Published:Updated:

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை...
பிரீமியம் ஸ்டோரி
பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை...

ஆரம்பத்துல இங்கே மாத்திரை கம்பெனி வரப்போகுதுன்னு சொன்னாங்க. பயத்துல நாங்க அதை எதிர்த்தோம். அப்புறம் பார்த்தா, அது தடுப்பூசி கம்பெனி.

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

ஆரம்பத்துல இங்கே மாத்திரை கம்பெனி வரப்போகுதுன்னு சொன்னாங்க. பயத்துல நாங்க அதை எதிர்த்தோம். அப்புறம் பார்த்தா, அது தடுப்பூசி கம்பெனி.

Published:Updated:
பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை...
பிரீமியம் ஸ்டோரி
பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை...

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை வதைத்துக்கொண்டிருக்கும் சூழலில், இந்தியாவில் தடுப்பூசிகள் தயாரிக்கும் வல்லமை படைத்த பொதுத்துறை நிறுவனங்களைப் பயன்படுத்தினால் தடுப்பூசி பற்றாக்குறையோ, விலை உயர்வோ இருக்காது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதில், மத்திய பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டவில்லை என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, செங்கல்பட்டு அருகே 594 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்துஸ்தான் பயோடெக் நிறுவனம் (ஹெச்.பி.எல்) என்கிற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியை ஏன் தயாரிக்கவில்லை என்ற கேள்வியைப் பல தரப்பினரும் எழுப்புகிறார்கள்.

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

ஹெச்.பி.எல் நிறுவனம் அமைந்திருக்கும் செங்கல்பட்டு மாவட்டம், திருமனி கிராமத்துக்குச் சென்றோம். 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது ஹெச்.பி.எல்-ன் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம். மாதம் ஒன்றுக்கு 50 கோடி டோஸ் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் அனைத்தும் அங்கு தயாராக இருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனம் செயலற்றுக்கிடக்கிறது. காவலாளிகளைத் தவிர வேறு எவரையும் காண முடியவில்லை. “சி.இ.ஓ சார் இன்று வரவில்லை... நாளைதான் வருவார்” என்ற பதிலை மட்டும் காவலாளி ஒருவர் சொன்னார்.

ஹெச்.பி.எல் வளாகம் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உள்ளூர் பெரியவர் ஒருவரிடம் பேசினோம். “ஆரம்பத்துல இங்கே மாத்திரை கம்பெனி வரப்போகுதுன்னு சொன்னாங்க. பயத்துல நாங்க அதை எதிர்த்தோம். அப்புறம் பார்த்தா, அது தடுப்பூசி கம்பெனி. இதன் மூலமாக, இந்தச் சுற்றுவட்டாரத்துல பல பேருக்கு செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பிங் மாதிரியான வேலைகள் கிடைச்சுது. ஆனா, கம்பெனி செயல்படாததால, அந்த வாய்ப்புகள் எல்லாம் போச்சு. பல கோடி ரூபா செலவு செஞ்சு கட்டிப்போட்டுட்டு, ஏன் இப்பிடி சும்மாவெச்சிருக்காங்கன்னு தெரியலை...’’ என்றார் கவலையுடன்.

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

இந்த நிறுவனத்தில் பணியாற்றிவரும் தொழில்நுட்பப் பணியாளர்கள் சிலரைச் சந்தித்தோம். “காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, 2012-ம் ஆண்டு, 594 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2017-ம் ஆண்டு நிறைவடைந்த இந்தத் திட்டம், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனத்தில் தடுப்பூசியை உற்பத்தி செய்யவும், பேக்கிங் செய்யவும் அதிநவீன வசதிகள் உள்ளன. பிசிஜி தடுப்பூசி, ஹெப்படைட்டிஸ் பி, அம்மைநோய் தடுப்பூசி, வெறிநாய்க் கடி தடுப்பூசி உட்பட பல தடுப்பூசிகளை இங்கு தயாரிக்கலாம்.

கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவும் கட்டமைப்பு உள்ளது. 110 கே.வி மின் நிலையம், தடுப்பூசிகளைச் சோதித்துப் பார்க்க ‘அனிமல் ஹவுஸ்’, ஸ்டோரேஜ் வசதிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை, தரக்கட்டுப்பாடு ஆய்வகம், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகப் பிரிவுகள் எனச் சகல வசதிகளும் இங்கு தயார்நிலையில் இருக்கின்றன. ஆனால், இதைச் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஜி.எஸ்.டி கொண்டுவரப்பட்டதன் காரணமாக, இந்தத் திட்டத்துக்கான செலவு 310 கோடி ரூபாய் கூடுதலாகிவிட்டது. அதை வழங்குமாறு மத்திய அரசிடம் ஹெச்.பி.எல் நிர்வாகம் கேட்டும், அதை வழங்க மத்திய அரசு தயாராக இல்லை” என்று சோகத்துடன் கூறினார்கள்.

இந்த நிறுவனத்தை மீண்டும் இயங்கவைக்கப் போராடிவரும் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணனிடம் பேசினோம். “2019 ஜூன் மாதத்திலிருந்து பணியாளர்களுக்குச் சம்பளப் பிரச்னை இருக்கிறது. சம்பளப் பிரச்னை காரணமாக, பலர் வேலையை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். 200 பேர் பணியாற்றிய இடத்தில், இப்போது 75 பேர் மட்டும் பணியில் இருக்கிறார்கள். மத்திய அரசு ஊழியர்களான இவர்களுக்கு மாதச் சம்பளம் இல்லை. தொழிலாளர் நலத்துறையிடம் சி.ஐ.டி.யூ சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதால், ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. நிதி இல்லை என்று சொல்லிச் சம்பளமும் குறைக்கப்பட்டுவிட்டது. 80,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சயின்டிஸ்ட்களுக்கு இப்போது 25,000 ரூபாய்தான் சம்பளம் வழங்கப்படுகிறது. மற்றவர் களுக்கு 10,000 ரூபாயாகச் சம்பளம் குறைக்கப்பட்டுவிட்டது” என்றார்.

பூட்டிக்கிடக்கும் தடுப்பூசி தொழிற்சாலை... கண்டுகொள்ளாத மோடி அரசு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி-யுமான டி.கே.ரங்கராஜன் நம்மிடம் பேசுகையில், “ஹெச்.பி.எல் விவகாரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கடந்த ஆண்டு சந்தித்துப் பேசினேன். பிறகு, பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தேன். அவரிடம், ‘பலவிதமான தடுப்பூசிகளை உற்பத்தி செய்யக்கூடிய வசதிகளும் திறனும் இந்த நிறுவனத்தில் இருக்கின்றன. இதன் மூலம், இந்தியாவின் தடுப்பூசித் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், தென்கிழக்கு ஆசியாவுக்கே சப்ளை செய்ய முடியும்’ என்றேன். அத்துடன், ‘மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் வந்து பார்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்’ என்றும் சொன்னேன். அதற்கு, ‘அப்படியா... அமைச்சர் விசிட் பண்ணட்டும். பார்த்துக்கொள்ளலாம்’ என்று பிரதமர் சொன்னார். அதன் பிறகு, சுகாதார அமைச்சர் செங்கல்பட்டு வந்தார். நானும் சென்றிருந்தேன். வளாகத்தைச் சுற்றிப்பார்த்த அவர், தேவையான நிதியை ஒதுக்குகிறேன் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார். ஆனால், அதன் பிறகு எந்த நகர்வும் இல்லை. இப்போது கொரோனா 2-வது அலையின் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரதமருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். பார்ப்போம்” என்றார்.

ஹெச்.பி.எல் நிர்வாகத் தரப்பினரிடம் நாம் கேட்டபோது, ‘‘இது தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான நிறுவனம். அவசரத் தேவைக்காக சானிடைஸர் தயாரித்துக் கொடுத்தோம். தடுப்பூசிகள் உற்பத்திக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் உற்பத்தியைத் தொடங்கிவிடுவோம். அரசு - தனியார் கூட்டு முயற்சியில் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான முயற்சியும் இருக்கிறது” என்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். “காங்கிரஸ் ஆட்சியில் குன்னூர், கிண்டி உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசி நிறுவனங்கள் மூடப்பட்டதால், ஒருங்கிணைந்த தடுப்பூசி உற்பத்தி மையம் வேண்டும் என்பதற்காக செங்கல்பட்டில் இதை உருவாக்கினார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த நிறுவனத்தில் உற்பத்தியைத் தொடங்கு வதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. ஆனால், அதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. புதிய தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதற்கான வல்லமையும், அனுபவமும், நிபுணத்துவமும் வேண்டும். கொரோனா தடுப்பூசியை ஏன் இங்கு உற்பத்தி செய்யவில்லை என்று கேட்பதெல்லாம் விதண்டாவாதம். ஏதோ இது செங்கல்பட்டில் இருக்கிறது என்பதற்காக, அதில் ஒரு சென்டிமென்ட்டை ஏற்படுத்துவதுபோல பேசுவது தவறானது” என்றார்.

இந்த நிறுவனத்தை இயக்குவதற்கு வெறும் 310 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ‘பிஎம் கேர்ஸ்’ நிதியிலிருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாயிலிருந்து கொஞ்சம் கிள்ளிக்கொடுத்தால் போதும்... இங்கு தடுப்பூசிகள் உற்பத்தியைத் தொடங்கிவிடலாம். ஆனால், பொதுத்துறை நிறுவனங்களைத் தன் பொறுப்பிலிருந்து கைகழுவிவிட வேண்டும் என்கிற கொள்கை முடிவு, மத்திய அரசுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறதா என்பது தெரியவில்லை. அல்லது இங்கு தடுப்பூசி உற்பத்தியை ஆரம்பித்துவிட்டால், தங்கள் வணிகம் பாதிக்கப்படும் என்று அச்சப்படும் தனியார் நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்பதும் புரியவில்லை. அன்புமணி மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது, குன்னூர், கிண்டி, காசோலி ஆகிய இடங்களில் செயல்பட்டுவந்த தடுப்பூசி உற்பத்தி பொதுத்துறை நிறுவனங்கள் திடீரென மூடப்பட்டன. கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் திறக்கப்பட்டன. இப்போது ஹெச்.பி.எல் விவகாரமும் விவாதத்துக்கு வந்திருக்கிறது.

எஸ்.கண்ணன், நாராயணன் திருப்பதி, டி.கே.ரங்கராஜன்
எஸ்.கண்ணன், நாராயணன் திருப்பதி, டி.கே.ரங்கராஜன்

இப்போது அரசு-தனியார் கூட்டு முயற்சியில், மகாராஷ்டிர மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹாஃப்கின் பயோஃபார்மசூட்டிகல் கார்ப்பரேஷன், தேசிய பால் வளர்ச்சி வாரியத்தின் கீழ் ஹைதராபாத்தில் செயல்படும் இந்தியன் இம்யூனாலாஜிக்கல்ஸ் லிமிடெட், புலந்த்சாகரில் உள்ள பாரத் இம்யூனாலாஜிக்கல்ஸ் அண்ட் பயோலாஜிக்கல்ஸ் லிமிடெட் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களில் கோவாக்ஸின் உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, செங்கல்பட்டிலுள்ள ஹெச்.பி.எல் நிறுவனத்தில் ஏன் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்ற நேரடியான கேள்விக்கு மத்திய அரசிடமிருந்து பதில் கிடைக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism