Published:Updated:

தடை செய்யப்பட்ட 328 மருந்துகளின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

Dr.வி.விக்ரம்குமார்.,MD(S)

பல ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் ராகத்துடன் ஒளிபரப்பான, அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு வலி நிவாரணி மருந்து, சென்ற ஆண்டு தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இடம்பிடித்தது...

மாத்திரைகள்
மாத்திரைகள்

இத்தனை நாள்களாகப் பயன்படுத்தப்பட்ட அனைவருக்கும் பரிச்சயமான மருந்துகள் தடை செய்யப்படுவது அவ்வப்போது தலைப்புச் செய்தியாகின்றன. அந்தச் செய்திகளை எல்லாம் பார்த்துவிட்டு கடந்து சென்றிருப்போம். ஆனால், 'என்னென்ன மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன? அவை தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன?' என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

போலி மருத்துவர்கள்
போலி மருத்துவர்கள்

மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்தகங்களில் தாராளமாகக் கிடைத்த பல மருந்துகள் தடை செய்யப்பட்டதில் பலருக்கு அதிர்ச்சி, பலருக்கு மகிழ்ச்சி. கடந்த ஆண்டு `ஃபிக்ஸட் டோஸ் காம்பினேஷன்' (Fixed dose combination - FDC) எனப்படும் 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை தடை விதித்தது. மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (Drugs and cosmetics act, 1940) பிரிவு 26 'A'-ன்படி, மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டன.

குறிப்பிட்டபடி மருத்துவக் குணங்கள் இல்லாமல் இருப்பது, பக்கவிளைவுகளை ஏற்படுத்துவது அல்லது எந்த விளைவையும் ஏற்படுத்தாமல் இருப்பது போன்றவை இந்தப் பிரிவின் கீழ் அடங்கும் அம்சங்கள் ஆகும். பல ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் ராகத்துடன் ஒளிபரப்பான, அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு வலி நிவாரணி மருந்து, சென்ற ஆண்டு தடைசெய்யப்பட்ட மருந்துகள் பட்டியலில் இடம்பிடித்தது. சர்க்கரைநோயைக் கட்டுப்பாட்டில் வைக்க பயன்பாட்டில் இருந்த கூட்டு மருந்து, தோல் நோய்க்கான மருந்து, பல ஆன்டிபயாடிக் மருந்துகள் எனப் பல்வேறு மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தலைவலிக்காக இருந்தாலும் சரி, வயிற்றுப் புண்ணுக்காக இருந்தாலும் சரி... எக்காரணம் கொண்டும் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துகளை வாங்க வேண்டாம்...
மருத்துவர் விக்ரம்குமார்.

கூட்டு மருந்துகள்: ஒரு நோயாளிக்கு ஏற்படும் பல குறிகுணங்களுக்கு தனித்தனியாக மருந்துகள் கொடுப்பதற்குப் பதிலாக, இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மருந்துகளை ஒன்றுசேர்த்து கொடுப்பதற்காக ‘கூட்டு மருந்துகள்’ உருவாக்கப்பட்டன. பல மாத்திரைகளைத் தனித்தனியாக விழுங்குவதற்கு மாற்றாக, ஒரே மாத்திரையாக எடுத்துக்கொள்ளலாம். அப்படி உருவாக்கப்பட்ட கூட்டு மருந்துகள், நோயாளிகளுக்குப் பக்கவிளைவுகளை ஏற்படுத்தினாலோ அல்லது எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாதபோது தடை செய்யப்படுகின்றன.

மருத்துவரின் பரிந்துரையோடு இத்தனை நாள்களாகச் சந்தையில் புழங்கிய பல மருந்துகள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுவரை நாம் சாப்பிட்டுவந்த தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள். நேரடியாக மருந்தகங்களுக்குச் சென்று, தலைவலிக்கு ஒரு மாத்திரை, உயர் ரத்த அழுத்தத்துக்கு ஒரு மாத்திரை, காய்ச்சலுக்கு ஒரு மாத்திரை எனப் பல்வேறு தவறான கலவை (Combination) மாத்திரைகளை நாமே வலியச்சென்று வாங்கியிருப்போம்.

தடை செய்யப்பட்ட மாத்திரை
தடை செய்யப்பட்ட மாத்திரை

பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறு இது. அவ்வப்போது வெளியிடப்படும் தடை செய்யப்பட்ட மருந்துகள் பட்டியலை அனைவரும் விவரமாகப் படிக்க வேண்டியது மிக அவசியம். மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொண்ட தவறான கூட்டு மருந்துகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் பதற வேண்டாம். இனிமேல் அத்தகைய தவற்றைச் செய்யாமல் மருத்துவரை மட்டுமே நாடவும்.

இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்போடு தன் பெயரையும் சேர்க்கும் ஃபேஸ்புக் - என்ன காரணம்?

பல்வேறு ஆய்வுகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஃபிக்சட் டோஸ் மருந்துகள்’ எனச் சொல்லப்பட்ட மருந்துகளுக்கே இந்த நிலை. அப்படியிருக்கையில் நோயைப் பற்றியும் மருந்துகளைப் பற்றியும் செறிவில்லாமல், நாமாக ஒரு ஃபிக்சட் டோசை அமைத்து மருந்துக்கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது எவ்வளவு விபரீதங்களை உருவாக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட மாத்திரை
தடை செய்யப்பட்ட மாத்திரை

போலி மருத்துவர்களின் கூட்டு மருந்துத் தத்துவம்: ஐந்தாம் வகுப்பு அல்லது ஆறாம் வகுப்பு படித்துவிட்டு மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்கள், தவறான கூட்டு மருந்துகளைப் பயன்படுத்துவதில் கைதேர்ந்தவர்கள். நோயாளி கூறும் பல்வேறு குறிகுணங்களை வைத்து, 'என்ன நோய்' என்று கணிக்கத் தெரியாமல், பல்வேறு மருந்துகளைச் சேர்த்து ஒரே நேரத்தில் பரிந்துரைப்பார்கள் அல்லது தவறான மருந்துக் கலவைகளை ஊசியின் மூலம் செலுத்துவார்கள். பொத்தாம் பொதுவாகக் கூட்டு மருந்துகளைத் திட்டமிட்டு, பல அப்பாவிகளுக்குக் கொடுத்து பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிட்டு சுதந்திரமாகச் சுற்றித்திரிகிறார்கள். ‘அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து’ என்பது இவர்கள் தத்துவம்.

காய்ச்சலைக் குறைப்பதற்காக மருத்துவமனை சென்ற நோயாளிக்குப் போலி மருத்துவர்களின் தவறான கூட்டுமருந்து பிரயோகத்தின் விளைவாக, இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் உண்டாக வாய்ப்பிருக்கிறது. போலி மருத்துவர்கள் குறித்து நகரங்களில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது; பெரும்பாலும் கிராமமக்கள்தான் இவர்களிடம் அதிகம் ஏமாறுகிறார்கள்.

தடை செய்யப்பட்ட மாத்திரை
தடை செய்யப்பட்ட மாத்திரை

பல ஆண்டுகளாகவே தவறான கூட்டு மருந்துகளுக்கு எதிராகக் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. கடந்த 2016-ம் ஆண்டு 300-க்கும் மேற்பட்ட மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஆனால் அதன்பிறகு மருந்து உற்பத்தியில் உச்சத்திலிருக்கும் பல பெருநிறுவனங்கள் தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது தனிக்கதை. பல்வேறு அழுத்தங்களைத் தாண்டி, கடந்த ஆண்டு மீண்டும் பல தவறான கூட்டு மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டது அறம்சார் மருத்துவர்கள் மத்தியில் வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.

பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள், நமது நாட்டில் இன்றும் புழக்கத்தில் இருக்கின்றன. நோய்களைத் தடுப்பதற்காக சந்தையில் விடப்பட்ட கூட்டு மருந்துகளோ தனி மருந்தோ பலமுறை பின்வாங்கப்பட்டுள்ளன. உடல்பருமனைக் குறைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் மட்டுமல்ல உணவு செரிமானமாவதற்காகக் கொடுக்கப்பட்ட மருந்துகள் ஏற்படுத்திய பக்கவிளைவுகளால் இவை தடைசெய்யப்பட்ட வரலாறு அழுத்தமானது.

உணவே மருந்து அல்லது `மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ எனும் வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றுவதே மருந்து, மாத்திரைகளைத் தவிர்க்கும் வழிமுறையாக இருக்கமுடியும்.
மருத்துவர் விக்ரம்குமார்.

சாதாரணமாகக் கடந்து செல்லக்கூடிய விஷயமல்ல இது. இனிமேலாவது விழிப்புடன் செயல்படுவது மிக அவசியம். நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பின்னணி என்ன, அவற்றின் விளைவுகள் என்ன, செய்கைகள் என்னவென்பதை மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

தலைவலிக்காக இருந்தாலும் சரி, வயிற்றுப் புண்ணுக்காக இருந்தாலும் சரி... எக்காரணம் கொண்டும் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மருந்துகளை வாங்க வேண்டாம்.

தடை செய்யப்பட்ட மாத்திரை
தடை செய்யப்பட்ட மாத்திரை

என்ன செய்யலாம்?: முடிந்த அளவு மருந்து, மாத்திரைகளைத் தவிர்த்து ஆரோக்கியமுடன் வாழக் கற்றுக்கொள்வது முக்கியம். உணவே மருந்து அல்லது `மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்’ எனும் வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றுவதே மருந்து, மாத்திரைகளைத் தவிர்க்கும் வழிமுறையாக இருக்கமுடியும். உணவு மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தினால், மாத்திரைகளை நாட வேண்டிய அவசியம் இருக்காது. அதையும் மீறி நோய் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளின் அளவறிந்து எடுக்கலாம்.