் இடம்பெற வேண்டியவை மஞ்சள்தூள், கல் உப்பு ஓமவல்லி. இம்மூன்றையும் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடித்தால்... ஜலதோஷத்துக்கு நம்மை பிடிக்காது!

Radhika Ravindrran

தண்ணீரை கொதிக்க வைத்து, சிறிது கற்பூரம் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும்.

Jaya Meena

யூக்கலிப்டஸ் எண்ணெயை வெந்நீரில் சேர்த்து ஆவி பிடித்தால் நாசித் தொந்தரவில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

Gowthami Balan

பொதுவாக ஆவி பிடிக்கும்போது காற்றை வாய் வழியாக உள்ளிழுத்து, மூக்கு வழியாக வெளியே விடவும். இது சுவாசக் குழாய் சுத்திகரிப்பு முறை.

Menaga Sathia

மஞ்சள்தூள், வெற்றிலை (ஃப்ரெஷ்/காய்ந்தது), கிராம்பு இவை மூன்றும் சேர்த்துக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க தலைபாரம், மூக்கடைப்பு சரியாகும்.

Shubhatha Mol

ஆவி பிடிக்க பதப்படுத்தப்பட்ட மஞ்சள் தூளுக்குப் பதிலாக பசும்மஞ்சள் தட்டிச் சேர்க்கலாம்.

Vinodhini Radhakrishnan

இடித்த விரலி மஞ்சள் இரண்டுடன் நொச்சி இலை கைப்பிடி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

சளியுடன் கொரோனாவுக்கான மற்ற அறி குறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

ஆவி பிடித்தல்... என்னென்ன பொருள்களைப் பயன்படுத்தலாம்..?! #Avaludan

ஆவி பிடித்தல் பற்றி மருத்துவரின் அறிவுரை! -

ஃபரூக் அப்துல்லா, பொதுநல மருத்துவர், சிவகங்கை

மேல் சுவாசப்பாதையில் தொற்று ஏற்படும்போது (Upper Respiratory Tract Infection), மூக்கில் உள்ள சளியை ஓரளவுக்கு மேல் வெளியேற்ற இயலாமல் போகும்போது, மூச்சுவிட இயலாது. அப்போது நாம் வீட்டில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் யூக்கலிப்டஸ் தைலம், மூலிகைகள் போன்றவற்றை போட்டு ஆவி பிடிக்க, மூக்கடைப்பு சரியாகும். ‘சைனஸ்’ எனப்படும் முகத்தில் உள்ள காற்றறைகளின் வாயில்களில் அடைப்பு ஏற்பட்டால், அவற்றில் சளி சேர்ந்து அடைத்துக்கொள்ளும். அந்த நிலையை `சைனசைடிஸ்' (Sinusitis) என்போம். இந்த நிலையிலும் நீராவியை மூக்கின் வழி பிடிப்பது அந்த அடைப்புகளை ஓரளவு சரிசெய்து தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கவல்லது என்பதால், இரண்டு நிமிடங்களுக்கு மிகாமல் ஆவி பிடிப்பதை காது, மூக்கு, தொண்டை நிபுணர்களே பரிந்துரைப்பார்கள்.

ஆவி பிடித்தல் போன்றவற்றை `சைனசைடிஸ்' மற்றும் மேல் சுவாசப்பாதை தொற்றுகளில் மட்டுமே அறிகுறிகள் சரியாவதற்காகப் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 தொற்று கண்ட நபர்களுக்கு மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் நோய்த்தொற்றின் ஆரம்பத்தில் ஒரு சில நாள்களுக்கு மட்டுமே தென்படுகின்றன. இந்த நாள்களில் அவரவர் விருப்பப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மூக்கடைப்பை சரிசெய்யும் நோக்கத்தில் அந்த அறிகுறியை சரி செய்வதற்காக ஆவி பிடிக்கின்றனர். ஆனால், கொரோனா வைரஸை ஆவி பிடிப்பதால் கொன்றுவிட முடியும் என்று நம்பி வீட்டிலேயே ஆவி மட்டும் பிடித்துக்கொண்டு, அறிகுறிகளை துச்சம் செய்து காலத்தை தாழ்த்துவது தவறு.

ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ, மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களைக் கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும். மேலும், கொரோனாவைப் பொறுத்தவரை நோய்த்தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றுவதையும் ஆவி பிடிப்பதால் நிறுத்த முடியாது.

சொல்லப்போனால், கொரோனா நோய்த்தொற்று சாதாரண (Mild) நிலையில் இருந்து மிதமான (Moderate) நிலைக்குச் செல்லுமானால் நோயாளியின் நுரையீரலில் ‘நிமோனியா’ ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் மென்மேலும் சூடு அதிகமான நீரையோ எண்ணெய்கள் கலந்த நீரையோ வைத்து ஆவி பிடிப்பது, ஏற்கெனவே கொரோனா நிமோனியாவால் வெந்த நுரையீரலில் வேலைப் பாய்ச்சுவதுபோல அமைந்துவிடக்கூடும். எனவே, சாதாரண சளித் தொந்தரவுக்கு ஆவி பிடிக்கலாம். சளியுடன் கொரோனாவுக்கான மற்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.