லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

அளவுக்கதிமான ஆன்டிபயாடிக்குகள்... - ‘சூப்பர்பக்’ அலாரம்!

‘சூப்பர்பக்’ அலாரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
‘சூப்பர்பக்’ அலாரம்!

இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்டிபயாடிக்குகள் வரைமுறையின்றி உபயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டு அலைகளைக் கடக்க இருக்கிறோம். கோவிட் தொற்று மற்றும் அதன் சிகிச்சை முறைகள், மருந்துகள், தடுப்பூசிகள் சார்ந்த பல சவால்கள், கேள்விகள், ஐயங்களைக் கடந்து வந்து கொண்டிருக்கிறோம். கோவிட் நோய் பாதித்தவர்களில் அரிதாக சிலருக்கு தற்போது ‘ம்யூகார்’ (Mucor) பூஞ்சை தொற்றும் ஏற்பட்டு கண் பாதிப்புகளை ஏற்படுத்தி நம்மை இன்னும் எச்சரிக்கை யுடன் இருக்கக் கட்டளையிடுகிறது.

இந்த நிலையில், கோவிட் பெருந்தொற்றின் மற்றொரு விளைவாக இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரும் சுகாதாரப் பிரச்னை யாக, ‘ஆன்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ்’ (Antibiotic resistance) இருக்கப்போகிறதோ என்ற அச்சம் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அதாவது, பாக்டீரியா நோய்க்கிருமிகள் அவற்றை அழிக்கக் கொடுக்கப்படும் மருந்துகளுக்குக் கட்டுப்படாமல், ஒருகட்டத்தில் அந்த மருந்து களை எதிர்த்து வெற்றிகொள்ளும் நிலை. எனில், நோய்களுக்குத் தரப்படும் மருந்துகள் நோயைக் கட்டுப்படுத்தவோ, குணப்படுத்தவோ கைகொடுக்காது. இதைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம்.

ஆன்டிபயாடிக்குகள் என்றால் என்ன?

மனிதர்களைத் தாக்கி நோய் நிலையை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் எனும் நுண்ணுயிரிகளுக்கு எதிராக, அவற்றின் பெருக்கத்தைக் குறைக்கும் அல்லது அழிக்கும் மருந்துகளை ‘ஆன்டிபயாடிக்ஸ்’ என்போம். இத்தகைய ஆன்டிபயாடிக்குகளில், பாக்டீரியா தொற்று உண்டான நபருக்குத் தேவையான மருந்தை, தேவையான அளவு, போதுமான காலம் கொடுப்பதே சரியான மருத்துவப் பரிந்துரையின் இலக்கணம்.

அளவுக்கு அதிகமான ஆன்டிபயாடிக்குகள் என்ன செய்யும்?

‘Survival of the fittest’ கோட்பாடுதான் இங்கும் நடக்கும். அதாவது, உடலில் செலுத்தப் படும் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு அந்தக் கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, அதன் அடுத்த தலைமுறைக் கிருமிகளுக்கும் மருந்தை எப்படி எதிர்த்துப் பிழைக்க வேண்டும் என்ற செயல்திறனைக் கடத்திவிடும். இதனால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆன்டிபயாடிக் மருந்துகள், கிருமியின் எந்தப் பகுதியில் அதைத் தாக்குவதற்காக உருவாக்கப் படுகிறதோ, அதே பகுதி மேலும் வலிமை யடைந்துவிடும்.

அளவுக்கதிமான ஆன்டிபயாடிக்குகள்...  - ‘சூப்பர்பக்’ அலாரம்!

கொரோனா தொற்று சிகிச்சையில் நடப்பது என்ன?

இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஆன்டிபயாடிக்குகள் வரைமுறையின்றி உபயோகிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உண்மையில் கோவிட் என்பது பீட்டா கொரோனா வைரஸ் வகையால் உண்டாகும் நோய். வைரஸை அழிக்க வைரஸ் கொல்லிகள் எனும் ஆன்டி வைரல் மருந்துகள்தான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், ஆன்டி பயாடிக்குகளும் அளவுக்கு அதிகமாக வழங்கப்படுகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள கோவிட் நோய் சிகிச்சைக்கான வழிமுறைகளில், ஆன்டிபயாடிக்குகள் எங்குமே இடம் பெறவில்லை என்பதை அடிக்கோடிடுகிறேன்

ஆனாலும், இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் அறிகுறிகளற்ற தொற்றாளர்களுக்கும் சரி, சாதாரண அறிகுறிகள் கொண்டவர்களுக் கும் சரி... அவசியமின்றி `அசித்ரோமைசின்' (Azithromycin), `டாக்சிசைக்ளின்' (Doxycycline) போன்ற உயரிய வகை ஆன்டி பயாடிக்குகள் வழங்கப் படுகின்றன.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆன்ட்பயாடிக்குகள் பயன்பாடு குறித்த வகைப்படுத்தலில்...

Access (எளிதில் கிடைக்கச்செய்யவும்)

Watch (கண்காணித்துப் பயன் படுத்தவும்)

Reserve (ஆபத்து காலத்துக்குப் பயன்படுத்த வைத்திருக்கவும்)

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் ‘ஆபத்துக் காலத்தில் பயன்படுத்த வைத்திருக்கவும்’ என்ற வகைப்படுத்தலில் உள்ள ஆன்டிபயாடிக்குகள், இந்தக் கொரோனா காலத்தில் நோயாளர் களுக்கு அதிகமாக உபயோகிக்கப் படுகின்றன. கோவிட் நோய் தொற்றினால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ‘பாக்டீரியா தொற்று ஏற்படும்’ என்ற அச்சம்தான், ஆன்டிபயாடிக்குகள் உபயோகத் துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

திடுக்கிட்ட ஆய்வாளர்கள்!

கடந்த மே மாதம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் செய்யப்பட்ட ஆய்வில், மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட 17,534 கொரோனா தொற்று நோயாளிகளில் 3.6 சதவிகிதம் பேருக்கு மட்டுமே ‘இரண்டாம் நிலை’ தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அந்த இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டவர்களுக்கு, மிக அரிதாகக் காணப்படும், தீவிரமான விளைவு களை ஏற்படுத்தும், மருந்துகளுக்குக் கட்டுப்படாத (Drug - resistant) பாக்டீரியாக்களான க்லெப்சியல்லா நியூமோனியே (Klebsiella pneumoniae), அசினோடோபேக்டர் பெளமா னியை (Acinetobacter baumannii) ஆகியவை கண்டறியப்பட்டது, ஆய் வாளர்களைத் திடுக்கிட வைத் துள்ளது.

மெடிக்கல்ஷாப்களில் மருந்து வாங்கும் ஆபத்து!

கோவிட் நோயால் அதிகரித்துள்ள ஆன்டிபயாடிக் பயன்பாடு ஒருபக்கம் என்றால், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தனிநபர் ஆன்டிபயாடிக் உட்கொள்ளல் அளவு சற்று ஏறக்குறைய 30 சத விகிதம் உயர்ந்துள்ளது.

இதற்கான மற்றொரு முக்கிய காரணம், மக்கள் மருத்துவர்களைச் சந்திக்காமலேயே நேரடியாக மருந்தகங்களில் ஆன்டிபயாடிக்கு களை வாங்கிச் சாப்பிடுவது. மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், மருந் தகங்களும் சரி, மக்களும் சரி இதைக் கடைப்பிடிப்பதில்லை.

இதன் விளைவாக, ஆன்டிபயாடிக் ரெசின்டன்ஸ் மிகப்பெரும் பிரச்னையாக உருமாறி வருகிறது.

அச்சுறுத்தும் சூப்பர்பக்!

உலகில் தற்போது வழக்கத்தில் உள்ள ஆன்டிபயாடிக்குகளுக்கு கட்டுப்படாத அளவில், ‘சூப்பர்பக்’ (Superbug) எனும் அதிதீவிர, கட்டுக்கடங்காத பாக்டீரியாக்கள் உருவாகி வருகின்றன. இத்தகைய சூப்பர்பக் பாக்டீரியாவால் தொற்று அடைந்த ஒருவரை எந்த மருந்தாலும் காப்பாற்றிட இயலாது என்பது துயரம்.

இந்த நிலையை நாம் எட்டாமல் இருக்க, இனி அவசியத் தேவையற்ற நிலையில் ஆன்டிபயாடிக்குகளை பரிந்துரை செய்ய மாட்டோம் என்று மருத்துவர்களும், மருத்துவரின் பரிந்துரையின்றி ஆன்டிபயாடிக்கு களை தாங்களாகவே வாங்கி உண்ண மாட்டோம் என்று மக்களும் உறுதி ஏற்க வேண்டும்.