Published:Updated:

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...

கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணிகள், அலர்ஜி உள்ளவர்கள், இரண்டாவது டோஸை மிஸ் செய்தவர்கள்...

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...

கர்ப்பிணிகள், அலர்ஜி உள்ளவர்கள், இரண்டாவது டோஸை மிஸ் செய்தவர்கள்...

Published:Updated:
கொரோனா தடுப்பூசி
பிரீமியம் ஸ்டோரி
கொரோனா தடுப்பூசி

அமெரிக்காவிலிருக்கும் மிகப்பெரும் மருத்துவமனைகளில் ஒன்று மேயோ கிளினிக். 150 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமாக இருந்துவரும் இந்த மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வருபவர் நம் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரியா சம்பத்குமார். இவர், இந்த கிளினிக்கிலிருக்கும் தொற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிப் பிரிவின் (இன்ஃபெக்‌ஷன் பிரிவென்ஷன் அண்ட் கன்ட்ரோல்) தலைவர் என்பதில் நமக்கெல்லாம் கூடுதல் பெருமை.

கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ப்ரியாவின் அணுகுமுறை சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது. ஒலிம்பிக் கமிட்டி, டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் நேஷனல் பாஸ்கெட்பால் அசோசியேஷன் உள்ளிட்ட பல அமைப்புகளுக்கு கொரோனா தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வரும் ப்ரியா, தொற்றுநோய்கள் குறித்த தொடர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருபவர். அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கியிருக்கும் நிலையில், உலக நாடுகளுக்கான கோவிட் நிர்வாகம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதில் எக்கச்சக்க பிஸியாக இருக்கிறார். கோவிட் விஷயத்தில் இன்னமும் சரியானதொரு தெளிவு கிடைக்காமல் இந்திய தேசமே தவித்துக் கொண்டிருக் கும் சூழலில், ஏராளமான சந்தேகங்களை முன்வைத்து டாக்டர் ப்ரியாவிடம் பேசினோம். அவர் அளித்த தெளிவான பதில்கள், இங்கே...

2020 மார்ச்சில் இந்தியாவில் கோவிட் தொற்று நுழைந்தபோது உங்கள் கணிப்பு என்னவாக இருந்தது?

எல்லா வசதி வாய்ப்புகளும் உள்ள அமெரிக்கா போன்ற நாட்டிலேயே நிலைமை மோசமாகத்தான் இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் நிலை என்னவாகும்? `அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியா இதைத் தாங்குமா, தொற்று தீவிரமானால் இந்தியாவின் மக்கள்தொகையே காலியாகி விடுமோ’ என்றெல்லாம் பயந்தேன். கொரோனா தொடர்பான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும் வைத்து சின்னச் சின்ன வீடியோ மெசேஜ்களை இந்தியாவுக்கு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் இந்தியாவில் லாக்டௌன் அறிவிக்கப்பட்டபோது நிம்மதியாக உணர்ந்தேன். பெரிய அளவில் இறப்புகள் ஏற்படாமலிருக்க இந்த லாக்டௌன்தான் இந்தியாவுக்குப் பேருதவி செய்தது.

அதேசமயம், கடந்த ஆண்டு நவம்பர்வாக்கில் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியபோது, ஆளாளுக்கு ஏதேதோ தியரி சொல்லிக் கொண்டிருந்தோம். இந்தியர்களுக்கு எதிர்ப்பு சக்தி அதிகம், அவர்களின் உடலமைப்பு வேறு, மரபியல் காரணமாக இந்தியர்களை கொரோனா பாதிக்கவில்லை என்றெல்லாம் பேசினோம். அதாவது, உண்மையை உணரத் தவறிவிட்டோம்.

பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து தொற்று எண்ணிக்கை மெள்ள அதிகரிக்கத் தொடங்கி, இப்போது ஒருநாளைய தொற்று எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொட்டிருக்கிறது இந்தியாவில். டெஸ்ட் செய்யப்படாத மக்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் டெஸ்ட் செய்தால்... இதை ஐந்து மடங்காகப் பெருக்கிக் கணக்கிட வேண்டியிருக்குமா அல்லது பத்து மடங்காகப் பெருக்கிக் கணக்கிட வேண்டியிருக்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...

இந்தியாவில் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டிருக்கும் தொற்றுக்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?

முதல் விஷயம், இத்தனை மாதங் களாக மாஸ்க் அணிந்து, கட்டுப்பாடு களை எதிர்கொண்ட மக்கள் களைத்துவிட்டார்கள். அடுத்தது, தவறான தகவல் பரிமாற்றங்கள் நடந்ததும் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம்.

`பாதி மக்கள் தொகைக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது; ஹெர்டு இம்யூனிட்டி உருவாகத் தொடங்கி விட்டது; இனி பிரச்னை இல்லை’ என்றெல்லாம் தவறான தகவல்கள் பரவின. சினிமா தியேட்டர்கள், மால்கள், ரெஸ்டாரன்ட்டுகள் திறக்கப்பட்டன. எல்லாவற்றையும் மீறி மக்கள் விஞ்ஞானத்தை நம்ப மறுத்தார்கள். பெரிய கூட்டங்களைக் கூட்டுவது ஆபத்தானது என இந்திய விஞ்ஞானிகள் எச்சரித்தபோதும், அரசு அலட்சியம் செய்தது. தேர்தல் பிரசாரங்கள், மதக்கூட்டங்கள், திரு விழாக்கள் என அடுக்கடுக்கான தவறுகள் நடந்தன. கொரோனா வைரஸ், தன் பங்குக்கு வேரியன்ட் ஆகி, பல்கிப் பெருகி, பெரும்தொற்றை அதிகரிக்கச் செய்துகொண்டிருக்கிறது. உடனடியாக அனைவருக்கும் தடுப் பூசி போடுவதுதான் நல்ல தீர்வாக இருக்கும்.

கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?

நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் நோய் தீவிர மாகவும், நுரையீரல் பாதிக்கவும், சம்பந்தப்பட்ட பெண் இறந்து போகவும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, தடுப்பூசி நிச்சயம் உதவும். இதுவரை மில்லியன் கணக்கில் தடுப்பூசி கொடுக்கப்பட்டதில் கர்ப்பிணிகளுக்கு அது எந்த பாதகத்தையும் ஏற்படுத்தியதாகச் செய்திகள் இல்லை.

பீரியட்ஸின்போது தடுப்பூசி பாதுகாப்பன தல்ல என்கிறார்களே?’

இதுபோன்ற அபத்தமான வதந்தி களுக்கு பதில் சொல்லக்கூட நான் விரும்பவில்லை.

அலர்ஜி உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக்கொள்ளக்கூடாதா?

பெனிசிலின் அலர்ஜியோ, உணவு அலர்ஜியோ, குறிப்பிட்ட மருத்துவத் துக்கான அலர்ஜியோ உள்ளவர்கள் நிச்சயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். பொதுவான அலர்ஜிக்கும் தடுப்பூசி களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், அடுத்த டோஸில் கவனக்குறைவாக வேறொரு தடுப்பூசி யும் போடுவது தமிழகத்தில் பரவலாக நடக்கிறது. தடுப்பூசிகளை மாற்றிப்போடுவது ஆபத்தான தில்லையா?

இதுகுறித்த தெளிவான பரிசோதனையோ, அனுபவங்களோ நம்மிடம் இல்லை. இப்போதைய சூழலில் முதல் டோஸில் எந்தத் தடுப்பூசி போடப் பட்டது என்பது தெரியவில்லை, அடுத்த டோஸ் வேறு தடுப்பூசியை போடலாமா, வேண்டாமா என்று கேட்டால், எடுத்துக் கொள்ளலாம் என்பதே என்னுடைய பதில். தடுப்பூசியை மாற்றி எடுத்துக் கொள்வதால் பாதிப்பு இருக்காது. தடுப்பூசியே போடாமலிருப்பதற்கும் மாற்றிப்போட்டுக்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. அது எந்தளவுக்குப் பலன் தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம் பலன் தரும்.

இரண்டாவது டோஸை மிஸ் செய்தால் என்னவாகும்?

இந்தியாவில் உபயோகத்தில் இருக்கும் கோவாக்ஸின், கோவிஷீல்டு மற்றும் விரைவில் அறிமுகமாகவிருக்கும் ஸ்புட்னிக் எல்லாமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள். முதல் டோஸ் போடப்பட்ட இரண்டு வாரங்களில் இருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத் தொடங்கும். அது பல வாரங்களுக்கு நீடிக்கும்.

இரண்டாவது டோஸ் போடுவதால் அந்த எதிர்ப்பு சக்தி இன்னும் பல நாள்களுக்கு நீட்டிக்கப்படும். ஒருவேளை, இரண்டாவது டோஸ் போடாமல் விட்டால் அதனால் பெரிய பாதிப்புகள் ஏதுமிருக்காது. இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை என்றால் மறுபடி முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டாம். இரண்டாவது டோஸ் கிடைக்கும்போது போட்டுக்கொள்ளலாம்.

****

கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...

ப்ரியாவின் பர்சனல் பக்கங்கள்...

அவரே பகிர்கிறார்

``புனேயில் வசித்த தமிழ்க் குடும்பம் எங்களுடையது. அப்பா மத்திய அரசு ஊழியராக இருந்தவர். ஐந்து பெண்களில் நான்தான் கடைக்குட்டி. என் பத்து வயதில் அப்பா தவறிவிட்டார். பிறகு, குடும்பத் துடன் சென்னையில் செட்டிலானோம். ப்ளஸ் டூ வரை சென்னையில் படித்தேன். சின்ன வயதிலிருந்தே மருத்துவராவதுதான் கனவு.

1985- ம் ஆண்டு வேலூர் சி.எம்.சியில் எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது. அங்கே படிப்பதில் அம்மாவுக்கு முழு சம்மதமில்லை. சி.எம்.சிக்கு ‘கபுள் மேக்கிங் காலேஜ்’ (Couple Making College-CMC) என்ற பட்டப்பெயரும் இருந்ததுதான் காரணம். அம்மாவின் பயம் உண்மையானது. ஒரு வருட சீனியர் வின்சென்ட் ராஜ்குமாரை சந்தித்தேன். இரண்டு குடும்பங்களிலும் எங்களுடைய திருமணத் தில் பெரிய ஆர்வம் இல்லை. ஆனால், அவர்தான் அம்மாவை சம்மதிக்கவைத்தார்.

இந்தியாவில் வேலை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அமெரிக்காவில் பயிற்சி எடுத்து, அங்கேயே வேலை பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ‘அடுத்த ஏழு வருடங்கள் அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவோம்’ என முடிவெடுத் தோம். அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் மேயோ கிளினிக்கில் ஃபெல்லோஷிப் வாய்ப்பு கிடைத்தது.

‘உங்களைப் போன்றோர் இந்தியா வந்துவிடுவோம் என்கிறீர்கள். ஆனால், உங்கள் சுயநலத்துக்காக அங்கேயே செட்டிலாகிவிடுகிறீர்கள்’ என்கிற குற்றச்சாட்டு இன்றும் எங்களைத் தொடர்வதுண்டு. அவருக்கு மேயோ கிளினிக்கில் மிகப்பெரிய பதவி கிடைத்ததுடன் ‘மல்டிபுள் மைலோமா’வில் ரிசர்ச் செய்கிற கனவும் நனவானது. அடுத்து குழந்தையும் பிறக்கவே, வேறெதைப் பற்றியும் யோசிக்க நேரமில்லை.

எங்களுக்குள் சண்டை வரும்போதெல்லாம் ‘நான் இந்தியாவுக்குப் போயிடறேன்’ என்று சொல்வேன். இன்றுவரை அந்த மிரட்டல் தொடர்கிறது. ஆனால், மேயோ கிளினிக்கில் கிடைத்த அனுபவமும் பயிற்சிகளும்தான் இன்று கோவிட் நோயை எப்படி நிர்வகிப்பது, கோவிட் நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சையளிப்பது என்பதில் பெரிய அளவில் உதவுகிறது.’’

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்ப்பிணிகளும் கொரோனா தடுப்பூசியும்!

இந்தக் கட்டுரையில் அமெரிக்காவின் மேயோ கிளினிக்கின் தொற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் டாக்டர் ப்ரியா சம்பத்குமாரின் பேட்டி வெளியாகியிருக்கிறது.

அதில், “கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். தடுப்பூசி எடுத்துக்கொண்ட கர்ப்பிணிகளுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரையில் தகவல்கள் இல்லை” என்று சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், `கர்ப்பிணிகளும் தாய்ப்பாலூட்டும் பெண்களும் கொரோனா தடுப்பூசியைத் தவிர்க்கவும்’ என்று இந்தியாவில் தகவல்கள் வெளிவருகின்றன.

டாக்டர் ப்ரியா, தன் கருத்து அறிவியல் அடிப்படை யிலானது என்கிறார். கர்ப்பிணிகள் நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காவார்கள் என்கிற அடிப்படையில்தான் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கர்ப்பிணி களுக்கும் தடுப்பூசி வலியுறுத்தப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனமும் இதே கருத்தை முன் வைத்தாலும், கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன் அவரவர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

எனவே, நம் ஊரைப் பொறுத்தவரை நம்முடைய அரசு மற்றும் நம்முடைய மருத்துவர்களின் வழிகாட்டல்படி நடந்துகொள்வது கூடுதல் பாதுகாப்பே!