என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

உருமாறின வைரஸையும் ஒருகை பார்ப்போம்!

- களத்தில் கெத்து காட்டும் செவிலியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
- களத்தில் கெத்து காட்டும் செவிலியர்கள்

- களத்தில் கெத்து காட்டும் செவிலியர்கள்

கொரோனாவால் மொத்த உலகமும் திக்கு திசை தெரியாமல் தவித்தபோது, மக்களின் அச்சம் போக்கி கரம் கொடுத்து நம்பிக்கையளித்தவர்களில் முதன்மை யானவர்கள் முன்களப் பணியாளர்கள். அவர்களில் செவிலியர்களின் பங்கு போற்றத்தக்கது. கொரோனா கால பணி அனுபவங்கள் குறித்து இரு செவிலியர் களிடம் பேசினோம்.

21 ஆண்டு அனுபவம் கொண்ட காளியம்மாள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

“என்னோட பணி அனுபவத்துல சில எமர்ஜென்சி காலகட்டத்தையும் பார்த்திருக்கேன். அதனால, கொரோனா வந்தப்போ பெரிசா பயமும் பதற்றமும் ஏற்படல. எங்களை நம்பி வரும் நோயாளிகள் அச்சமில்லாம சிசிச்சை எடுத்து குணமாகி வெளிய போகணும்னு அதிக அர்ப்பணிப்போடு வேலை செஞ்சோம். மாசத்துக்கு ஒரு வாரம் வீதம் ரெண்டு மாசத்துக்கு மட்டும் கோவிட் வார்டுல வேலை செஞ்சேன்.

வேலை முடிஞ்சு போனதும் குளிச்சுட்டுத்தான் எங்க வீட்டுக்குள் போவோம். வழக்கத்துக்கு மாறான பணி அனுபவமா இருந்தாலும், எங்களை நம்பி இருந்த மக்களின் தவிப்புக்குச் சரியான முறையில நம்பிக்கையளிச்சோம்.

எங்க ஆஸ்பத்திரியிலயே 100 பணியாளர்களுக்கு மேல கொரோனாவால பாதிக்கப்பட்டாங்க. எல்லோருமே சிகிச்சை முடிஞ்சு உடனே பயமின்றி வேலைக்கு வந்துட்டாங்க. எனக்கு கோவிட் வரல. என் பாதுகாப்போடு, என்னால என் குடும்பத்தினருக் கும் பாதிப்பு வராத மாதிரி கவனமா இருந்தேன்.

 செந்தில்குமாரி
செந்தில்குமாரி

கடந்த ஒன்பது மாதங்கள்ல பெரிசா லீவ் எடுக்கவே இல்ல. கொரோனாவைப் பத்தின அச்சம் மக்களுக்கு முழுமையா நீங்கும்வரை பரபரப்பான எங்க பணிச்சூழல் மாறாது” என்று புன்னகையுடன் கூறுகிறார் காளியம்மாள்.

‘`கொரோனா வந்த ஆரம்பத்துல நோயாளிகள் ரொம்ப பயந்தாங்க. ஒவ்வொரு நோயாளியையும் உளவியல் ரீதியாவும் பார்த்துக்க வேண்டியதா இருந்துச்சு. உடம்பு பூரா பிபிஈ கிட் மறைச்சுக்கிட்டிருக் கிறதால, ‘என் பேரு செந்தில்குமாரி. யாருக்கு என்ன வேணும்னாலும் என் பேரைச் சொல்லிக் கூப்பிடுங்க’ன்னு கொரோனா வார்டுல சொல்லி வெச்சுட்டேன். நான் வார்டுக்குள்ள நுழைஞ்சதும் என் குரலை வெச்சே நோயாளிங்க என்னை அடையாளம் கண்டு பிடிக்கிற அளவுக்கு நெருக்க மாயிட்டாங்க. குணமாகி வீட்டுக்குக் கிளம்புறப்போ வெளியே தெரியுற என் கண்களைப் பார்த்து ‘தேங்க்யூ சிஸ்டர். நீங்க பத்திரமா இருங்க’ன்னு சொல்லிட்டுப் போறப்போ இந்த ஜென்மத்துக்கு இந்த வார்த்தைகள் போதும்னு தோணும்’’ என்று குரல் தழுதழுக்கிற செந்தில்குமாரி, எம்.எம்.சி-யில் 18 வருடங்களாக செவிலியர் பணி செய்துவருகிறார்.

‘`செவிலியர்கள் எல்லாரும் பிப்ரவரி மாசக்கடைசியில இருந்து பிபிஈ கிட்டும் மூச்சுத்திணறலுமா வேலை பார்த்துக்கிட்டிருக்கோம். தமிழ்நாட்ல கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறையக் குறைய இதுக்கு தானே ஆசைப்பட்டே செந்தில் குமாரின்னு நினைச்சுப்பேன்’’ என்கிறார்.

 காளியம்மாள்
காளியம்மாள்

‘`இத்தனை மாசத்துல குறைஞ்சது பத்து முறையாவது எனக்கு கொரோனா வந்திருக்கணும். ஆனா அப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கல. புரோட்டீன் டயட், தினமும் ஆவிபிடிக்கிறது, உப்புத்தண்ணியில வாய்க்கொப்பளிக்கிறது, வெந்நீர்ல குளிக்கிறது, க்வாரன்டீன்ல இருக் கிறதுன்னு எச்சரிக்கையா இருந்தேன். கொரோனா நோயாளிகளுக்கு ட்ரீட்மென்ட் செஞ்சதால, தொற்று ஏற்பட்டு இறந்துபோன டாக்டர்கள், செவிலியர்கள் அத்தனை பேருக்கும் விருது கொடுக்கணும்’’ என்று உணர்ச்சிவசப்படுகிற செந்தில்குமாரி,

‘`கொரோனா வைரஸ் உருமாறி வந்திருக்குன்னு சொல்றாங்க. பயப்படாதீங்க, அதையும் ஒருகை பார்த்து, உங்களைப் பாதுகாக்க நாங்க இருக்கோம்’’ என்கிறார் கெத்தாக!