Published:Updated:

கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் கூடுதல் ஆயுதம்!

கார்த்தி

ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனையில் இருக்கும் கொரோனாத் தொற்றாளர்களை இம்மருந்து விரைவில் குணப்படுத்துகிறது என்கிறது ஆய்வு.

பிரீமியம் ஸ்டோரி

தூணிலும் கொரோனா துரும்பிலும் கொரோனா என்னும் அளவுக்கு கொரோனாமீதான பயமும் பீதியும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாம் ஒருவர், நமக்கு இரு டோஸ், இரு மாஸ்க் என நம் வாழ்க்கைச் சூழலையே கொரோனா மொத்தமாய் மாற்றியிருக்கிறது. கோவாக்ஸினோ, கோவிஷீல்டோ எதுவாக இருந்தாலும், தற்போது முதல் டோஸையாவது போட்டுக்கொள்ளுதல் அவசியம். இப்படியான கொரோனா பாசிட்டிவ் சூழலில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகவும் பாசிட்டிவான செய்தி 2DG. 2-deoxy-D-glucose மூலக்கூறுகளில் இருந்து உருவாக்கப்பட்டதால், இம்மருந்தை 2DG மருந்து என அழைக்கிறார்கள். ஆம், இந்த மருந்தின் மூலம், கொரோனாவால் அதிக பாதிப்படைந்தவர்களை எளிதில் நெகட்டிவ் ஸ்டேட்டுக்கு மாற்ற முடியும் என நிரூபித்திருக்கிறார்கள். அதற்கும் இதை சாத்தியப்படுத்தியது அமெரிக்காவோ, ரஷ்யாவோ அல்ல, நம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு DRDO என்பது உப தகவல்.

கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் கூடுதல் ஆயுதம்!

Nuclear Medicine & Allied Sciences இன்ஸ்டிட்யூட்டில் (INMAS) இந்த மருந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் கீழ் செயல்படும் இந்த இன்ஸ்டிட்யூட்டும் டாக்டர் ரெட்டி லேபரட்டரி குழுவும் இணைந்துதான் இந்த மருந்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனையில் இருக்கும் கொரோனாத் தொற்றாளர்களை இம்மருந்து விரைவில் குணப்படுத்துகிறது என்கிறது ஆய்வு. அதேபோல், அவர்களை ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி, இயல்பாக சுவாசிக்க உதவுகிறது என்கிறார்கள். கொரோனாவின் SARS-CoV-2 வைரஸ் பாதித்த செல்களைக் கண்டறிந்து, அதில் சென்று செயலாற்றத் தொடங்குகிறது 2DG. அந்தச் செல்களில் பெருமளவில் இதன் ஆதிக்கத்தை அதிகரிக்கச் செய்கிறது. இதன் மூலம், அந்தச் செல்களில் வைரஸின் பாதிப்பு தடுக்கப்படுகிறது.கொரோனாத் தொற்றால், உடல் மென்மேலும் பாதிப்படைவதைக் குறைக்கிறது.

கொரோனா எதிர்ப்பு யுத்தத்தில் கூடுதல் ஆயுதம்!

முதல் அலையின் போதே, இந்த மருந்துக்கான சோதனையை INMAS-DRDO அமைப்பு ஆரம்பித்துவிட்டது. கடந்த ஆண்டு மே - அக்டோபர் மாதங்களில் 110 நோயாளிகளுக்கு இரண்டாம் கட்ட சோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர், மூன்றாவது கட்ட சோதனை, மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CDSCO) அனுமதியுடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் 220 நோயாளிகளுக்குச் செய்யப்பட்டது. சராசரியாக ஒரு நோயாளி குணமாகும் வேகத்தைவிடவும் 2.5 நாள்களுக்கு முன்னதாகவே இம்மருந்தை உட்கொண்டவர்கள் குணமாகியிருக்கிறார்கள். அதாவது சோதனை முடிவில் நெகட்டிவ் என மாறியிருக்கிறார்கள். அதே போல், தற்போது நடைமுறையில் இருக்கும் மருந்துகளுடன் இம்மருந்தையும் இணைத்து எடுத்துக்கொண்டவர்கள் விரைவாகவே ஆக்சிஜன் சிலிண்டர் துணையிலிருந்து மீண்டிருக்கிறார்கள். அறுபத்தி ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களிலும் இம்மருந்து சிறப்பாகச் வேலை செய்திருக்கிறது. ஆனால், பரிசோதனைக்குட்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்பதால், இன்னும் இதன்மேல் முழுமையாக நம்பிக்கை இல்லை என்கிறார்கள் சில மருத்துவர்கள்.

குளுக்கோஸ் பவுடரைப் போல, வெறுமனே தண்ணீரில் கலந்து இந்த மருந்தைக் குடிக்கலாம்.

******
 இன்னும் 2DG மருந்து விற்பனைக்கு தயாராகவில்லை. இன்னும் அதன் விலை குறித்தும் மருந்து நிறுவனங்கள் ஆலோசித்துவருகிறார்கள்.

 ஏற்கெனவே இருக்கும் 2-Deoxy-D-glucose மூலக்கூறுகளிலிருந்து உருவாக்கப்படுவதால், குறைவான நேரத்தில் அதிக அளவில் இம்மருந்தினை உருவாக்க முடியும்.

 ஜூன் மத்தியில் தான் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்தை அனுப்பவிருக்கிறார்கள்.

 DG என்கிற பெயரில் போலியாக விற்கப்படும் மருந்துகளை நம்ப வேண்டாம்.

 மிதமான அல்லது மிகவும் பாதிக்கப்படைந்த கொரோனா நோயாளிகளுக்கு, அவர்கள் உட்கொண்டு வரும் மருந்துகளுடன் ஒரு துணை மருந்தாகத்தான் 2DG மருந்தைப் பயன்படுத்த வேண்டும். இதுவே முழுமையான கொரோனாவுக்கான தீர்வு கிடையாது.

 கொரோனா வந்தாலும், அதிலிருந்து எளிதாக பெரிய பாதிப்பில்லாமல் குணமாக தற்போதிருக்கும் ஒரே தீர்வு தடுப்பூசிகள் தான்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு