Published:Updated:

கொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்!

கோவிட்-19 சிகிச்சையிலிருந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. இந்தியா மட்டும்தான் தற்போது இந்த மருந்தைப் பயன்படுத்துகிறது.

பிரீமியம் ஸ்டோரி
`கோவிட்-19 என்ற கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை குணப்படுத்தவோ, தடுக்கவோ மருந்துகளே இல்லை என்ற நிலையே ஆரம்ப நாள்களில் இருந்தது. நாள்கள் செல்லச் செல்ல நோய்த் தாக்கத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், நோயை குணமாக்கவும் உதவுவதாகப் பல்வேறு மருந்துகளின் பெயர்கள் சொல்லப்பட்டன. `கோவிட்-19 சிகிச்சைக்கு, தற்போது இந்தியாவில் என்னென்ன மருந்துகள் பரிந்துரைக்கப்படு கின்றன, கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேரடி மருந்து இல்லாத நிலையில் அவை எப்படிச் செயலாற்றுகின்றன...’ என்பது பலருக்கும் உள்ள கேள்வி. கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் குறித்து தொற்றுநோய் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணனிடம் பேசினோம். ஒவ்வொரு மருந்து குறித்தும் அவரின் விளக்கங்கள் இங்கே...

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (Hydroxychloroquine)

கோவிட்-19 சிகிச்சையிலிருந்து இந்த மருந்து முற்றிலும் அகற்றப்பட்டுவிட்டது. இந்தியா மட்டும்தான் தற்போது இந்த மருந்தைப் பயன்படுத்துகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இதன் பயன்பாடு நிறுத்தப்பட்டு விட்டது. உலக சுகாதார நிறுவனம், `இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டாம்’ என்று அறிவித்துவிட்டது. மருத்துவரீதியாகவும் இது எந்தப் பயனையும் தராது என்றும் நிரூபிக்கப்பட்டு விட்டது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை நோயாளிகளுக்குக் கொடுத்துச் செய்யும் ஆய்வையே அமெரிக்கா கைவிட்டுவிட்டது. `இது எந்த வகையிலும் பயன்படுவதில்லை’ என்று அனைவரும் கூறிவிட்டனர். எனவே, இந்தியா தனது கோவிட்-19 சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை உடனே மாற்ற வேண்டும்.

கொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்!

*ரெம்டெஸ்விர் (Remdesivir)

இந்த மருந்தைப் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அதன் பாதிப்பு 15 நாள்கள் இருக்குமென்றால், இந்த மருந்தைக் கொடுக்கும்போது 10-11 நாள்களில் குணமாகிவிடும். உயிரிழக்கும் ஆபத்தை இது 12 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைக்கும். தீவிர நோயாளிகளுக்கு ஓரளவு பயனளிக்கக் கூடியது ரெம்டெஸ்விர். மருத்துவமனையில் 15 நாள்கள் சிகிச்சை பெறுவதை 11 நாள்களாகக் குறைக்கும் எனலாம். ஆனால், விலை அதிகமுள்ள மருந்து இது. ஒரு கோர்ஸ் மருந்தின் விலை குறைந்தபட்சம் ரூ.30,000. ‘ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அல்லது உடல்நிலை மோசமான நிலையிலிருந்து தேறவே இல்லை என்போருக்கு இந்த மருந்தைக் கொடுக்கலாம்’ என்று அரசின் சிகிச்சை நெறிமுறைகளில் கொடுக்கப் பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டெக்ஸாமெத்தாசோன் (Dexamethasone)

கொரோனா சிகிச்சையிலேயே மிகப்பெரிய முன்னேற்றம் என்றால், இந்த மருந்தின் பயன்பாட்டைத்தான் கூற முடியும். இங்கிலாந்தில் 85,000 நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் (Recovery Trial) அடிப்படையில், இந்த மருந்து நன்றாக வேலை செய்கிறது என்று கண்டறிந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் உதவி தேவைப்படும் அல்லது வென்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இந்த மருந்து கட்டாயம் தேவை. லேசான, மிதமான பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தைக் கொடுக்கும் அவசியம் ஏற்படாது. வென்டிலேட்டர் சிகிச்சையிலிருக்கும் நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்பை இந்த மருந்து மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும். அதாவது 100 சதவிகிதம் உயிரிழக்கும் வாய்ப்பிருந்தால், அதில் 66 சதவிகிதம் வாய்ப்பை இந்த மருந்து குறைக்கும். அரசின் சிகிச்சை நெறிமுறைகளிலும் இந்த மருந்து சேர்க்கப்பட்டுவிட்டது.

கொரோனா சிகிச்சை... கட்டுப்படுத்தும் மருந்துகளும் சர்ச்சைகளும்!

ஃபேவிபிராவிர் (Favipiravir)

கொரோனா சிகிச்சைக்கான புது வரவு இந்த மருந்து. இந்த மருந்தின் செயல்பாடு குறித்து பெரிய அளவில் நிரூபிக்கப்படவில்லை. எந்த ஆராய்ச்சியும் இந்த மருந்தைக்கொண்டு நடத்தப்படவில்லை. இதைப் பயன்படுத்திய ஜப்பானும், இந்த மருந்து நன்றாகச் செயல்படுகிறது என்பதற்கான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று தெரிவித்துவிட்டது. ரஷ்யாவில் இந்த மருந்து செயல்பாட்டில் உள்ளது. ஆனால், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இதைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவில்லை. கோவிட்-19 சிகிச்சைக்காக வழங்குவதற்கு வேறு எந்த நாட்டிலும் இந்த மருந்துக்கு உரிமம் வழங்கப்பட வில்லை. மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சிகிச்சைக்கான நெறிமுறை களிலும் இந்த மருந்து சேர்க்கப்படவில்லை. இந்த மருந்தை யாரும் பயன்படுத்தக் கூடாது. நோயாளிகளிடம் ஆராய்ச்சி செய்து நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்தலாம். நமது நாட்டின் மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் அலுவலகம் இந்த மருந்துக்கு எப்படி அனுமதி அளித்தது என்பது புரியவில்லை!

ராம் கோபால் கிருஷ்ணன்
ராம் கோபால் கிருஷ்ணன்

- மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணனின் விளக்கங்கள், நம் சந்தேகங் களுக்கு மருந்து போடுவது என்னவோ உண்மை!

கூடுதல் மருந்துகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக எனோக்ஸாபேரின் (Enoxaparin) ஒரு லட்சம் குப்பிகள், டோசிலிஸுமேப் (Tocilizumab) 1,200 குப்பிகள் மற்றும் ரெம்டெஸ்விர் 42,500 குப்பிகள் வாங்குவதற்கு தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்துக்கு கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. `மருந்துகள் வரத் தொடங்கியுள்ளன’ என்று அண்மையில் தமிழக சுகாதாரத்துறை அறிவித்திருந்தது. அந்த மருந்துகளைப் பற்றியும் மருத்துவர் ராம் கோபால் கிருஷ்ணனிடம் பேசினோம்.

‘‘எனோக்ஸாபேரின் என்ற மருந்து ரத்தம் உறைவதைத் தடுப்பதற்காக பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. கோவிட்-19 நோயாளிகளுக்கு ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. ரத்தம் உறைந்தால் ஆக்ஸிஜன் அளவும் குறையும். ஆகையால், கோவிட்-19 சிகிச்சையில் இந்த மருந்து முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் செய்யப்பட்டு ஆதரவான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

அடுத்ததாக, டோசிலிஸுமேப் என்ற மருந்து. கோவிட்-19 நோயாளிகளுக்கு சைட்டோகைன் ஸ்டோர்ம் (Cytokine Storm) என்ற பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது. அதாவது நோய் எதிர்ப்பு மண்டலத்திலிருந்து அதிக அளவில் சைட்டோகைன் என்ற அமினோ அமிலம் உருவாகி, வேகமாக ரத்தத்துக்குள் ஊடுருவிச் செல்லும்போது பல உறுப்புகள் செயலிழப்பு, உயிரிழப்பு ஏற்படுகிறது. சைட்டோகைன் ஸ்டோர்ம் ஏற்பட்டு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைந்துவிட்டால் இந்த மருந்தைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து, உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று கருதி மருத்துவர்கள் இதைப் பரிந்துரைக்கின்றனர். இந்த மருந்து விலை அதிகமுள்ள ஒன்றுதான். ஒரு கோர்ஸின் விலை 80,000 ரூபாய் வரை இருக்கலாம்.

இந்த மருந்தை இரண்டாம்கட்ட சிகிச்சை என்ற வகையில் பயன்படுத்தலாம். இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்துவிடும் என்பதால், வேறு வகையான நோய்த்தொற்றுகள் எளிதில் ஏற்படும். இந்த மருந்து குறித்த திட்டவட்டமான ஆய்வு முடிவுகள் எதுவும் இதுவரை வரவில்லை. இங்கிலாந்தில் ரெகவரி ட்ரையல் நடைபெற்றுவருகிறது. அதன் முடிவுகள் வெளியானதும்தான் மருந்தைப் பற்றிய தீர்மானத்துக்கு வர முடியும்” என்றார்.

‘‘நெறிமுறைகளுக்கு உட்பட்டே சிகிச்சை!’’

சில மருந்துகளின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையெனும்போது, அவற்றை கோவிட்-19 சிகிச்சைக்காகப் பயன்படுத்துவது ஏன் என்று தமிழக கொரோனா சிகிச்சைக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி மருத்துவர் ரகுநந்தனிடம் கேட்டோம். ‘‘சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மருந்துக்கும் ஒவ்வொரு தன்மையுள்ளது. நோயாளிகளின் உடல்நிலைக்கேற்ப அவற்றைப் பரிந்துரைக் கிறோம். ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பொறுத்தவரை, மத்திய சுகாதாரத் துறையின் கோவிட்-19 சிகிச்சை நெறிமுறைகளில் அந்த மருந்து இடம் பெற்றுள்ளது. சிகிச்சை நெறிமுறைகளில் இடம்பெறும் மருந்துகளையே கொரோனா நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு