Published:Updated:

கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை...
பிரீமியம் ஸ்டோரி
News
கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை...

நமது நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே கறுப்புப் பூஞ்சையை வரவிடாமல் செய்யும் வல்லமை பெற்றது.

கொரோனாவிலிருந்து மீண்ட சிலருக்கு அடுத்த பாதிப்பாக வந்து வதைக்கிறது Mucormycosis எனப்படும் கறுப்புப்பூஞ்சை நோய். இப்போது கொரோனாவைவிட அதிக அச்சத்துடன் இதுபற்றி விவாதிக்கிறார்கள். கண்களை பாதிப்பதுடன், மரணத்தையும் ஏற்படுத்துகிறது என்பதுதான் பயத்துக்குக் காரணம். வட மாநிலங்களில் சிலர் கறுப்புப் பூஞ்சையால் இறந்திருக்கிறார்கள். தமிழகத்தில் தூத்துக்குடியில் ஒருவர் இறந்ததாகச் செய்தி வெளியானாலும், அதை அரசு மறுத்திருக்கிறது.

இதைக் கொள்ளை நோயாக அறிவித்தது மத்திய அரசு. ‘மாநிலங்களும் இப்படி அறிவிக்க வேண்டும்’ என்று மத்திய அரசு அறிவுறுத்தியதை அடுத்து தமிழக அரசும் இதேபோல செய்துள்ளது. இதன்படி, எந்த ஒரு மருத்துவமனையிலும் ஒருவருக்குக் கறுப்புப் பூஞ்சை தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், உடனே அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

கறுப்புப் பூஞ்சை நோய் பற்றிச் சில அடிப்படைத் தகவல்கள்:

இது கொரோனா போல புது நோயா?

இல்லை. இது ஏற்கெனவே இருக்கும் நோய்தான். மூக்கின் உட்புறத்தில் உள்ள சைனஸ் பகுதி, கண்கள் மற்றும் மூளையில் ஒருவித பூஞ்சைத் தொற்று ஏற்படுவதே இந்த நோய். கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகள், ஸ்டீராய்டு சிகிச்சை பெறுவோர், நீண்ட நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்போர் ஆகியவர்களுக்கு இது ஏற்படும். இப்போது புதிதாக கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கும் ஏற்படுகிறது. அதனால்தான் இப்போது அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், இதை முழுமையாக குணப்படுத்த முடியும்.

நமது நோய் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே கறுப்புப் பூஞ்சையை வரவிடாமல் செய்யும் வல்லமை பெற்றது. ஆனால், ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள், நோய்த்தொற்று காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்பது வேதனை.

யாருக்கு அபாயம் அதிகம்?

 கொரோனாத் தொற்றுக்கு ஸ்டீராய்டு சிகிச்சை பெற்ற சர்க்கரை நோயாளிகள்.

 நீண்ட காலம் ஸ்டீராய்டு சிகிச்சை எடுக்க நேரிட்டவர்கள்.

 கொரோனா தீவிரத் தொற்று ஏற்பட்டு, நீண்ட காலம் ஆக்சிஜன் தேவையில் இருந்தவர்கள்.

 தீவிர கொரோனா நோயாளிகள்.

இவர்கள் எல்லோருக்குமே கறுப்புப் பூஞ்சை கட்டாயம் வரும் என்பதில்லை. இவர்களில் அரிதாக சிலருக்கே பாதிப்பு ஏற்படுகிறது.

கறுப்புப் பூஞ்சை... வெள்ளைப் பூஞ்சை... தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

இதைத் தடுப்பதற்குக் கண்காணிப்பு தேவையா?

ஆமாம். அதிக ஆபத்துள்ள இதுபோன்ற நோயாளிகளைக் கண் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டும் என நெறிமுறை வகுக்கப்பட்டுள்ளது. கொரோனா குணமாகி வீடு சென்றபிறகும், மூன்று மாதங்களுக்கு பரிசோதனைகளும் கண்காணிப்பும் தேவைப்படும்.

அறிகுறிகள் என்னென்ன?

 தலைவலி மற்றும் கண்வலி.

 மூக்கடைப்பு மற்றும் மூக்கின் உட்புறம் சைனஸ் பகுதியில் வலி.

 மூக்கிலிருந்து ரத்தக்கசிவோ, கறுப்பான திரவமோ வெளியாதல்.

 கண்களைச் சுற்றி வீக்கம், கண்கள் சிவந்திருத்தல், பார்வைக் குறைபாடு, கண்களை மூடுவதிலும் திறப்பதிலும் சிரமம் ஏற்படுதல்.

 முகத்தில் அரிப்பு அல்லது மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்படுதல்.

 வாயைத் திறப்பதிலும் உணவை மெல்லுவதிலும் சிரமம் ஏற்படுதல்.

 வாய் அல்லது மூக்கைச் சுற்றி கறுப்புத் திட்டுகள் ஏற்படுதல்.

எப்படிக் கண்டறிவது?

கறுப்புப் பூஞ்சை அபாயம் உள்ளவர்கள், தினமும் தங்களை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். நல்ல வெளிச்சத்தில் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க வேண்டும். கண்கள், மூக்கு, தாடை போன்ற இடங்களில் வீக்கம் உள்ளதா எனக் கவனிக்க வேண்டும். எங்காவது கறுப்பாக நிறம் மாறியுள்ளதா, தொட்டால் வலிக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். மூக்கின் உள்ளேயும், வாயிலும் வீக்கம் மற்றும் நிறமாற்றம் உள்ளதா என்று டார்ச் அடித்துப் பார்க்க வேண்டும்.

எப்படித் தடுப்பது?

 ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

 கொரோனா சிகிச்சையின்போது ஸ்டீராய்டு மருந்துகளைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது.

 தேவையின்றி ஆவி பிடிப்பதைத் தவிர்க்கவும். ஆவி பிடிப்பதற்குத் தூய்மையான நீரைப் பயன்படுத்தவும்.

 விண்டோ ஏ.சி-யிலிருந்து காற்று முகத்தில் அடிப்பது போல அருகே இருக்கக்கூடாது.

 கொரோனாவிலிருந்து நலம் பெற்ற பிறகு தூய்மையான இடத்தில் இருக்க வேண்டும். விருந்தினர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சிகிச்சைகள் என்னென்ன?

கறுப்புப் பூஞ்சை நோய் அறிகுறிகள் இருந்தால், அறிகுறியைப் பொறுத்து கண் மருத்துவரையோ, காது, மூக்கு, தொண்டை நிபுணரையோ அணுக வேண்டும். தேவையைப் பொறுத்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பரிசோதனை செய்வார்கள். அதன்பின் சிகிச்சையை முடிவு செய்வார்கள். Amphotericin B என்ற மருந்தைக் கறுப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். பலரும் விஷயம் தெரிந்து இந்த மருந்தைப் பதுக்கிவிட்டதால், இப்போது கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வெள்ளைப் பூஞ்சை என்பது என்ன?

மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பீகார் மாநிலங்களில் சிலருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. கறுப்புப் பூஞ்சையைவிட இது தீவிரமான நோயாகக் கருதப்படுகிறது. இது நுரையீரல், நகங்கள், சருமம், வயிறு, சிறுநீரகம், மூளை உள்ளிட்ட உறுப்புகளை பாதிக்கிறது. கறுப்புப் பூஞ்சை யாரையெல்லாம் பாதிக்குமோ, அவர்களையே வெள்ளைப் பூஞ்சையும் பாதிக்கிறது.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சி.டி ஸ்கேன் மூலம் தொற்றைக் கண்டறிய முடியும். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், பூஞ்சைத் தொற்றை குணப்படுத்தும் மருந்துகள் மூலமே இதையும் குணப்படுத்த முடியும் என்பது ஆறுதல் தரும் செய்தி.