அலசல்
Published:Updated:

‘‘காவல் தெய்வங்கள் என்று கொண்டாடினால் மட்டும் போதுமா?’’

அரசு மருத்துவர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
அரசு மருத்துவர்கள்

வருத்தத்தில் அரசு மருத்துவர்கள்

தேசமே கூடி நின்று கைதட்டுகிறது. மருத்துவர் களையும் மருத்துவப் பணியாளர்களையும் `காவல் தெய்வங்கள்’ எனக் கொண்டாடுகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கைகளை இன்றளவும் பரிசீலிக்க ஆள் இல்லை.

கொரோனா பாதிப்பில், தமிழகம் இரண்டாவது இடத்துக்கு வந்துவிட்டது. இருப்பினும், இதுவரை ஒரே ஒரு கொரோனா நோயாளி மட்டுமே இங்கு உயிரிழந்தார். இந்தச் சாதனைக்குக் காரணம், அரசு மருத்துவர்களின் திறமையும் அர்ப்பணிப்புமிக்க சேவையுமே! இந்த நேரத்தில்கூட, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து தமிழக அரசு யோசிப்பதாகத் தெரியவில்லை.

அரசு மருத்துவமனைகளில் மட்டுமே தற்போது கொரோனா நோயாளிகள் அத்தனை பேருக்கும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் அச்சத்துடனும், அதேநேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பணியாற்றிவருகிறார்கள்.

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் அரசு மருத்துவர் ஒருவரிடம் பேசியபோது, ‘‘தமிழகத்தில் அதிகமான கொரோனா நோயாளிகள் சென்னையில்தான் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும், எங்களுக்கு தொற்று ஏற்பட்டுவிடும். தலை முதல் பாதம் வரை முழுமையாக மூடக்கூடிய பிரத்யேக உடையணிந்துதான் நாங்கள் வார்டுக்குள் செல்கிறோம். இந்த உடையை அணிந்த பிறகு, ஆறு மணி நேரம் கழித்துதான் கழற்றுகிறோம். இந்த ஆறு மணி நேரத்தில் எங்களால் தண்ணீர் குடிக்க முடியாது; சிறுநீர் கழிக்க முடியாது. ஒரு முறை கழற்றிவிட்டால், பிறகு புதிதாக வேறு உடையைத்தான் அணிய வேண்டும். அதனால், ஆறு மணி நேரத்துக்கு இயற்கை உபாதைகளை யெல்லாம் கட்டுப்படுத்திக்கொண்டுதான் பணியாற்றுகிறோம்’’ என்றார்.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

‘தங்களின் முக்கியத்துவத்தை இப்போதாவது அரசு உணர வேண்டும். தங்களின் முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்’ என்று அரசு மருத்துவர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் ஒரு மருத்துவரிடம் பேசினோம். ‘‘தமிழகத்தில் சிறப்பான சுகாதாரக் கட்டமைப்பு இருக்கிறது. இதில் எங்களின் பங்களிப்பும் முக்கியமானது. காலமுறை ஊதிய உயர்வு, அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்புகளில் 50 சதவிகித இடஒதுக்கீடு, முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு மூலம் மீண்டும் பணியிடம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் நியமனம் என, எங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நியாயமானவை; பொதுநலம்கொண்டவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த ஆண்டு மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தியபோது அரசு எங்களை மதிக்கவேயில்லை. எங்களிடம் பேச்சுவார்த்தை கூட நடத்தவில்லை.

அரசுப் பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு, முதுகலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடஒதுக்கீடு இருந்தது. நீட் தேர்வு வந்ததால் அது போய்விட்டது. அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். இந்த இடஒதுக்கீடு இருந்ததால்தான், நம் ஆரம்ப சுகாதார மையங்கள் அனைத்திலும் மருத்துவர் பணியில் காலி இடங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

அரசு மருத்துவர்கள்
அரசு மருத்துவர்கள்

ஒருவர் மருத்துவம் படித்து ஸ்பெஷலிஸ்ட் ஆவதற்கு 14 ஆண்டுகள் ஆகின்றன. அதன் பிறகு அவர் பணியில் சேரும்போது, அவருக்கு விரைவாக பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். இல்லையென்றால், அடுத்த தலைமுறையினருக்கு மருத்துவப் படிப்பின் மீது ஆர்வம் இல்லாமல் போய்விடும். அப்படியே மருத்துவம் படித்து அரசுப் பணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து அரசுப் பணியில் இருக்க அவர்கள் விரும்பமாட்டார்கள். அதிக வருமானம் கிடைக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும் என்று தான் விரும்புவார்கள்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அவசியம். 2019-ம் ஆண்டில் அரசாணை மூலமாக 950 மருத்துவர் பணியிடங்களைக் குறைத்துவிட்டனர். எம்.பி.பி.எஸ் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் மருத்துவப் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும் என ஒரு கணக்கு இருக்கிறது. அதையும் குறைத்துவிட்டனர். அதனால், மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் குறைந்துவிட்டது. இது சரிசெய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரச்னையை அப்போது நாங்கள் சொன்னபோது, அரசு அதைக் கண்டுகொள்ள வில்லை. ஆனால் இப்போது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக 500 மருத்துவர்களை பணி நியமனம் செய்துள்ளது. 950 மருத்துவர் பணியிடங்களைக் குறைக்காமல் இருந்திருந்தால், இப்போது அவசரகதியில் புதிதாக மருத்துவர்களை நியமிக்கத் தேவை ஏற்பட்டிருக்காது. அப்போதே புதிய நியமனங்களைச் செய்திருந்தால், இன்றைய சூழலைச் சமாளிக்க இன்னும் வசதியாக இருந்திருக்கும்” என்றார் அந்த மருத்துவர்.

தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தியபோது, பேச்சுவார்த்தையே நடத்தாமல் மருத்துவர்களின் போராட்டத்துக்கு முடிவு கட்டியது எடப்பாடி அரசு. அதுமட்டுமல்ல, போராட்டம் நடத்தியதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, 118 மருத்துவர்களை தொலைதூரத்துக்குத் தூக்கியடித்தது. அந்த மருத்துவர்கள்தான் இன்று தங்கள் உயிரை பணயம்வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துவருகிறார்கள்.

`காவல் தெய்வங்கள்’ என்று கைதட்டினால் போதாது... கை கொடுக்க வேண்டும் தமிழக அரசு!