Published:Updated:

கொரோனா மூன்றாம் அலை... “குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை
குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை

- விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் குமாரசாமி

பிரீமியம் ஸ்டோரி
கொரோனா மூன்றாவது அலையை எதிர்நோக்கி நாடே எச்சரிக்கை உணர்வுடன் காத்திருக்கிறது. ‘மூன்றாவது அலையில் உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸின் பரவும் வேகம் அதிகம் இருக்கும்; இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும்’ என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. இந்தநிலையில், “இந்தியாவில் மூன்றாவது அலை வருமா, வந்தால் அதன் விளைவுகள் எப்படியிருக்கும், குழந்தைகளைத் தாக்குமா?” என்று பல்வேறு கேள்விகளுடன் ஐ.சி.எம்.ஆரின் கோவிட் நேஷனல் டாஸ்க் ஃபோர்ஸ் கிளினிக்கல் ரிசர்ச் குழுவின் உறுப்பினரான டாக்டர் குமாரசாமியைச் சந்தித்தோம்.
டாக்டர் குமாரசாமி
டாக்டர் குமாரசாமி

‘‘இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா... மூன்றாவது அலை நிச்சயம் வருமா?’’

‘‘தளர்வுகள் படிப்படியாக அதிகரித்துவரும் சூழலில், மக்கள் நடமாட்டமும் அதிகரிக்கும். அப்படி அதிகரிக்கும்போது முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளி, கைகழுவுதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றத் தவறினால், தொற்று மீண்டும் அதிகரித்து, மூன்றாவது அலைக்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல நாடுகளும், முதல் அலைக்குப் பிறகு தொற்று குறையத் தொடங்கியதும் தளர்வுகளை அறிவித்ததால்தான், மீண்டும் தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் அதிகரித்தன. இந்தியாவும், இரண்டாவது அலையில் அதைத்தான் சந்தித்தது. முதல் இரண்டு அலைகளும் கற்றுக்கொடுத்த பாடங்களை மறக்காமல், தளர்வுகளைக் கட்டுப்பாடுகளுடன் பயன்படுத்தினால், மூன்றாம் அலையைத் தள்ளிப்போடலாம். ஆனால், தவிர்க்க முடியாது.’’

“அப்படி மூன்றாவது அலை வந்தால், அதன் தீவிரம் எப்படியிருக்கும்?’’

‘‘இரண்டாவது அலையில், முதல் அலையைவிட பத்து மடங்கு அதிக நோயாளிகளைப் பார்த்தோம். நோயாளிகள் மருத்துவமனைக்கு வரும்போதே மூச்சுத்திணறல் உள்ளிட்ட தீவிர பாதிப்புகளுடன் வந்தார்கள். இந்தத் தீவிர பாதிப்புக்கு கிருமியின் உருமாற்றம் காரணமா அல்லது நோயாளிகள் தாமதமாக வந்தது காரணமா என்கிற ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கின்றன. தற்போது ‘டெல்டா ப்ளஸ்’ என்ற பெயரில் உருமாறியிருக்கும் இந்த வைரஸ், மிக வேகமாகப் பரவக்கூடியது. மூன்றாவது அலை வந்தால், இதன் பரவும் வேகம் இரண்டாவது அலையைவிடவும் அதிகமாக இருக்கும். மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.’’

‘‘மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்கிறார்களே... உண்மையா?’’

‘‘குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் நம்மிடம் இல்லை. அது ஒரு கணிப்புதான். ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு மாஸ்க் அணிவிப்பதை அதிகாரபூர்வமாக அறிவுறுத்தவில்லை. தடுப்பூசியால் உருவாகும் பாதுகாப்பு இல்லாததாலும், மாஸ்க் அணியாததாலும்தான் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் என்று சொல்லப்படுகிறது. முதல் அலையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அதிகம் பார்க்கவில்லை; அவர்களுக்குப் பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை. இரண்டாவது அலையில், வைரஸின் உருமாற்றம் காரணமாக வேகமாகப் பரவி, குழந்தைகளையும் பாதித்தது. ஆனால், குழந்தைகளுக்கு மிகக்குறைவான அறிகுறிகளே இருந்தன. இப்போது இந்த வைரஸ் மேலும் மேலும் உருமாறிக்கொண்டிருப்பதால், மூன்றாவது அலையில் அதன் தீவிரம் வேறு மாதிரி இருக்கக்கூடும். அதற்காகத்தான் இப்போதே குழந்தைகளுக்கான மருத்துவமனைகளையும், படுக்கைகளையும் தயார்நிலையில் வைக்கத் தொடங்கியிருக்கிறோம். பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அளவுக்கு நம்மூரில் குழந்தைகளுக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை. குழந்தைகளுக்கான சிகிச்சையும் பெரியவர்களுக்கான சிகிச்சையும் வேறுபட்டவை. குழந்தைகள்நல சிகிச்சையில் பயிற்சி எடுத்தவர்களால் மட்டுமே அவர்களை கவனிக்க முடியும். அதற்கு இப்போதிருந்தே தயாரக வேண்டியது அவசியம்.

கோவிட் பாதித்த பெரியவர்களை ஐசோலேஷன் வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிப்போம். அந்த வார்டுக்குள் உறவினர் யாருக்கும் அனுமதியில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வோரும் இப்படித்தான்... யாரையும் அனுமதிக்கக் கூடாது. மூன்றாவது அலையில் ஒருவேளை குழந்தைகள் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டால் குழந்தைகளைத் தனிமையில் விட முடியாதே... அதற்குப் பெரியவர்கள் தயாராக வேண்டும். எனவே, பெரியவர்கள் அனைவரும் இப்போதே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.’’

கொரோனா மூன்றாம் அலை... “குழந்தைகளைத் தாக்கும் என்பதற்கு ஆதாரம் இல்லை!”

‘‘கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக்... எது சிறந்தது?’’

‘‘இந்த மூன்று வகையான தடுப்பூசிகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த ஆராய்ச்சிகள் மிகக் குறுகிய காலத்தில் நடத்தப்பட்டவை. எந்தத் தடுப்பூசியும் 100 சதவிகிதம் பாதுகாப்பு தராது. அதனால், இந்த மூன்றில் ‘இதுதான் சிறந்தது’ என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. எது கிடைக்கிறதோ அதைப் போட்டுக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒருமுறை தடுப்பூசி போட்டால், அது ஆயுள் முழுக்க பாதுகாப்பு தரப்போவதில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு 9 முதல் 12 மாதங்களுக்கு அதன் பாதுகாப்பு நீடிக்கலாம். பிறகு ஆன்டிபாடி குறைய வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அதனால், அதன் பிறகு பூஸ்டர் டோஸும் தேவைப்படலாம். பூஸ்டர் தேவையா என்பது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒருவேளை மூன்றாவது டோஸான பூஸ்டர் தேவைப்படலாம் என்ற நிலையில், அதற்கான திட்டமிடலை இப்போதே தொடங்க வேண்டும்.’’

‘‘கொரோனா அலை எப்போது ஓயும்?’’

‘‘தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் என்று வந்தால் மட்டும்தான் அதை உறுதியாகச் சொல்ல முடியும். இனிமேல் அலையே வராது என்ற நிலையை எட்ட பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போட வேண்டும். பலரும் தொற்றுக்குள்ளாகி நோய் எதிர்ப்பாற்றல் வந்திருக்க வேண்டும். புதிதாகக் கிளம்பியுள்ள டெல்டா ப்ளஸ் வைரஸுக்கு இப்போதுள்ள தடுப்பூசிகள் பாதுகாப்பு தராது என்றும் சொல்லப்படுகிறது. அதற்கேற்ப தடுப்பூசிகளையும் நாம் மாற்ற வேண்டும். கோவிட் வைரஸ் இனி நம்முடனேயே தங்கிவிடக்கூடும். பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், அதன் வீரியத்திலிருந்து தப்பிக்கலாம்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு